தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வந்திருந்தார். அது குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத்தின் வார்ட் 1 உறுப்பினர் ஏ.லுக்மான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அன்று 01.02.2013 வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11:30 மணியளவில் நான் திருச்செந்தூரிலிருந்து ஊர் திரும்பி வருகையில், K.M.T மருத்துவமனை அருகில் வந்ததும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் திருச்செந்தூர் நோக்கி செல்வதைப் பார்த்து அந்த இடத்தில் நின்றேன். அப்போது நகர்மன்றத் தலைவி அவர்களும், நகர்மன்ற ஆணையரும் தொடர்ந்து வந்தார்கள். எனவே சற்று நேரத்தில் நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். வாவு வஜிஹா கல்லூரிக்கு சற்று முன்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், அவருடன் வந்த அதிகாரிகளும், நகர்மன்றத் தலைவி மற்றும் ஆணையர் ஆகியோர் அந்த இடத்தில் நின்று, பனை மர வாரிய இலாகாவுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதற்கான இடம் பார்ப்பது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
முதலாவதாக பனை வாரிய இடத்தைப் பற்றிப் பேசினார்கள். பிறகு ஓடக்கரை பகுதியில் சுடுகாட்டுப் பகுதி நிலத்தைப் பற்றிப் பேசினார்கள். இந்த இடங்கள் சரிவராது என்றதும், அதன் பிறகு அதனருகில் 40 அடி அகலத்தில் இடம் இருக்கின்றது, அதையாவது தாருங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நகர்மன்றத் தலைவி அவர்கள் கேட்டார்கள். அப்போது உடன் இருந்த அதிகாரி, அந்த இடத்தில் லாரிகள் திரும்ப முடியாது என அந்த இடத்தை நிராகரித்துவிட்டார்.
பிறகு பைபாஸ் ரோட்டில் உள்ள மத்திய அரசின் உப்பு இலாகா இடத்தைப் பற்றிப் பேசினார்கள். இவ்வாறு அவர்களின் ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போது நான் குறுக்கிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஐக்கிய பேரவையின் மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் கடையக்குடி பகுதியில் தருவதாகச் சொன்ன 5 ஏக்கர் நிலத்தைப் பற்றி நினைவூட்டினேன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவருடன் வந்திருந்த அதிகாரி ஒருவர், நம் நகர்மன்றத் தலைவி அவர்களை சுட்டிக்காட்டி, மேடம் அவர்கள் அது CRZ பகுதியில் வரும், ஆகையால் அது வேண்டாம் என்று கூறியதாக அந்த இடத்தில் சொன்னார். அப்போது தலைவி அவர்கள் என்னிடத்தில் அந்த இடத்தையும் கலெக்டரிடம் காட்டுவேன் என்றார்கள். இதன்பிறகு ஜூம்ஆ நேரம் நெருங்கிவிட்டதால் நான் கலெக்டர் அவர்களுடன் செல்லாமல் திரும்பிவிட்டேன்.
இதுதான் நடந்த உண்மை.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |