ஆண் பிள்ளைகளாகிய நீங்கள் எல்லோரும் பட்டம் பெற்று இருப்பது மகிழ்ச்சியே, இன்னும் பல பட்டங்கள் பெற வேண்டும் ,வாழ்க்கையிலே பல முன்னேற்றங்கள் அடைய வேண்டும் என்பதே , எங்கள் பிரார்த்தனையாக இருக்கும்.
வசதி, வாய்ப்புக்களை பெற்றிருக்கும் ஆண் பிள்ளைகள், மேல் படிப்புகளைப் படித்து வியாபாரத்திற்கு, தொழில் துறைக்கு செல்லுங்கள் - வசதி , வாய்ப்பு குறைந்தவர்கள் வேலையில் சேர்ந்து கொண்டே மேல் படிப்புகளையும் படித்து முன்னேறுங்கள். இன்றைய சூழலில் மேல் படிப்பு படித்தாலே முன்னேற்றங்கள் ஏற்பட வழிகள் பிறக்கும். ஆகவே , ஆண் பிள்ளைகளாகிய நீங்கள் முயற்சிகளை கைவிட வேண்டாம்.
---------------------------------------------------
மாணவ மணிகளே!
என்னதான், எவ்வளவுதான் படிப்புகளை படித்து பட்டத்திற்கு மேல் பட்டங்களாக பல, பல பட்டங்கள் வாங்கினாலும் - அன்பையும் , பண்பையும், அடக்கத்தையும் ஒருபோதும் உலக படிப்புகள் தராது - அதை தருவது நல்ல வளர்ப்பும், நல்ல நடத்தையும், நல்ல ஒழுக்கங்களும்தான்.
இன்று நீங்கள், பட்டங்களை பறக்க விட்டு விளையாடி பொழுதை போக்கும் சிறு பிள்ளைகளல்ல - படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் - குடும்பத்தை , அலுவலகத்தை, நிறுவனங்களை நிர்வகிக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள்.
எனவே, பட்டம் பெறுவதற்கு முன்னால் உங்களிடம் இருந்த விளையாட்டு புத்திகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு - இனி ஒவ்வொரு விசயத்திலும் அது நீங்கள் செய்யப்போகும் தொழிலானாலும் சரி அல்லது மேல் படிப்பானாலும் சரி மிகவும் கவனமாக இருந்து செயல் பட்டால் இன்ஷா அல்லாஹ்! வாழ்விலே நல்ல முன்னேற்றம் அடையலாம். எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்களுக்கு பல முன்னேற்றங்கள் கிடைத்திட உதவிடுவானாக ஆமீன்.
-----------------------------------------------
வசதி படைத்த தந்தையர்களே!
இன்றைய காலத்தில் வசதி படைத்தவர்கள் , வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் , நல்ல உற்பத்தி தொழில் செய்துகொண்டிருக்கும் சில தந்தைமார்கள் , தங்கள் ஆண் மக்கள் பட்டம் படித்து அதுவும் மேல் படிப்பு படித்துவிட்டால் அவர்களை வியாபாரத்தில் சேர்த்து , தங்கள் வியாபாரத்தை முன்னேற்ற அல்லது வியாபாரத்திற்கு துணையாக இருக்க வைப்பதில்லை.
மேல் படிப்பு படித்திருப்பதால் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மாதம், மாதம் கை நிறைய சம்பளம் வாங்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் - இது மகா தவறு.
என்னதான் அவர்கள் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் அங்கே அவர்கள் அடிமை வாழ்வுதான் வாழ்கிறார்கள். அங்கே அவர்கள் மெஷின் போல் வேலை செய்து ,மாதம் , மாதம் சம்பளம் வாங்கி பழக்கப்பட்டு விட்டப் பிறகு, நம்ம நாட்டுக்கு வந்த பின் வியாபாரத்தை செய் என்றால் அவர்களால் முடிவதில்லை. அவர்களால் வியாபாரம் செய்ய அதன், கஷ்ட , நஷ்டங்களை எதிர்கொள்ள மனம் வருவதில்லை.
இலட்சங்கள் கிடைக்கிறதே என்று ஆசைப்பட்டு இலட்சியங்களை இழக்கிறார்கள் - வியாபாரம்தான் பரக்கத்தானது அபிவிருத்தியாகி கொண்டே இருக்கும் , மனதுக்கும் நிம்மதியை தரும்.
ஆகவே , வியாபாரத்தில் , உற்பத்தித் தொழிலில் உள்ள தந்தையர்களே! தயவு செய்து உங்கள் பிள்ளைகளை தேவையற்ற முறையில் வேலைக்கு அனுப்ப வேண்டாம். அவர்கள் படித்த படிப்புக்கு தக்கப்படி உங்கள் வியாபாரங்களை அமைத்துக் கொண்டு உங்கள் தொழிலையும் முன்னேற்றுவதுடன் உங்கள் மக்களின் வாழ்வையும் வளம்பெற செய்யுங்கள்.
இதை நடுத்தர மக்களுக்காக எழுதவில்லை இலட்சகணக்கில் மாத வருமானம் உள்ளவர்களுக்கே எழுதுகிறேன் என்பதை மக்கள் உணர வேண்டுகிறேன்.
வியாபாரத்தைத்தான் மார்க்கம் ஊக்குவிக்கிறது - அதில் அபிவிருத்தி இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross