Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[29 January 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25275
கட்டுரையாளர் தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் ரிஸானாவிற்கு நடந்த அநீதியை பதிவு செய்துள்ளார். உடல் தளர்ந்த நிலையிலும் கருத்துக்களை நிமிர்ந்து சொன்ன கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
சௌதி அரசின் முறை தவறிய செயல்பாடுகளை விமர்சிப்பதாலேயே ஷரீஅத் அடிப்படையிலான தண்டனை சட்டங்களை விமர்சித்ததாக ஆகாது.
ரிஸானாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை புனிதத்தின் பெயரால் மறைக்க முயலுவதும் சரியல்ல.
மற்ற குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.
இஸ்லாமிய அரசானது குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்து முன்னர் நாட்டில் மனித மனங்களையும் சமூக , பொருளாதார , பண்பாட்டு சூழ்நிலைகளையும் சீர் செய்யும் . அதன் பிறகே குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு முதல் வஹீ வந்து 15 வருடங்கள் கழித்துதான் இஸ்லாமிய அரசிற்கான அரசியல் யாப்பு இறக்கப்பட்டது.
அது வரை தனி மனித உருவாக்கம்தான் நடந்தது. தண்டனை சட்டமானது அஹ்ஜாப் போரின் போதுதான் இறங்கியது.
ஒரு தடவை விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஸஹாபி தானே முன் வந்து நபியவர்கள் முன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போது அதனை உடனே ஏற்றுக்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. முடிந்த மட்டிற்கும் அந்த பெண் ஸஹாபி அத்தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நபியவர்களின் உள விருப்பமாக இருந்தது.
குற்றமிழைத்த அந்த பெண் ஸஹாபி தானே நான்கு முறை சாட்சி சொன்ன பிறகுதான் அப்படி ஒரு குற்றம் இழைக்கப்பட்டதை ஆட்சித்தலைவரும் முதன்மை நீதிபதியுமான நபியவர்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். அதன் பிறகும் அவரின் கருவில் உள்ள குழந்தையை காரணம் காட்டி மரண தண்டனை சில வருடங்கள் வரை தள்ளி வைக்கப்படுகின்றது.
அதே போல் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் காலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது திருட்டுகள் நடந்தன. திருட்டு என்பது தனி மனிதனின் உரிமையை பொருளை பறிப்பது ஆகும். ஆனால் அது தனி மனித உரிமை என ஆட்சியாளர் ஒதுங்கி இருந்து விடவில்லை. உமர் அவர்கள் கை வெட்டும் தண்டனையை நிறைவேற்றவில்லை.
சட்டத்திற்கும் இதயம் வேண்டும் என்பதை காட்டிடும் நிகழ்வுகள் இவை.
ஷரீஅத் சட்டத்தை வெறும் வாளாகவும் , லத்தியாகவும் , துப்பாக்கியாகவும் சுருக்கி பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் கொடுங்கோல் சர்வாதிகாரிகளின் சட்டத்திற்கும் ஷரீஅத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.
ரிஸானா விஷயத்தில் அய்யங்களுக்கு அப்பாற்பட்டு தெளிவாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் ரிஸானாவிற்கு முதலில் நீதி மன்றத்தால் மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்படும்போது உலகம் முழுக்க அது விவாதப்பொருளாக மாறுகின்றது. அந்த விவாதங்களின் சந்து பொந்துகள் வழியாக ஷரீஅத் சட்டத்தையே இழிவுபடுத்த உள்நோக்கம் கொண்ட சில சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த நிலையில் சௌதி அரசு என்ன செய்திருக்க வேண்டும் ?
வெளிப்படையான மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தனது தீர்ப்பில் உள்ள நியாயத்தையும் தர்க்கத்தையும் உலகிற்கு முன் நிலை நாட்ட அது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆனால் சௌதி அரசு இது எங்களது உள்நாட்டு விவகாரம். இதில் யாரும் தலையிடத் தேவையில்லை என முகத்தை திருப்பிக்கொண்டது.
ரிஸானாவின் மரண தண்டனைக்கு முன்னர் எத்தனையோ மரண தண்டனைகள் சௌதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த தண்டனை மட்டும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதின் காரணம் வழக்கு தெளிவற்றது. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதுதான்.
சௌதி அரசின் காட்டு தர்பார் நீதியினால் அருமையான இஸ்லாமிய சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
ரிஹானாவின் தலையை எடுக்க ஷரீஅத்தை முன்னிறுத்தும் சௌதி அரசிற்கும் அதன் செய்கையை ஆதரிப்பவர்களுக்கும் சில கேள்விகள் :
1. ஹஜ்ஜிற்கு செல்லும் பெண்களுக்கு மஹ்ரமான ஆணின் துணை வேண்டும் என வலியுறுத்தும் சௌதி அரசு எப்படி வெளி நாடுகளிலிருந்து வீட்டு வேலைகளுக்கு வரும் பணிப்பெண்களை மஹ்ரமில்லாமல் எப்படி அனுமதிக்கின்றது?
2. சௌதி அரபிய நாட்டு முதலாளிகள் அவர்களின் கீழ் பணி புரியும் வெளி நாட்டு தொழிலாளிகளின் பணி, ஓய்வு , சம்பளம் , விடுமுறை , தங்குமிடம் போன்ற விஷயங்களில் செய்யும் அநீதங்களுக்கு அந்நாட்டு அரசு ஷரீஅத் முறையில் துல்லியமாகத்தான் நீதி வழங்குகின்றதா?
3. வளைகுடா போரின் போது சௌதியின் பல்வேறு நகரங்களில் தங்கியிருந்த அமெரிக்க படையினர் அரை குறை ஆடைகளுடன் திரிந்தனர். மது அருந்தினர். இறக்குமதி செய்யப்பட்ட பெண்களுடன் பாலியல் வரம்பு மீறல்களில் ஈடுபட்டனர். அவர்களில் யாருக்காவது கசையயோ , தலை வெட்டோ கொடுக்க முடிந்ததா ?
4. இந்தியா , பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் , சிறீ லங்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பணியாளர்களிடமும் அதே போல வீட்டு வேலைக்கு செல்லும் இளம் வயது சிறுவர்களிடமும் , பெண்களிடமும் சௌதி முதலாளி வீட்டார் செய்யும் வன்முறைகளுக்கும் , பாலியல் அத்து மீறல்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது ?
சவூதி அரபியாவில் அஜ்னபிகளுக்கும் அரபிகளுக்கும் வெவ்வேறு வகையான நீதி காட்டப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. சௌதி அரசாங்கம் முழுமையாக ஷரீஅத் அடிப்படையில் செயல்படும் நாடு கிடையாது. தனது சொந்த மக்களை தீவிர கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் ஒரு கெடு பிடி அரசு. மருந்திற்கு கூட அங்கு ஊடக சுதந்திரமும் இல்லை சன நாயகமும் இல்லை. இஸ்லாத்திற்கு புறம்பான மன்னராட்சி நடைபெறும் நாடு அது.
வறுமையில் எரிந்து அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்களை சார்ந்த எளிய உழைப்பாளிகளிடம்தான் அது தனது சட்ட அமுலாக்கம் என்ற குண்டாந்தடியை சுழற்றும். இதை நாவு கூசாமல் ஷரீஅத் சட்ட நடைமுறை எனவும் கூறிக்கொள்ளும். ஆனால் தேசிய , பன்னாட்டு அரசியல் என்று வரும்போது அமெரிக்கா , இஸ்ராயீல் நாடுகளின் முன் பவ்யமாக பணிந்து நிற்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross