Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[04 February 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25352
இது நாள் வரை ஊடகங்களில்தான் நகர்மன்ற நடவடிக்கைகளை கண்டிருக்கின்றேன். ஒரு முறையாவது இதை நேரில் சென்று காண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
இந்த முறை நடந்த நகர்மன்ற கூட்டத்திற்கு நான் நேரில் சென்றிருந்தேன்.
ஊடகங்களிலும் அசையும் படக்காட்சிகளிலும் எழுத்திலும் நான் உணர்ந்தவைதான் என்றாலும், என்னதான் நடக்கிறது என்பதை திறந்த மனதோடு காண அங்கு சென்றென். அனைத்தும் ஒன்று விடாமல் உண்மை என்பது தெளிவாகியது.
கூச்சலும் குழப்பமும் சச்சரவும் நிறைந்து காணப்பட்டது. நாம் இருப்பது நகராட்சியா அல்லது மீன் கடையா ? என்ற அய்யமும் எழுந்தது.
நகர்மன்றத் தலைவியை அங்குலம் அங்குலமாக சொல்லுக்கு சொல் குற்றம் பிடிப்பதில் மிகத் தீவிரமாக இருந்தனர். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை விட தலைவியை செயல்பட விடக்கூடாது என்பதுதான் பெருவாரியான உறுப்பினர்களின் நோக்கமாகவும் இருந்ததை என்னால் அறிய முடிந்தது.
எடுத்துக்காட்டாக உறுப்பினர் பதுருல் ஹக் ஒரு கட்டத்தில் தலைவியைப் பார்த்து, “நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நாங்கள் மன்றத்தை நடத்திக் கொள்கின்றோம்” என்று கூறினார்.
ஊடகத்தினரின் ஒளிப்பதிவை ஒழித்துக் கட்டுவதையும் ஒரு நேர்ச்சைக் கடனாகவே பெருவாரியான உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே விதிவிலக்கு.
சாதாரண விஷயங்களைக் கூட சண்டை போடுவது போல மிக உயர்ந்த குரலில் சொல்கின்றனர். இதில் அடிப்பது போல் வேறு கை நீட்டுகின்றனர். எந்த நிமிடமும் குஸ்தி, குத்து, சண்டை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் இலவசமாகவே காணக் கிடைத்து விடுமோ என அச்சமாக இருந்தது.
இவர்களின் வம்பிற்கு இழுக்கும் கூச்சலினாலும், வன்மையான கை சைகைகளினாலும் பார்வையாளர்களாகிய நமக்கு குருதி அழுத்தம் உயர்ந்து தலைவலித்ததுதான் மிச்சம். பாவம் தலைவி! எப்படித்தான் இவர்களை சமாளிக்கின்றாரோ?
நகர் மன்ற உறுப்பினர்களோ தலைவியை குறி வைத்து சண்டையிடுகின்றனர். இந்த சந்தடி சாக்கில் நகராட்சி அலுவலர்கள் தங்கள் கடமைகளில் மெத்தனமாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
உறுப்பினர்களே! நகர்மன்ற நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வதை தடுப்பதில் ஏன் இவ்வளவு மும்முரம் காட்டுகின்றீர்கள்? மடியில் கனம் உள்ளவர்கள்தானே அஞ்ச வேண்டும். நீங்கள் ஏன் இவ்வளவு பதட்டமடைகின்றீர்கள்?
ஊடகத்தினர் ஒன்றும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான இடங்களுக்குள் வந்து படம் எடுக்கவில்லையே?குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மன்றத்தில்தானே வந்து பதிவு பண்ணுகின்றனர்? தங்கள் பகுதி உறுப்பினர்களின் அழகிய செயல்பாடுகளை காயல்வாசிகள் கண்டு உணர வேண்டாமா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா??
இது போக, இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். ஊடக ஒளிப்பதிவைத் தடுப்பது உள்ளிட்ட சில நகர்மன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக RDMA, CMA , நீதிமன்றம் போன்ற உயர் நிர்வாக, நீதி அமைப்புகளின் வழிகாட்டுதல் &உத்தரவுகளை நாம் மீறிட இயலாது என தலைவி பொறுமையாகவும், அமைதியாகவும் விளக்கம் சொல்கின்றார்.
ஆனால் உறுப்பினர்களான மும்பை மெய்தீன், ஓடை சுகு, ஜஹாங்கீர் போன்றோர், “அப்படி என்றால் எங்களை வைத்து ஏன் நகர்மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்? RDMA, CMA, நீதி மன்றம் போன்ற அமைப்புகளை வைத்து கூட்டத்தை நடத்த வேண்டியதுதானே?” என தலைவியைப் பார்த்து கேட்கின்றனர்.
பொதுமக்களே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினர்களின் அறியாமையையும், ஆணவத்தையும், பகை உணர்வையும் கவனித்தீர்களா?
“ REGIONAL DIRECTORATE OF MUNICIPAL ADMINISTRATION { RDMA } , commissionorate of municipal administration ( CMA ) என்பன போன்ற தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் மேல் அமைப்புகளாலும், நீதிமன்றங்களாலும் எங்களின் செயல்பாடுகளில் தலையிட இயலாது.நீதிமன்றம் மூலமாக வேண்டும் என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் “ என ஓடை சுகு உள்ளிட்ட பல நகர்மன்ற உறுப்பினர்கள் பலமுறை கூறினர் .
இவர்கள் தங்களை எந்த கேள்வி கணக்கிற்கும் அப்பாற்பட்ட வானளாவிய அதிகாரம் படைத்த அதி உயர் மனிதர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இதுதான் இவர்களின் உளவியல் சிக்கல்.
இந்திய அரசியல் சட்டத்தையும், அதனடிப்படையில் இயங்கும் அரசு நிர்வாகத்தையும், நீதிமன்றத்தையும் அவமதிக்க இந்திய குடிமகன் யாருக்கும் உரிமையில்லை என்பதை நம் நகர்மன்ற கனவான்களுக்கு யாராவது புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.
நமது நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நல்ல ஆன்மிக, ஒழுக்கவியல், உளவியல், சட்டவியல் , நிர்வாகவியல் பயிற்சி தேவைப்படுகின்றது. இல்லையென்றால் இவர்கள் எஞ்சியுள்ள 3 ¾ வருடத்தையும் இப்படித்தான் வீணடிப்பார்கள்.
தலைவி பிடிவாதமிக்கவர், ஆணவம் கொண்டவர் என்றெல்லாம் பல இடங்களில் விமர்சிக்கப்பட்டதுண்டு. அது உண்மையோ இல்லையோ, பண முதலைகளின் தலையீட்டுடன் கூடிய நடப்பு நகர்மன்றச் சூழலை சமாளிக்க, இவர்களிடம் தலைவி இப்படித்தான் நடக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross