சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 63வது செயற்குழு கூட்டம் கடந்த 17.02.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் சகோ. எம்.என்.முஹம்மது ஷமீம் இல்லத்தில் நடந்தேறியது.
கூட்டத்திற்கு மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் அபூபக்கர் தலைமை ஏற்க , சகோ.எம்.ஐ.அப்துல் பாஸித் இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது. இக் கூட்டத்தின் தலைவர் நல்ல பல கருத்துகளை உறுப்பினர்களுக்கு சுருக்கமான அறிவுரையாக தர, தொடர்ந்து வரவேற்புறையை சகோ. சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்து முஹம்மது சாகிபு நிகழ்த்தினார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்றத்தின் தலைவர் சகோ. குளம். அஹமது முஹிய்யதீன் நாம் ஆற்றவேண்டிய பணிகளையும் இக்ராவின் தொய்வில்லா சேவைகளையும் பாராட்டிப் பேசியதோடு சந்தாவின் அவசியத்தையும் எடுத்துக்கூறி, புதியதாக பணிநிமித்தம் வந்துள்ள நம் காயல் சகோதரர்களை சந்தித்து அவர்களை நம் மன்றத்தில் நம்மோடு இணைந்து சேவையாற்ற அழைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.
அதனை தொடர்ந்து பேசிய மன்ற செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் புதியதாக பணிநிமித்தம் மக்கா வந்துள்ள நம் காயல் சகோதரர்களை ஏற்கனவே சந்தித்து இதுபற்றி எடுத்து கூறியுள்ளோம் மேலும் ஜித்தா மற்றும் மதீனா, யான்பு நண்பர்களையும் நாம் சந்திக்க முயற்சி செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம் என்றும் இம்மன்றம் முழுக்க முழுக்க உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகள் கொண்டே இதுவரை தொய்வில்லா பல சேவைகளைச் செய்துள்ளது என்பதனையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பேசி நிறைவு செய்தார்.
மன்றத்தின் சேவைகள் தொய்வின்றி நடைபெற முதுகெலும்பே சந்தா தான் எனவே அதனை தாமதம் இனறி வழங்கிட அனைத்து உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோளை அங்கே முன்வைத்தார் மன்ற செயலாளர் சகோ.சட்னி செய்யத் மீரான்.
நிதி நிலை:
நிதி நிலை அறிக்கையை சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள் போன்ற விபரங்களைப்பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
மருத்துவ உதவிகள்:
இம்மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் அபூபக்கர் முன்னிலையில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட பின் விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் ஜமாத் பரிந்துரையின்படி வந்த கடிதம் ஏற்கப்பட்டு புற்று நோயால் அவதியுறும் மூவருக்கும், இருதய அறுவை சிகிச்சை என ஒருவருக்கும் ஆக நான்கு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பாராட்டு:
தாயகத்திலிருந்து வந்திருந்த செய்யிதினா இமாம் பிலால் பள்ளி வாசலின் நிர்வாகியும், KSC செயலாளர் மற்றும் இக்ரா செயற்குழு உறுப்பினருமான ஜனாப் ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்குதம்பி அவர்கள் மற்றும் திருநெல்வேலி தம்பி மெடிக்கல்ஸ் ஜனாப் ஹாஜி வி.எஸ்.ஹஸன் அவர்கள், பணிநிமித்தம் வந்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் சகோ.நூகு ஜலீல் அவர்கள் இந்த செயற்குழுவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்து கொண்டார்கள்.
இக்ரா ஆற்றிவரும் உன்னத சேவைகளையும், ஆண்டு தோறும் நடத்தப்படும் 'சந்தியுங்கள் மாநிலத்தின் முதன் மாணவரை' நிகழ்ச்சியின் போது நகரின் சாதனை மாணவ-மாணவியர் நம் காயல் நகர பள்ளியில் பயின்று வருபவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் காரணம் அதன் அணுகுமுறை இவைகளை விபரமாக தந்த பேராசிரியர் 'இம்மன்றம் ஆற்றிவரும் நல்ல பணிகளையும், இக்ராவின் வெற்றிக்கு நிச்சயம் இது போன்ற அனைத்து உலக காயல் நற்பணி மன்றங்களும் ஓர் காரணம் என்றால் அது மிகையாகாது' என்றும் பெருமிதம் கொண்டார்.
தம்பி மெடிக்கல்ஸ் ஜனாப் ஹாஜி வி.எஸ்.ஹஸன் அவர்கள் இந்த மன்றத்தின் சேவைகள் சொல்லித் தெரிவதில்லை என்றும் கே.எம்.டி. மருத்துவமனைக்கு 'அல்ஹரமைன்' என்ற பெயரில் ஒரு தனிகட்டிடத்தை கட்டித்தந்ததையும் இன்னும் பல உதவிகளையும்; இம்மன்றம் செய்துவருவதை நம்மக்கள் வெகுவாகப் பாராட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல் நிறைய ஏழைகளின் துஆக்களும் உங்களுக்கு கிடைக்கிறது எனவே உங்கள் சேவை தங்கு தடையின்றி தொடர்ந்து செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள' என புகழாரம் சூட்டினார்.
அதன்பின் நம் காயல் நலன் குறித்த அனைத்து உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கு பிறகு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. எங்கள் ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ.எம்.எம்.மூஸா சாகிபு ஜித்தா தமிழ் மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கும அனைத்து தமிழர் நலம்காண சேவைகள் பல செய்திட பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
2. ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் தொய்வில்லா பணிகளை நமது மக்களுக்கு தொடர்ந்து செய்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்களை இம்மன்றம் தெரிவிக்கின்றது.
3. எமது மன்றத்தின் இனிய பத்தாம் ஆண்டு துவக்க விழா, 27 வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை துவங்கி மாலை வரை குடும்ப சங்கமம் நிகழ்ச்சியாக குழந்தைகள், பெரியவர்கள்,பொழுது போக்கு, விளையாட்டு போட்டிகள்,அறிவுச்சார் போட்டிகள் நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டு இந்த கூட்ட ஏற்பாடுகளை முறைப்படி நடாத்தகுழு ஒன்று அமைக்கப்பட்டது. கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறியத்தரப்படும்.இந்த இனிய நிகழ்வில் அனைத்து உறுப்பினர்கள்,காயல் நண்பர்கள்,சகோதரர்கள் யாவரும் மற்றும் குடும்ப சகிதம் அனைவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டபடுகின்றது.
புதிதாய் மகள் வழி பேத்தியை கண்டு அப்பாவான சகோ. எஸ்.எஸ். ஜாபர் சாதிக் அனுசரணையுடன் இரவு சிறப்பான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இறுதியாக அவரே தொடர்ந்து நன்றி நவில பின்னர் சகோ. ஹாபிழ்.எம.ஏ.சி.ஷா மீரான் சாகிபு 'துஆ' பிராத்தனையுடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவுப் பெற்றது அல்ஹம்து லில்லாஹ்.
சகோ. எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.சட்னை எஸ்.ஏ. முஹம்மது உமர், சகோ.எல்.எஸ்.செய்யது முஹம்மது சாலிஹ், சகோ.எம்.எஸ்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல்:
எஸ்.ஹெச். அப்துல் காதர்,
துணை செயலாளர்,
புகைப்பட உதவி:
எஸ்.எம்.ஐ.செய்து முஹம்மது சாகிபு,
காயல் நல மன்றம், ஜித்தா.
|