எலி எப்போது மாட்டும் என பூனை காத்திருக்கிறது! posted byHameed Rifai (Yanbu (KSA))[17 June 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19386
தன்னிலை விளக்கம் கொடுத்து தன்னை நீரூபிக்க முனைந்துள்ள கவுன்சிலர் லுக்மான் அவர்களுக்கு ஒரு சபாஷ்.
அதே நேரத்தில், எடுப்பார் கைப்பிள்ளையாகவோ - பிறரின் பினாமியாகவோ கருத்தோ, கட்டுரையோ எழுத எண்ணமில்லாமல், சுயமாக சிந்திக்கும் நிலையில் இருக்கும் என்னால் சில கேள்விகளை மனதிற்குள் போட்டு புதைக்க இயலாததால் இங்கே கொட்டுகிறேன். திருவாளர் லுக்மான் அவர்கள் இதற்கு பதிலளிப்பார்களாக!
(1) சமீபத்தில் இந்த தளத்தில் வெளியிடப்பட்ட ஆடியோ பதிவு சில நகர்மன்ற உறுப்பினர்களின் உரையாடலைக் கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்பேர்ப்பட்ட கறுப்பாடு உறுப்பினர்களைக் கண்டிக்கவும் கவுன்சிலர் லுக்மான் அவர்கள் தவறவில்லை. அதே நேரத்தில் எங்களை விட - ஊரில் இருக்கும் அனைவரையும் விட மிக அருகில் தினமும் இருந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களுக்கு - அவரது பெயரை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம்?
(2) இந்த ஆடியோ பதிவு, அதனைத் தொடர்ந்து தன்னிலை விளக்கம் என எதிலுமே தொடர்பில்லாதவர் நகர்மன்றத் தலைவி அவர்கள். அப்படியிருக்க, தன்னிலை விளக்கம் என்ற பெயரில் கால் பக்கத்திற்கு கவுன்சிலர்களை பெயர் சொல்லாமல் குற்றம் சாட்டும் நீங்கள், மீதி வரிகள் அனைத்தையும் தலைவி பெயரில் புகழ்மாலை பாடி அர்ச்சனை செய்திருக்கிறீர்களே, இது பொருத்தமானதுதானா?
களவுக்குத் துணியும் கவுன்சிலரைக் கூட நாகரிகம் கருதி பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் தங்களுக்கு, தலைவி மீது அப்படி என்ன கோபமோ?
(3) உண்மையிலேயே இந்த தலைவி தாங்கள் சொல்வது போல் குறைகளைக் கொண்டிருக்கலாம். அதற்கான அவர்களின் விளக்கம் கிடைக்காத வரை இதுகுறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. எனது கேள்வி என்னவெனில், தலைவி மீதான தங்கள் அர்ச்சனையை தனி அறிக்கையாகக் கூட அளித்திருக்கலாமே? தாங்கள் செய்யவில்லையா அல்லது இந்த இணையதளத்தினர் அதற்கு மறுத்தார்களா?
(4) தாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை தங்களது வார்டுக்கு என்னென்ன செய்துள்ளீர்கள் என்று பட்டியலிடச் சொன்னால் சிலவற்றை தாங்கள் பட்டியலிலாம். எனது கேள்வி என்னவெனில், தாங்கள் தங்கள் வார்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டீர்களா? ஆம் என்றால் உங்களை விட சிறந்த கவுன்சிலர் உலகத்திலேயே இருக்க முடியாது. இல்லையென்றால், அது அதுக்கு உரிய காலம் வருமபோது செய்வார்கள் என்று உங்கள் வார்டு மக்களும், நாங்களும் இருக்கவா? அல்லது இது உங்களது நிர்வாகத் திறமையின்மை என்று பிரச்சாரம் செய்யவா? எதை நீங்கள் இது விஷயத்தில் விரும்புகிறீர்களோ, அதை விருப்பத்தை உங்கள் தன்னிலை விளக்கத்திலும் காண்பித்திருக்கலாமே?
(5) தங்கள் வார்டில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் தாங்கள் மட்டுமே செய்தவையா? அல்லது நகர்மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் தலைவியின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டதா?
தலைவியின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது என்றால், தலைவி இது விஷயத்தில் ஒத்துழைத்தார்களா, இல்லையா?
ஒத்துழைத்தார்கள் என்றால், இது அவர்களும், நீங்களும் சேர்ந்து ஊருக்கு செய்த நன்மைகள் இல்லையா? இப்படியிருக்க, தலைவியை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற “தலைவி தலைவலி” தங்களுக்கு என்று ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது??
(7) தங்கள் வார்டில் தங்களுக்காக வாக்களித்த - வாக்களிக்காவிட்டாலும் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களை நம்பியிருக்கிற அனைவரிடமும் தாங்கள் நல்ல பெயரை எடுத்துவிட்டீர்களா? இல்லையென்றால் உங்களை பொறுப்பிற்கு தகுதியில்லாதவர் என்று கூறலாமா?
(8) எடுத்ததற்கெல்லாம் தலைவியை விமர்சிப்பதையே தொடர்கதையாகக் கொண்டுள்ளீர்கள் தாங்கள் என்பதை நான் நன்கறிவேன். எனது கேள்வி என்னவெனில், தங்கள் வார்டைச் சார்ந்த ஒருவர் உறுப்பினர் என்ற அடிப்படையில் தங்களிடம் தெருவில் குடிநீர் குழாய் உடைப்பெடுத்துள்ளது என்று (உதாரணத்திற்கு) ஒரு குறையைத் தெரிவித்தால், தாங்கள் முதலில் செய்ய வேண்டியது:-
(அ) அக்குறை சரியானதுதானா என்பதை நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
(ஆ) அக்குறையை சரி செய்ய வெண்டிய பொறுப்பில் இருக்கும் ஃபிட்டர் அவர்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
(இ) அவர் உடனடியாக களத்தில் ஊழியர்களை இறக்குகிறாரா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
(ஈ) வேலை நடக்கும்போது அது சரியாக நடைபெறுகிறதா என மேற்பார்வையிட வேண்டும்.
(உ) தாங்கள் சொல்லியும் ஃபிட்டர் ஆள் அனுப்பாவிட்டால், திரும்பவும் நினைவூட்ட வேண்டும்.
(ஊ) அதற்குப் பிறகும் நடக்கவில்லையென்றால் நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும்.
(எ) அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், ஆகக் கடைசியாக நகர்மன்றத் தலைவருக்கு தெரிவித்து நடவடிக்கைக்கு முனைய வேண்டும்.
(ஏ) இத்தனையையும் செய்ய முடியாதவர் அல்லது செய்யத் துணியாதவர் இந்த பொறுப்பிற்கு வந்திருக்கக் கூடாது. வந்த பிறகுதான் இப்படி என்றால், இப்போது ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த முறைப்படிதான் தாங்கள் செய்து வருகிறீர்களா? நான் கேள்விப்பட்ட வரை, தங்கள் வார்டில் தாங்களே முன்னின்று செய்து முடிக்கும் அளவிலான ஒரு சிறு குறையை மக்கள் சொன்னால் கூட உடனடியாக தலைவியின் போன் நம்பரைக் கொடுத்து பேசச் சொல்வதாக அறிகிறேன். (இது தாங்கள் மட்டுமல்ல! கிட்டத்தட்ட அனைத்து கவுன்சிலர்களுக்குமே தற்போது இதுதான் வேலையாக உள்ளது என்றும் அறிந்துள்ளேன்) அது உண்மைதானா? உண்மையெனில், தாங்கள் எல்லாம் தங்களின் பிஸினஸ் கெடாமல் பக்குவமாகப் பார்த்துக்கொள்ளலாம். இயன்ற வேலையைக் கூட செய்யாமல் இருக்கலாம். தலைவி மட்டும் எல்லா கவுன்சிலர்களின் சிரமங்களையும் தலையில் போட்டுக்கொள்ள அவர் என்ன தங்கள் அனைவருக்கும் அடிமை சாசனம் எழுதித் தந்துள்ளாரா?
(9) இத்தனையையும் தாண்டி தங்கள் வார்டில் தலைவி அவர்கள் வராமலேயே தாங்களே முன்னின்று நடத்த வேண்டிய பணிகளில் தாங்கள் இயலாமலோ அல்லது வேண்டுமென்றோ வராமல் இருந்தபோது தலைவி அவர்கள் தங்களது வார்டுக்குச் சென்று செய்த பணிகளுக்காக என்றாவது அவர்களை ஒருமுறையேனும் பாராட்டியதுண்டா?
தலைவி ஒன்றும் செய்யவில்லை என்று தன்னிலை விளக்கத்தின் முக்கால் பகுதியில் மூக்கால் அழுது வடித்துள்ளீர்களே? உண்மை அதுதானா? அப்படியானால்,
(அ) அரசு நூலகத்திற்கு அரசு திட்டத்திலிருந்து தொகை பெற்றுத் தந்ததாகக் கூறப்பட்டதே அது?
(ஆ) ஊழல் பேர்வழிகளுக்கு சாதகமாக ஒளித்து மறைத்து விடப்பட்ட ஏலத்தை திறந்த வெளியில் நடத்தியதன் மூலம் நகராட்சிக்கு நல்ல வருமானத்தை ஏற்படுத்தித் தந்ததாக இந்த தளத்தில் செய்து வெளிவந்ததே அது??
(ஒரு லாரி தண்ணீரை கிணற்றிலிருந்து எடுத்து ஒரு வீட்டில் அளிக்க 1,500 ரூபாய் பெறப்படுகிறது என்று அறிகிறேன். ஒரு நாளைக்கு பத்து லோடு எடுத்தாலே ஒருநாள் வருமானம் 15,000 கிடைக்கும் என்றிருக்க, அந்தக் கிணற்றுக்கு ஒரு வருட குத்தகையையும் வெறும் 9,000 ரூபாய்க்கு எடுத்திருந்தார்களே குத்தகைக் காரர்கள்? இதற்கு முன்னிருந்த தலைவர்களோ, வியாபாரம் செய்யும் தாங்களோ, தங்களது வியாபாரத்தில் ஒப்பந்தம் செய்தால் இப்படித்தான் கவலையின்றி ஒப்பந்தம் செய்வீர்களோ?)
(இ) நகராட்சி பேரூந்து நிலையத்திலுள்ள கடைகளை ஏலம் எடுத்து பல காலமாக வாடகை கட்டாமல் இருந்தவர்களை அழைத்துப் பேசி, வாடகையைப் பெற நடவடிக்கை எடுத்தார்களே அது???
(ஈ) குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் நோக்கத்துடன் தாங்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களையும், சென்னையில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவும், தூத்துக்குடியில் கலெக்டரை சந்திக்கவும் அழைத்துச் சென்றார்களே? அது????
இத்தனையும் எனக்குத் தோன்றிய கேள்விகள் மட்டுமே. சகோதரர் லுக்மான் அவர்களே, தங்களை நான் குறைகாண்பதற்காக இக்கேள்விகளைக் கேட்கவிலலை. மாறாக, சம்பந்தமேயில்லாமல் தறுதலைகளை இனங்காட்ட வேண்டிய தன்னிலை விளக்கத்தில் தலைவி புராணம் பாடியுள்ளீர்களே அதுதான் ஏனென்று புரியவில்லை. இது யாரை திருப்பதிப்படுத்த தாங்கள் செய்தது?
கண்ணியத்திற்குரிய தலைவி அவர்களே, தாங்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஊருக்கு உழைக்கத்தான் இந்தப் பொறுப்பில் இருக்கிறீர்கள் என்பது உண்மையானால், இணையதளம் வரை வந்து விட்ட இந்த அறிக்கைக்கு தகுந்த விளக்கம் தந்து உங்களது மானத்தையும், ஊர் மானத்தையும் காப்பாற்றுங்கள்!
ஒருவேளை தங்களிடம் குறைகள் இருந்தால், கவுரவம் பார்க்காமல் அதனை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதாக வாக்களியுங்கள்!!
அயராத வேலைப்பளு என்றெல்லாம் காரணம் காட்டி தயவுசெய்து இந்த அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
அட்மின் உள்ளிட்ட இணையதள நிர்வாகிகளே! கவுன்சிலர் லுக்மான் அவர்களின் அறிக்கையை வெளியிட்டு எங்கள் மனதை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள தாங்கள் அதற்கான விளக்கத்தையும் பெற்று வெளியிடுவதைக் கடமை என்று கருதி செய்வீாகள் என்ற நம்பிக்கையுடன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross