அரசிடமிருந்து வரிவிலக்கு சலுகை பெறப்பட்ட பின்னர், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைக் கல்வி பயிலும் ஏழை மாணவ-மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க செயல்திட்டம் வகுக்கப்படும் என, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 12.02.2012 அன்று இரவு 07.15மணியளவில், இக்ராஃ தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தலைமையில், இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது. ஹாஜி ஏ.ஆர்.இக்பால், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற செயலர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.கூட்டத் தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி டாக்டர் இத்ரீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ்முஹம்மத் வாசித்து, அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்து விளக்கிப் பேசினார்.
சாதனை மாணவர் பரிசுப்பட்டியல்:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து இக்ராஃ கல்விச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வரும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில், சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் பரிசு வகைகள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் நகரின் அனைத்துப் பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டு, அப்பட்டியலை பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் பார்வைக்காக வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
இறுதி செய்யப்பட்ட பரிசுப்பட்டியல், அப்பட்டியலின்படி இதுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட பரிசு வகைகள், அவற்றை வழங்க ஒப்புக்கொண்டவர்கள் குறித்த முழு விபரத்தை, இக்ராஃ தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் கூட்டத்தில் வாசித்து விளக்கினார்.
இக்ராஃவின் பரிசுப் பட்டியல் அடிப்படையில், ஒரே மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெறும் நிலை ஏற்பட்டால், அப்பரிசுகளில் கூடுதல் தொகையளவைக் கொண்ட ஒரே பரிசு மட்டும் அம்மாணவருக்கு வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் அவரது அனைத்து சாதனைகள் குறித்த விபரங்களையும், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன் மாணவரை” நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு அறியத்தரப்படும் என்றும், இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தெரிவித்தார்.
ஜகாத் நிதியைப் பெறல்:
அதனைத் தொடர்ந்து பேசிய இக்ராஃ நிர்வாகி தர்வேஷ் முஹம்மது, ஜகாத் நிதியிலிருந்து இக்ராஃவின் கல்விப் பணிக்காக சிலரால் தொகை அனுப்ப விருப்பம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இக்ராஃவுக்கு வரி விலக்கு சலுகையளிக்கும் 12 A வசதியையும், நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு சலுகையளிக்கும் 80 G வசதியையும் பெற இக்ராஃ சார்பில் Auditor மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வசதிகள் - குறைந்தபட்சம் 12 A வசதி கிடைக்கப் பெற்றவுடன் அவ்வகை நிதிகள் இக்ராஃவின் கணக்கில் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை:
அடுத்து தற்போது இக்ராஃ வழங்கி வரும் உதவித்தொகை முறைகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. மாணவர்கள் பெரும்பாலும் பொறியியல் உள்ளிட்ட தொழில் முறை படிப்புக்கு சென்று விடுவதால் கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களின் விண்ணப்பங்கள் மிகக் குறைவாகவே வருவதாலும், மாணவிகளின் விண்ணப்பங்கள் மூன்றில் இரண்டு மடங்கு இருப்பதாலும் மாணவிகளுக்கு ஒதுக்கீட்டை குறைத்து மாணவர்களுக்கு கூடுதலாக உதவித்தொகையை வழங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது.
நகரில் அனைவரையும் பட்டதாரியாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இக்ராஃ துவக்கப்பட்டதாலும், பெண்கள் உயர் கல்வி கற்றால்தான் குறைந்த பட்சம் எதிர்வரும் காலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவின் முக்கியத்துவம் குறித்து போதிக்கவியலும் என்றும், இனி வருங்காலங்களில் மாணவர்களுக்கு கூடுதலாக நிதியளிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்றும் கருத்து கூறப்பட்டது.
உதவித்தொகை மறுபரிசீலனை:
மேலும் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களது மதிப்பெண் பட்டியல் பெறப்படுகிறதா என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்வாகி, " இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவ-மாணவியர் தமது படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்திலோ அல்லது பல பாடங்களிலோ தேர்ச்சி பெறத் தவறியிருந்தால், அவர்கள் அப்பாடத்தை (arrears) மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களது அடுத்த ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
ஒருவேளை அவர்கள் படிப்பில் ஆர்வமில்லா நிலையில்; தேர்ச்சி பெறாத பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பெறத் தவறினால் அவருக்கான உதவித்தொகையை நிறுத்தி, தகுதியுள்ள இதர மாணவ-மாணவியருக்கு அத்தொகையை வழங்க அந்தந்த நேரங்களில் நிர்வாகிகள் பரிசீலித்து முடிவெடுப்பர் என்றும், உதவித்தொகை பெறும் மாணவ-மாணவியரிடம் ஒழுக்கக் குறைவான செயல்பாடுகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் உதவித்தொகை மறுபரிசீலனையின்றி உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொழில்முறைக் கல்விக்கும் உதவித்தொகை:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை படிப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கும் இக்ராஃ நிதியுதவி அளிக்கலாமே என்ற உறுப்பினரின் கருத்துக்கு பதிலளித்த நிர்வாகி, வரிச்சலுகை 12 A , 80 G வசதிகள் பெறப்பட்ட பின்னர்,முறையாக நிதியாதாரத்தைப் பெருக்கி, அதற்கென தனி செயல்திட்டம் வகுத்து உதவித்தொகை வழங்கலாம் எனவும், தற்போது இக்ராஃ வுக்கு கிடைக்கப்பெறும் ஜகாத் நிதி அந்த அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகம்:
