“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பில், சர்ச்சைக்குரிய புதினமொன்றை (நாவல்) எழுதிய எழுத்தாளர் மேடையில் தெரிவித்த கருத்துக்களுக்கு, காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விபரம் பின்வருமாறு:-
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி கேளரங்கில், இம்மாதம் 10 மற்றும் 11ஆம்தேதிகளில், “சமகால இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்கள் தம் படைப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களுமான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், டி.வி.எஸ்.ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கருத்தரங்கில் பார்வையாளர்கள் வரிசையில் வீற்றிருந்தனர்.
“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பில் புதினமெழுதிய - நெல்லை மாவட்டம் கலங்காதகண்டி கிராமத்தைச் சேர்ந்த அன்வர் பாலசிங்கம், இரண்டாம் நாள் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஓரமர்வில் சிறப்பழைப்பாளராக கலந்துகொண்டு, தனது புதினம் குறித்து பின்வருமாறு விளக்கிப் பேசினார்:-
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை படித்துணர்ந்தவர்கள் மட்டுமே எழுத்துத் துறையில் தம் படைப்புகளைத் தருகின்றனர்... ஆனால் நான் எந்த எழுத்தாளரின் புத்தகத்தையும் படித்ததில்லை...
“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பிலான எனது இந்த புதினம் ஒரு கதையல்ல! மாறாக, பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவும் கிராமப்புற - தாழ்த்தப்பட்ட மக்களின் மனக்குமுறல்களின் பிரதிபலிப்பே இந்த நூல்...
நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 1993ஆம் ஆண்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியவன்... அன்று நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டபோது என்னை அள்ளியணைத்த கைகள், பிற்காலத்திலும் தொடர்ந்து என்னை அரவணைத்திருந்தால் இந்த நூலே வந்திருக்காது... கசப்பான எனது அனுபவங்களை தகவல்களாக உள்ளடக்கியே இந்த புதினம் உள்ளது...
பூர்விக முஸ்லிம்களாகிய உங்களில் பலர் ஒரு இருநூறு வருடங்களுக்கு முன் இஸ்லாமைத் தழுவிய சமூகமாக இருக்கலாம்... நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன் இஸ்லாமைத் தழுவியவன்... என் மகள் சுமய்யாவுக்கு பழைய ஜாதி அடையாளம் எதுவுமே இருக்காது...
இஸ்லாமைத் தழுவிய காரணத்தால் நான் என் குடும்பத்தில் சந்தித்த உறவிழப்புகள் ஏராளம்... பூர்விக முஸ்லிம்கள் புதியோருடன் திருமண ஒப்பந்தங்கள் செய்துகொள்வதில்லை... வேறு சமூகமாகவே எங்களை நடத்தினர்... அந்த தாங்க முடியாத தருணங்களில் என்னை அரவணைத்திருக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் அதை சரிவர செய்யத் தவறியதன் விளைவே இந்த புதினம் படைக்கப்பட்டது...
இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அடுத்த பேச்சாளர் பேச அழைக்கப்பட்டார். அப்போது, காயல்பட்டினத்தைச் சார்ந்த குழுவினரும், இதர இலக்கிய ஆர்வலர்கள் சிலரும், ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்த பின்னர் கேள்வி நேரம் வழங்கப்படும்போது, இந்த பேச்சாளர் பேசி முடித்த பின்னர் மட்டும் கேள்வி நேரம் அளிக்கப்படாதது கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் ஒருசார்பு மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அவர்களின் தீவிர ஆட்சேபணையைத் தொடர்ந்து, எழுத்தாளர் அன்வர் பாலசிங்கத்தின் உரை குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. எழுத்தாளர் சாளை பஷீர் மேடையேறியும், மற்றவர்கள் மேடைக்கு முன்னின்றவாறும் தமது மறுப்பை பின்வருமாறு தெரிவித்தனர்:-
இந்த புதினத்தில் சமூகத்தை குற்றஞ்சாட்டிய அன்வர் பாலசிங்கம், மேடையில் எச்.ஜி.ரசூல், களந்தை பீர் முஹம்மத் ஆகிய எழுத்தாளர்களையும் குற்றஞ்சாட்டினார்... அதற்கு அந்த எழுத்தாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்... நான் முதற்குற்றச்சாட்டுக்கு மட்டும் விளக்கம் தருகிறேன்...
இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஜாதி மனப்பான்மை எங்கிருந்து புகுந்தது என்பதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்க வேண்டும்... சூஃபீ ஞானிகள், சமயப் பரப்புரையாளர்கள், வணிகர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரால் இந்தியாவிற்குள் இஸ்லாம் பரவியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இதில் சூஃபீ ஞானிகளின் பங்களிப்பு அதிகம். அவர்கள் இந்திய கிராமங்களுக்குள் வரும்போது ஏகத்துவம், சமத்துவம் என்ற செய்திகளுடன் வந்தனர்... இங்கு ஏற்கனவே சைவ - வைணவ மோதல்களில் சலிப்புற்றிருந்த மக்களை ஏக இறைக்கோட்பாடு பெரிதும் கவர்ந்தது. வந்தவர்கள், சமத்துவத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டியதால், அங்கிருந்த மக்கள் கூட்டங்கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அவர்களுக்கு - பசித்த வயிற்றுக்கு உணவும், நோயுற்ற உடலுக்கும், மனதுக்கும் மருந்திட்டனர் அந்த பரப்புரையாளர்கள்.
கிறிஸ்துவ மிஷினரிகளைப் போல தொடர் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை... சூஃபீ ஞானிகள் தமது பணி முடிந்தவுடன் அடுத்தடுத்த கிராமங்களுக்குச் சென்றுவிடுவர்... இதனால், ஏற்கனவே சாதீய அடையாளங்களுடன் இந்து மதத்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்த அம்மக்கள், இஸ்லாமைத் தழுவிய பிறகும் - பரப்புரையாளர்களின் தொடர்நடவடிக்கைகள் இல்லாமற்போனதன் விளைவாக தமது பழைய சாதீய அடையாளங்களுடனேயே வாழத்துவங்கினர். அதன் விளைவுதான் இன்று நாம் காணும் சாதீய மனப்போக்கு ஆகும்.
இவ்வாறு சாளை பஷீர் விளக்கமளித்தார்.
எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் ஆதங்கப்படுவது போல இஸ்லாமைத் தழுவிய மக்களை பூர்விக முஸ்லிம்கள் அரவணைக்கத் தவறியிருந்தால் அது மாபெரும் குற்றம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை...
எழுத்தாளர் சொல்லும் நிகழ்வுகள் அவர் பகுதியில் நடந்திருக்கலாம்... ஆனால் அதுவே எல்லாப்பகுதியிலும் நடப்பதாகக் கருதிவிட இந்த புதினம் வாய்ப்பளிக்குமானால், அது குற்றமே! காரணம், இன்று இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவும் மக்களை முஸ்லிம்கள் பெரும்பாலும் அரவணைப்பதில் குறை வைப்பதில்லை...
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக வாழ்க்கை நெறி!! இந்த மார்க்கத்தில் இணைந்துதான் ஆக வேண்டுமென யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை... விரும்புவோர் ஏற்கலாம்... விரும்புவோர் மறுக்கலாம்... ஆனால், ஏற்றவர்கள் இஸ்லாம் கூறிய முறைப்படிதான் வாழ வேண்டும்...
பல அம்சங்களை உட்பொதிந்த இந்த வாழ்க்கை நெறியில் அவரவருக்குப் பிடித்தமான ஓரம்சத்திற்காகவோ, பல அம்சங்களுக்காகவோ இந்த மார்க்கத்தைத் தழுவுகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு இறைவன் இடும் கட்டளை, இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்பதாகும்.
திருமண ஒப்பந்தங்களைப் பொருத்த வரை, அது அவரவர் மனங்களைப் பொருத்ததே! இதில் யாரையும் குற்றங்கூற இயலாது... எழுத்தாளர் எதிர்பார்த்தபடி அவர் புறத்தில் வேண்டுமானால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறாதிருந்திருக்கலாம்... ஆனால் மொத்தத்தில் பல இடங்களில் அதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது... நாங்களே கூட அதுபோன்ற பல திருமணங்களை நடத்தியும், பல திருமணங்களில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டும் இருந்திருக்கிறோம்...
எழுத்தாளர் சொல்வது போல இருநூறு வருடத்திற்கு முன்பு வந்தவர்களான எங்களுக்கு இன்று ஜாதி அடையாளமில்லை... அவர் மகள் சுமய்யாவுக்கும் அந்த அடையாளம் பெரும்பாலும் இருக்கப்போவதில்லை... இவையனைத்தும் ஒரு தலைமுறை மாற்றமே! எடுத்த எடுப்பிலேயே எல்லோரது மனநிலையும் மாற வேண்டும் என்பது பொருளற்ற எதிர்பார்ப்பு!
மொத்தத்தில் எழுத்தாளர் சொல்வது போல் குற்றங்குறைகள் இருப்பின் அது அந்தந்த பகுதி மக்களின் குறை மட்டுமே! அது இஸ்லாமின் குறையோ, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் குறையோ அல்ல!
இவ்வாறு காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிறகு, அவர்கள் எழுத்தாளர் அன்வர் பாலசிங்கத்தை தனிப்பட்ட முறையிலும் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். காயல்பட்டினத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்து விடைபெற்றனர்.
இச்சந்திப்பின்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் இழிவை எதிர்த்து இஸ்லாமைத் தழுவிய கொடிக்கால் செல்லப்பா என்ற ஷேக் அப்துல்லாஹ் உடனிருந்தார்.
[கூடுதல் வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 14:51/23.02.2012] |