கூடங்குளம் அணுமின் நிலையப்பாதுகாப்பு குறித்த மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்று முதல்வர்
ஜெ.ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தது. அது குறித்து வெளியிடப்பபட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 4.2.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே இது
குறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து, மாநில அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்கும்
வகையில், மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் 9.2.2012 அன்று மாநில அரசால், அணுமின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா
பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் திரு.டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும்
இயக்குநர் டாக்டர் எஸ். இனியன், திரு. எல்.என். விஜயராகவன், இ.ஆ.ப. (ஒய்வு) ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, கூடங்குளம் பகுதிக்கு நேரில் சென்று கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி
மக்களிடையே இது குறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்து ஆய்வு செய்து இன்று (28.2.2012) தலைமைச்
செயலகத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம் வல்லுநர் குழு தனது அறிக்கையை வழங்கியது.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் உடனிருந்தார்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம், சென்னை-9.
|