இக்ராஃவின் பள்ளிச் சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் செயலாற்ற வேண்டிய முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருட்கள் தேவைப்படும் மாணவ-மாணவியர் இவ்வாண்டு முதல் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியரிடம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்களால் இறுதிசெய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை அந்தந்தப் பள்ளிகளிலிருந்து பெற்று, அப்பட்டியலைஇக்ராஃ பரிசீலித்து பயனாளிகள் பட்டியலை இறுதி செய்யவும், இச்செயல்திட்டத்தை நெறிப்படுத்துவதற்காக,
(1) ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது,
(2) கே.எம்.டி.சுலைமான்,
(3) ஏ.தர்வேஷ் முஹம்மத்,
(4) ஆசிரியர் எஸ்.எம். அஹ்மத் சுலைமான்
ஆகியோரடங்கிய நால்வர் குழுவை நியமித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மன்றங்களின் மருத்துவம் - சிறுதொழில் துறைகளுக்கும் கூட்டமைப்பு:
கல்வித்துறையைப் போல மருத்துவத் துறைக்கும், (இக்ராஃ நிர்வாகத்தைப் போன்று) ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என பல்வேறு காயல் நல மன்ற அங்கத்தினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இக்ராஃவின் பெயரில் அதுபோன்ற செயல்திட்டத்தை செயல்படுத்துவதை விட, இதே போன்ற ஒரு கட்டமைப்பை புதிதாக உருவாக்கலாம் எனவும், அதுவரை இக்ராஃ வளாகத்திலேயே மருத்துவம் - சிறுதொழில், அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எத்தி வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கென தனியறையை நிர்ணயித்து, அதற்கென தனி அலுவலர் உள்ளிட்ட தேவைப்படும் கட்டமைப்புகளை - உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் நிறுவி செயல்படுத்தலாம் எனவும், இச்செயல் திட்டம் சீராக செயல்படும் வரை இக்ராஃ நிர்வாகி அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மன்றங்களிடம் கருத்து கேட்டறிந்து இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார விழிப்புணர்வு:
அடுத்து நகரில் நல்ல சுகாதார சுற்றுச்சூழல் நிலவினாலேயே மாணவ-மாணவியர் தம் கல்வியை சிறப்புற கற்றிட வாய்ப்பேற்படும் என்பதாலும்,சுகாதாரத்தை போதிப்பதும் கல்விச் சேவையே என்பதாலும், சென்ற வருடம் இக்ராஃ நகரில் மேற்கொண்ட Cancer Survey - யின் போது பங்கு கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் தன்னார்வலர்கள் (Lady Volunteers) இது போன்ற பணிகளில் ஈடுபட ஆர்வம் தெரிவித்து வருவதாலும் அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் - குறிப்பாக மாணவ-மாணவியருக்கும் சுகாதார விழிப்புணர்வூட்டும் வகையில் பிரசுரம் அச்சிட்டு விநியோகிக்கலாம் என்றும் இக்ராஃ நிர்வாகி தர்வேஷ் முஹம்மது முன் வைத்த யோசனையை உறுப்பினர்கள் வரவேற்க, அதன்படியே சுகாதாரத்தை போதிக்கும்;வலியுறுத்தும் பொதுப் பிரசுரங்களை இக்ராஃ மூலம் வெளியிடலாம் என தீர்மானிக்கப்பட்டது.
கல்வி ஒளிபரப்பு:
மேலும் 10ஆம், 12ஆம் வகுப்பு பயிலும் காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மாணவ-மாணவியர் நகர - மாவட்ட - மாநில அளவில் சாதனை மதிப்பெண்கள் பெறல், தாழ்நிலை மாணவ-மாணவியர் தேர்ச்சி பெறல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, வழமை போல இவ்வாண்டும் கல்வி ஒளிபரப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக புதிதாக வீடியோ ஒளிப்பதிவுப் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் உள்ளூர் கேபிள் டிவியில் அவை ஒளிபரப்பப்படும் என்றும் இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
இந்த கல்வி ஒளிபரப்புக்கான ஒளிப்பதிவு வகைக்காக முப்பதாயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை எவ்வாறு சமாளிப்பது என்றும் இக்ராஃ நிர்வாகி கேள்வியெழுப்பினார். உடனடியாக குறுக்கிட்டுப் பேசிய இக்ராஃ தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இவ்வகைக்காக தமது பங்களிப்பைத் தெரிவிக்குமாறு கோரி ஒரு வெள்ளைக் காகிதத்தை சுற்றுக்கு விட்டார். நிறைவில்,ரூ.16,300 தொகை கூட்டத்திலேயே சேகரிக்கப்பட்டது.
இதற்காக இக்ராஃ தலைவருக்கும், நிதியுதவி வழங்கியவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மின்தடை நேரத்தை முறைப்படுத்த கோரிக்கை:
மாணவ-மாணவியருக்கு ஆண்டிறுதித் தேர்வுகள் நெருங்கும் இக்காலகட்டத்தில், நேரவரையறையின்றி பல மணி நேரங்கள் தினமும் மின்தடை செய்யப்பட்டு வருவதால், அவர்களின் படிப்பு பெருமளவில் பாதிக்கும் என்று கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இக்குறையைப் போக்கி, இயன்றளவுக்கு மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பில்லாத வகையில் மின்தடை நேரங்களை வரையறுத்து அறிவிக்குமாறு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மின்வாரியத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இக்ராஃவின் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பவும், அவற்றின் நகலை, வட்டார மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட நிறைவு:
இறுதியாக இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தீர்மானங்களை தொகுத்து வாசித்தார். இக்ராஃசெயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது நன்றி கூற, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் இரவு பத்து மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறி்க்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பு அலுவலர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |