DCW வுக்கு மக்கள் கொடுத்த பேதி மருந்து...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[29 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24233
முதலில் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
காலை 5 மணிக்கு துவங்கி 6;30 மணிக்கெல்லாம் பளபளவென பொழுது விடியும் போதே பரபரப்போடு இயங்கி.மதியம் 2 முதல் 4 மணிவரை சற்று ஓய்வு எடுத்து மீண்டும் மாலை 5:30-ல் இருந்து இரவு 11 மணி வரை களைகட்டும் காயல்பட்டினமா இது?
ஓய்ந்த வீதிகளும், ஆளாரவாரமில்லாத தெருக்களும், மயானத்தின் அமைதியும், இன்று என்ன சூரிய கிரகணமா? மக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர்? எனும் அளவிற்கு இதுநாள் வரை காயல் காணாத வெரிச்சோடல்! ஒரு ஊரே புலம் பெயர்ந்து போய்விட்டதோ? எனத் தோன்றும் காட்சிகள்! கடையடைப்பு பல கண்டுள்ளோம். காயலையே அடைத்து வைத்த காட்சியை நாங்கள் இன்று தான் காண்கின்றோம்!
ஒட்டுமொத்த ஊரார்களின் உள்ளக் குமுறல்களை வெளிபடுத்திய விதம் அபாரம்! எவன் வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன? எனும் மனோபாவம் மக்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை காயல்மாநகரத்தின் அனைத்து சமுதாய நன்மக்களும், வியாபாரி பெருமக்களும், ஓட்டுநர், உழவர், வித்தகர், விற்பன்னர் என அத்தனை பேரும் இக் கடையடைப்பு மூலம் DCW எனும் உயிர்க்கொல்லி அரக்கனின் கன்னத்தில் செருப்பால் அரைந்திருக்கின்றனர். இதைவிடக் கடுமையான வாசகம் எனக்குத் தோன்றவில்லை!
சுற்றுவட்டாரங்களில் படிப்பறிவில்லாத பாமர மக்களின் பாழாய்ப்போன இயலாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களில் சிலருக்கு வேலை. சிலருக்கு அலங்கார பதவி (ஒரு மண்ணுக்கும் உதவாது) பாமரர்களுக்கு எலும்புத்துண்டு என தன்னை சிலாகித்துக் கொண்டு சர்வாதிகார தோரணையில் தன் உற்பத்திகளை மாற்றியும், பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் குஜராத் குபேரனே? இங்குள்ள குசேலர்களின் விலைமதிக்க இயலாத இன்னுயிரை நீ விலை பேசிக் கொண்டிருக்கின்றாய்!
அன்று, கண் எரிச்சல் ஏற்பட்டாலும், கன்றுக்குட்டி செத்தாலும் “அட! கெமிக்கல்லெ ஏதோ திறந்து விடுறாங்க” என பொறுத்துப் போன எம் மூதாதையர்களுக்கு உன் வீரியம் தெரியாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டனர்.
இன்று, அந்த சத்தியவான்களின் சந்ததியினரான சிங்கக்குட்டிகள் காயல்பதியில் கல்வியறிவு, சிந்தனை ஆற்றல், சீர்தூக்கிப்பார்க்கும் தன்மை, திறமை என எங்கள் இளைய சமுதாயம் வேரூன்றிய விருட்சமாய்த் தழைத்து நிற்கின்றது. உனது பம்மாத்து வேலைகளும், மாமிச உணவு சாப்பிட்டதால்தான் ஆரோக்கியம் கெடுகின்றது எனும் பாசாங்கு சூழ்ச்சிகளும் இனி எம் மக்களிடம் பலிக்காது. எங்க பாஷையிலெ சொன்னா “நோண்டி நொங்கெடுத்துடுவாங்க”.
உன் வளர்ச்சியில் அல்லது உன் வருமானத்தில் எமக்கு பொறாமையில்லை! நீ எங்கள் மக்களின் சுவசத்தை உறிந்து உயிர்வாழ்கின்றாய்! நீ விடும் விடும் விஷ மூச்சு, உன் உடல் வெளியேற்றும் விஷக்கழிவு எம் மண்ணில் காற்றிலும் கடலிலும் கலந்து எங்கள் மனித வளம், கடல் வளம், மீன் வளம், நிலத்தடி நீர் வளம், இப்படி ஏகப்பட்ட வளமான வளங்களை மென்று விழுங்கி ஏப்பம் விட்டு கொண்டிருக்கின்றாய்.
உன் செமியாக்குணத்திற்கு (செரிமானத்திற்கு) கொடுக்கப்பட்ட பேதி மருந்து தான் இன்றைய ஆர்ப்பாட்டமும், கடையடைப்பும். இனியும் இத்தகைய விஷக்கழிவுகளை வெளியேற்ற முற்பட்டால் இனி நாங்கள் கொடுக்கும் மருந்து பேதி மருந்தாக இருக்காது. உணர்ந்து கொள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross