தமிழகத்தின் மாவட்டங்களில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு பாதியாகக் குறைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை திங்கள்கிழமை முதல் (பிப்ரவரி 27) அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் தேவையின் அளவு 11,500 மெகாவாட்டில் இருந்து 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 8 ஆயிரத்து 500 மெகாவாட் தான்.
இதனால், சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்சார கட்டுப்பாடு முறைகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு மணிநேரமும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் மின்வெட்டு அமலில் உள்ளது.
இந்த மின்வெட்டால் தொழிற்கூடங்கள் உற்பத்தி பாதிப்பை கடுமையாகச் சந்தித்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்வெட்டின் அளவைச் சீராக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்வெட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
இதுகுறித்து, வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மின்தட்டுப்பாட்டுப் பிரச்னையை எதிர்கொள்வதற்காக பல்வேறு உத்திகளை மின் உபயோகிப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னை குறித்துத் தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து வருகிறது. எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரிலும் அவற்றைச் செயல்படுத்தும் வழிவகைகளைக் கொண்டும் சில மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
=> தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின் வெட்டு
=> சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின்தடை
=> மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணி நேர மின்வெட்டு
=> வணிகப் பயனீட்டாளர்களுக்கு மாலை உச்ச நேர (மாலை 6 முதல் இரவு 10 வரை) மின் பயனீட்டுக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
இந்த மின்கட்டுப்பாடு முறைகள் தேவைக்கேற்றபடி அமல்படுத்தப்படும். மின் தேவையின் இடைவெளியைப் பொறுத்து மின் வெட்டின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.
பள்ளிகளில் தேர்வு:
உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் என்பதால், அந்த நேரங்களில் முடிந்த அளவுக்குத் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை:
மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு மண்டலம் வாரியாக வாரத்தில் ஒரு நாள் மின்சார விடுமுறை விடப்படுகிறது. அதாவது, அந்த நாள் முழுவதும் அந்தப் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது. மார்ச் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
தகவல்:
தினமணி |