காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், மாணவர்களின் மார்க்க அறிவுத் திறனை வளர்க்கும் நோக்குடன், மாணவர் மார்க்க திறனறிதல் வினாடி-வினா போட்டி 28.02.2012 அன்று, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலையில் நடத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.
மாணவர்கள் மார்க்க ஒழுக்கக் கல்வியறிவு பெறுவதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசிய அவர், தற்கால மாணவர்களிடையே மார்க்க ஒழுக்க விழிப்புணர்வு குறைந்து வருவதாக வருத்தப்பட்டதுடன், அந்நிலை மாற வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் துவங்கிய மார்க்கத் திறனறியும் வினாடி-வினா இறுதிப் போட்டி, 06 முதல் 08 வரையுள்ள வகுப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு பிரிவு, 09 முதல் 12 வரையுள்ள வகுப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முன்னதாக, எழுத்துத் தேர்வின் மூலம் இவ்விறுதிப் போட்டிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப்போட்டியில் மாணவர்கள் நான்கு குழுக்களாக பங்கேற்றனர். ஆறு சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
முதல் பிரிவு போட்டியில், எம்.ஏ.சி.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஸத்தாம் ஹுஸைன் ஆகியோரடங்கிய அணி முதலிடத்தையும், ஹபீப் முஹம்மத், முஹம்மத் யூனுஸ் ஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
இரண்டாம் பிரிவு போட்டியில், ஹாஃபிழ் பி.ஏ.உக்காஷா, ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.ஜிந்தா இஃப்ஹாமுத்தீன் ஆகியோரடங்கிய அணி முதலிடத்தையும், ஹாஃபிழ் எம்.எச்.முஹம்மத் நூஹ் இம்ரான், எம்.எச்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
பள்ளியின் முதுநிலை வணிகவியல் ஆசிரியர் ஸலாஹுத்தீன், ஓவிய ஆசிரியர் மணிகண்டன், கணித ஆசிரியர் ஹனீஃபா ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.
போட்டியை, பள்ளி தலைமையாசிரியரின் வழிகாட்டுதலின் கீழ், பள்ளியின் அரபி மொழியாசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ, ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி ஆகியோர் நடத்தினர். போட்டியில் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |