காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் - ஜனவரி 29 அன்று நடந்தது. காலை 11:15 மணி அளவில் துவங்கிய கூட்டம் இரு அமர்வுகளாக நடந்தது. முதல் அமர்வு மதியம் 1 மணி அளவில் நிறைவுற்றது. இரண்டாம் அமர்வு, மதியம் 03:15 மணி அளவில் துவங்கி - மாலை 06.00 மணிக்கு நிறைவுற்றது.
நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை வகித்த இம்மாத கூட்டத்தில், வெளிநாடு சென்றுள்ள 02ஆவது வார்டு உறுப்பினர் தவிர 17 உறுப்பினர்களும், நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார் உட்பட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் கூட்ட நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்வதற்கு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று தீர்மானம் மன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், ஊடகங்கள் செய்தி சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என உயர்நீதி மன்றத்தில் தடை வழங்கப்பட்டுள்ளது என்றும், நகராட்சி மூலம் வீடியோ பதிவு செய்ய அவசியம் இல்லை என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை 4 வாரங்களுக்கு மட்டும்தான் என்றும், அது நிறைவுற்றுவிட்டதாகவும் உறுப்பினர்கள் சிலர் கூறினர். [செய்தி ஆசிரியர்: இடைக்கால தடையை நீக்கும் வரை - தடை நீடிக்கும் என்பதே நீதிமன்ற வழிமுறையாகும்].
தற்போது நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்தும், அதில் கிடைக்கும் மண் யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் உறுப்பினர்கள் சிலர் - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, கடந்த (டிசம்பர் 2012) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த கூட்டத்தின் பொருள் எண் 11 - ஊடகங்களை அனுமதிப்பது சம்பந்தமான நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் (RDMA) கடிதம் குறித்தது. இவ்விஷயத்தில் ஊடகங்கள் தங்கள் பத்திரிக்கை உரிமங்களை மன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி கோர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உறுப்பினர்கள் கூறியிருந்தனர். தாங்கள் கூறியவாறு மினிட் புத்தகத்தில் ஏன் தீர்மானம் எழுதப்படவில்லை என உறுப்பினர்கள் வினவினர்.
அதற்கு பதில் அளித்த நகர்மன்றத் தலைவர், ஊடகங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குநர் மற்றும் வழக்கறிஞர் கூறியிருப்பதாகவும், ஆகவே உறுப்பினர்கள் தெரிவித்த வாசகப்படி தீர்மானம் எழுத முடியாது என்றும், “வழக்கின் தீர்ப்புப்படியே செயல்புரிவோம்” என்ற பொருளிலேயே தீர்மானம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.
இறுதியாக, உறுப்பினர்கள் கூறிய வாசகப்படி தீர்மானம் எழுதப்பட்டு, நகர்மன்றத் தலைவரின் கருத்தும் தனியாக பதிவு செய்யப்பட்டது.
மதியம் 03:15 மணிக்கு ஜனவரி மாத கூட்டப் பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கூட்டப் பொருட்கள் வருமாறு:-
சாலையோர கழிவு நீர்த் தொட்டிகளை அகற்றல்:
மன்ற கூட்டப் பொருளில் கோரப்படும் கோரிக்கைகள் யாரால் முன்வைக்கப்பட்டது என்ற விபரம் அந்தந்த கோரிக்கையுடன் கூட்டப் பொருளில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கோரிக்கையை முன்வைத்தவரின் விபரம் இன்றி இப்பொருள் உள்ளதாக உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
பின்னர் சாலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த் தொட்டிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றிடுமாறு பொதுமக்களுக்கு பொது அறிவிப்பு செய்து, அக்காலக்கெடு நிறைவுற்ற பின்னர், அகற்றப்படாத கழிவு நீர்த் தொட்டிகளை நகராட்சியின் சார்பில் அகற்றி, அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட வீட்டாரிடமிருந்து பெற்றிடுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
நீர்நிலைகளைத் தூர்வாறல்:
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
ஆறு - மாடு அறுப்புக் கட்டண உயர்வு:
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்ததையடுத்து தீர்மானம் நிறைவேறியது.
கடற்கரை கழிப்பறையை பழுது பார்த்தல்:
வெறுமனே பழுது பார்த்து, அப்படியே விட்டுவிட்டால் மீண்டும் பழுது ஏற்பட்டு, செலவுகள் வீணடிக்கப்படும் என்றும், முறையான - தொடரான பராமரிப்பும் அவசியம் என்றும் உறுப்பினர்கள் பலர் கருத்துக் கூறினர்.
கடற்கரை கழிப்பிடங்களை நகராட்சியின் சார்பில் பழுது பார்த்து, பின்னர் அதனைப் பராமரிப்பதற்கு ஒப்பந்தப் புள்ளி கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்தல்:
உடைப்பு ஏற்படின் அதனை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டியது நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணி என்றும், அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு தனியாக தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார்.
உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய போதிய பணியாளர்கள் தரப்படுவதில்லை என்றும், வெளியிலிருந்து பணியாளர்களைப் பெற்றால் அவர்களுக்கு கூலி கொடுக்க நிதி தேவை என்றும், எனவே தீர்மானம் இயற்றப்பட்டால் மட்டுமே அதற்கான நிதியை நகராட்சியிடமிருந்து பெற்றிட இயலும் என்றும்
நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் கூறினார்.
ரோஜா சுய உதவிக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 14 தற்காலிகப் பணியாளர்கள் நிலை என்ன என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். இதுகுறித்து சிறிது நேரம் விவாதிக்கப்பட்ட பின்னர், அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
பேருந்து கால அட்டவணையை தனியார் நிறுவிட அனுமதி:
மன்றம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி இணையதளத்தில் தகவல் பதிவேற்றம்:
நகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டிய தகவல்களை முறைப்படி பதிவு செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமை என்றும், அதற்கு தனியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை ஆதரித்தனர். ஆதரித்ததால், இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
மீனவர் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்:
வருவாய்த் துறை மூலம் கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
கற்புடையார் பள்ளி வட்டம் - ஈக்கியப்பா தைக்கா பாதையில் சாலை அமைத்தல்:
அவசர நேரங்களில் தீயணைப்பு வண்டிகள் செல்ல தற்போது வசதி இல்லை என்றும், ஆகவே இச்சாலை அவசியம் என்றும் 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி கூறினார். மற்றொரு தனி நபருக்கும் அப்பகுதியில் இடம் இருப்பதாகவும், வீடுகள் இல்லாத பகுதியில் சாலை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிற உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
புதிய சாலைகள் அமைத்தல்:
புதிய குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் துவங்க இருப்பதால் - புதிய சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
புதிதாக தெரு விளக்கு அமைத்தல்:
கள ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
சுகாதாரப் பணி வாகன பராமரிப்பு:
அலுவலக குறிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய டயர்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.
வாகனங்களுக்கு பாதுகாப்பு அறை அமைத்தல்:
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவருக்கு வாகனம்:
நகராட்சியில் போதிய நிதி இல்லாத காரணத்தால், வாகனம் வாங்க தேவையில்லை என்று கருத்து கூறப்பட்டது.
வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம்:
6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கும், அதற்குப் பொருத்தமான ட்ராக்டர் எஞ்சினும் வாங்கிட தீர்மானிக்கப்பட்டது.
பொதுக் கிணறுகளைத் தூர்வாறல்:
நகராட்சி பொதுக் கிணறுகளைத் தூர்வார தீர்மானிக்கப்பட்டது.
கற்புடையார் பள்ளி வட்டத்தில் புதிதாக குடிநீர் வினியோகக் குழாய் அமைத்தல்:
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத் துளிகள்...
கூட்டரங்கில் புதிய ஒழுங்குகள்...
கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வோர் அனைவரிடமும் தனியாக வருகை பதிவேட்டில் பெயர், முகவரி, தொடர்பு எண், கைச்சான்று ஆகியன பெறப்பட்டது.
இனி நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பும் பார்வையாளர்கள், இந்த விபரங்களுடன், தமது அடையாள அட்டை ஒன்றின் நகலையும் கொண்டு வந்து, பார்வையாளர் பகுதியில் அமர அனுமதி பெற்றிடுமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
பணி மேற்பார்வையாளரின் அலட்சியமே நிர்வாகக் கோளாறுகளுக்குக் காரணம்...
கூட்டம் துவங்குமுன் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கை குறித்து, பணி மேற்பார்வையாளர்தான் (Overseer) விளக்கமளிக்க வேண்டும் என்றும், வெளிச்சென்றுள்ள அவர் வரும் வரை காத்திருந்து கூட்டத்தைத் துவக்கவும் முடிவு செய்யப்பட்டு, அவர் வந்த பின்னரே கூட்டம்
துவக்கப்பட்டது.
நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பிலிருக்கும் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் சரியாக செயல்படாததே பணிகள் நடைபெறாமைக்குக் காரணம் என்றும், அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்
கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் பேசினர்.
சேர்மனை மீடியா மிரட்டுகிறது...
பெருவாரியான உறுப்பினர்களின் கருத்தை மதித்து நகர்மன்றத் தலைவர் மீடியாவை கட்டுப்படுத்தத் தயங்குவது ஏன்? என ஒரு கட்டத்தில் சில உறுப்பினர்கள் கேட்டனர். “தலைவியை யாரோ மீடியா காரங்க மிரட்டியிருக்கிறாங்க... அதனால்தான் தலைவி பயப்படுறாங்க” என்று நகராட்சி ஆணையர் அஷோக் குமார் கூறினார்.
தன்னை யாரும் மிரட்டவுமில்லை, எந்த மிரட்டலுக்கும் தான் பயப்பட்டதுமில்லை என்று கூறிய நகர்மன்றத் தலைவர், வெளியாட்களின் மிரட்டல்களுக்கு மதிப்பளிக்காமல் ஆணையர் தன் பணியைச் செய்தாலே போதும் என்று கூறினார்.
“(ஊடக விஷயத்தில்) இப்படியே எவ்ளோ நேரம்தான் கூட்டத்தை இழுத்துக் கொண்டிருப்பீர்கள், மணி 1ஐ தாண்டிவிட்டதே...? சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க” என ஆணையர் கூறினார். கூட்டத்தில் இருக்க விருப்பமில்லையெனில் ஆணையர் வெளியே செல்லலாம் என்றும், நகர்மன்றத்திற்கு உத்தரவிடும் உரிமை ஆணையருக்கு இல்லை என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
‘ஜோக்கர்’
அரசின் சார்பில் நகராட்சியை நிர்வகிக்க வேண்டிய அதிமுக்கிய பொறுப்பிலிருக்கும் ஆணையர் தனது பொறுப்பில் கண்டிப்புடன் இருக்க வேண்டுமென்றும், ‘ஜோக்கர்’ போன்று செயல்பட்டால் மக்கள் கட்டுப்படுவதை எதிர்பார்க்க இயலாது என்றும் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூறினார்.
அதற்கு பதிலளித்த ஆணையர், ‘ஜோக்கர்’ என்று கூறுவதை தான் ஏற்பதாகவும், இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி ‘எஸ்கேப்’ ஆவது என ஜோக்கருக்குத்தான் சரியாகத் தெரியும் என்றும் கூற, அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
புது பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி பெறப்பட்டது
நகராட்சியில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பணியாட்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி கிடைத்திருப்பதாக ஆணையர் கூட்டத்தின்போது தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் அண்மையில் சென்னைக்கு சென்றிருந்த போது இது குறித்து அதிகாரிகளை சந்தித்தாகவும் ஆணையர் கூறினார்.
இன்ஷாஅல்லாஹ்! அனைத்தும் நிறைவேற்றப்படும்!!
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என ஆணையரிடம் உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பினர். ஒரு கட்டத்தில் எழுந்து பேசிய ஆணையர், “இன்ஷாஅல்லாஹ்! அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும்!!” என்று கூற, அனைவரும் சிரித்தனர்.
பார்வையாளர்கள்...
இக்கூட்டத்தில், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத், எழுத்தாளர் சாளை பஷீர் உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[செய்தி திருத்தப்பட்டது @ 7:00am/4.2.2013] |