தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் சேவைகளும் கணனி மயமாக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சேவைகளும் சில தினங்களுக்கு முன் கணனி மயமாக்கப்பட்டு, அங்குள்ள அலுவலர்களுக்கு கணனியையும், மென்பொருளையும் பயன்படுத்தும் முறைகள் குறித்து 3 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
HMS மென்பொருள்:
தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், “மருத்துவமனை மேலாண்மைத் திட்டம் - Hospital Management System (HMS)” என்ற பெயரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அதனுள், மருத்துவமனைகளின் அனைத்து சேவைகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
செய்முறை:
கணனி மயமாக்கப்பட்ட சேவைத்திட்டத்தின் கீழ், மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளி ஒருவர் துவக்கமாக புறநோயாளிகள் பதிவுப் பிரிவில் (Out Patient Registration) தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அங்குள்ள அலுவலர் அவரது பெயர், பாலினம், வயது அகளிட்டவற்றை கணனியிலுள்ள HMS மென்பொருளில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்குவார்.
பின்னர், அந்நோயாளி மருத்துவர் அறைக்குச் சென்று, தனது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். அதிலுள்ள பதிவு எண்ணைக் கொண்டு அவரது விபரப் பக்கத்தை மருத்துவர் திரை முன் வைத்திருப்பார். அவரிடம் தனக்குள்ள நோய் குறித்து தெரிவிக்க வேண்டும். விபரம் கேட்டறிந்த மருத்துவர் அதற்காக அவரளிக்கும் சிகிச்சை முறைகள், அளிக்க விரும்பும் மருந்து - மாத்திரைகள், ஊசி மருந்துகள் அகளிட்டவற்றை HMS மென்பொருளில் பதிவு செய்வார்.
நோயாளியை அகநோயாளியாக (In Patient) அனுமதிக்கும் நிலை ஏற்படின், அது குறித்த விபரங்களையும் மருத்துவர் HMS மென்பொருளில் பதிவு செய்வார்.
பின்னர் அந்நோயாளி புறநோயாளியாக இருந்தால், தனது அடையாள அட்டையை மருந்து - மாத்திரைகள் கொடுக்குமிடத்திலும், ஊசி மருந்து அளிக்குமிடத்திலும் கொடுக்க, அவர்கள் HMS மென்பொருளில் மருத்துவர் அளித்துள்ள மருத்துவக் குறிப்பின் அடிப்படையில் மருந்து - மாத்திரைகளையும், ஊசி மருந்துகளையும் அளிப்பர்.
அவர் அகநோயாளியாக இருந்தால், அகநோயாளிகள் பிரிவில் அவர் தனது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். அவர்கள் மருத்துவரின் குறிப்புகளைப் பார்வையிட்டு, நோயாளியை அகநோயாளியாக அனுமதித்து, அதற்கான சிகிச்சைகளை வழங்குவர்.
நன்மைகள்:
HMS மென்பொருள் மூலம் கணனியில் பதிவு செய்யும் இச்சேவைத் திட்டம் குறித்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் தெரிவித்துள்ளதாவது:-
*** இந்த HMS மென்பொருள் மூலம் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு, ஒருவர் தமிழ்நாட்டிலுள்ள கணனி மயமாக்கப்பட்ட எந்த ஒரு மருத்துவமனையிலும் சென்று தனக்கான மருத்துவ சிகிச்சையை, பழைய மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் சீராகப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் அவர், ஊருக்கு வந்துதான் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இல்லாமற்போகிறது...
*** ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி பதிவேடுகள் வைத்து, ஒவ்வொரு முறையும் எழுதி பாதுகாக்க வேண்டிய நிலை இதனால் தவிர்க்கப்படுகிறது...
*** இம்மருத்துவமனையில் சேவைகள் கணனி மயமாக்கப்படும் முன்பு வரை நோயாளிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் புறநோயாளிகள் பிரிவில் சென்று பதிவு செய்து வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது HMS மென்பொருள் மூலம் வழங்கப்படும் அடையாளச் சீட்டை லேமினேஷன் போன்ற முறைகளில் முறையாகப் பாதுகாத்து நோயாளிகள் கொண்டு வந்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமிராது...
*** HMS மென்பொருள் பயன்பாடு மூலம், ஒரு மருத்துவர், அலுவலர் பணிக்கு வரும் விபரம், அவரது பணி விபரம், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புறநோயாளிகள், அகநோயாளிகள் எண்ணிக்கை, அவர்களில் ஆண்கள் - பெண்களின் தனித்தனி எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் நினைக்கும் நேரத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தால் கண்காணிக்க இயலும்... எனவே, முறைகேடுகள் நடைபெற வாய்ப்பற்றுப் போகிறது...
இவ்வாறு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் தெரிவித்தார்.
நடைமுறை சிக்கல்கள்:
*** கணனி மயமாக்கப்படுவதற்கு முன்பு மருத்துவமனையில் பணியாற்றியவரிடமே கணனி மயமாக்கப்பட்ட மருத்துவ சேவைகளைப் பதிவு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதால், கணனி பயன்படுத்தும் அறிவைப் பெற்றிராத அலுவலர்கள் - குறிப்பாக மருந்து - மாத்திரைகளை வழங்கும் அலுவலர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
*** கணனி மயமாக்கப்படுவதற்கு முன்பு வரை ஒரு நோயாளியின் சீட்டை வாங்கி, அவருக்கான மருந்துகளை உடனுக்குடன் வழங்கிவிட்டு, அடுத்த நோயாளியின் சீட்டை வாங்குவர். இதனால் வேகமாக மக்கள் திரள் குறையும். ஆனால் கணனி மயமாக்கப்பட்ட பின்பு, ஒரு நோயாளியின் சீட்டை வாங்கி, அவருக்கான மருந்துகளை அளித்த பிறகு, அளிக்கப்பட்ட மருந்து - மாத்திரைகள், அவற்றின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்கள் HMS மென்பொருளில் பதிவு செய்த பின்னரே அடுத்த நோயாளியின் சீட்டைப் பெற இயலும்.
இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது. பழைய முறைப்படி சேவைகளைப் பெற்று வந்த நோயாளிகள் பொறுமையிழந்து, அலுவலர்களுடன் கோபிக்கவும், தர்க்கம் செய்யவும் வாய்ப்பேற்படுகிறது. (அலுவலர்கள் புதிதாக கணனியைப் பயன்படுத்துவதால் இந்நிலை அனுதினமும் பலமுறை நிகழ்கிறது.)
*** இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு இம்மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளை நகரின் அனைத்து தரப்பினரும் கூடுதலாக பயன்படுத்தி வரும் நிலையுள்ளது. இவர்களுக்கு வாரந்தோறும் திங்கள், புதன் கிழமைகளில் மருந்து - மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தினங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். இதுபோன்ற சமயங்களில், மருந்துகளை அளிக்கும் அலுவலர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தீர்வு:
*** ஒரு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்களின் எண்ணிக்கை, அலுவலர்களின் எண்ணிக்கையை குறைக்காமல், சரியான அளவில் பணியமர்த்தினால், பணிகளைப் பிரித்து செய்ய வாய்ப்பேற்படும்.
*** புதிதாக கணனியைப் பயன்படுத்தும் அலுவலர்களுக்கு கூடுதல் பயிற்சியை முறையான கால அளவுப்படி அளிக்கலாம்.
இவ்வாறு செய்வதால், HMS மென்பொருள் மூலம் மருத்துவ சேவைகள் நன்னிலையில் நீடிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. |