தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வந்திருந்தார். அது குறித்து
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS அவர்கள் பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வருகை
புரிந்தார்.
காயல்பட்டினம் வந்தடைந்தவுடன், எரிவாயு கலன் அமைக்க - நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடந்த நகர்மன்ற
கூட்டத்தின் கூட்டப்பொருள் 75 இல் இடம்பெற்ற - காயல்பட்டினம் வட பாகம் சர்வே எண் 8 (24 ஏக்கர்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண்
524/1 (8.5 ஏக்கர்) (தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 237BB/1 (22 ஏக்கர்)
(மத்திய அரசின் உப்பு இலாக்கா இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 46 (13 ஏக்கர்) - ஆகிய இடங்கள் குறித்து அதிகாரிகளிடம்
விபரங்கள் கேட்டார்.
நெடுஞ்சாலை அருகில் அமைந்திருக்கும் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 524/1 இடத்தை மட்டும் நேரடியாக சென்று
பார்த்தார். அவ்விடம் குறித்த விபரங்களை ஒரு வார காலத்திற்குள் தனக்கு அளிக்கும்படி தாசில்தாரிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
கடையக்குடி (கொம்புதுறை) அருகே காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத்
அப்துர்ரஹ்மான் அவர்கள் தருவதாக கூறியுள்ள 5 ஏக்கர் நிலத்தினையும் காண மாவட்ட ஆட்சியரை நான் வேண்டினேன். ஒரு வழிப்பாதை குறித்த
ஆய்வு, கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) சுனாமி குடியிருப்புகள் குறித்த ஆய்வு ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
- நேரம் இல்லாத காரணத்தால், பிப்ரவரி 13 அன்று இப்பகுதிக்கு மீண்டும் வரவேண்டி இருப்பதாகவும், அப்போது தான் அந்த இடத்தை கண்டிப்பாக
பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் - அவ்விடம் குறித்த வரைப்படங்களை தயார் செய்து வைக்கும்படியும், அதிகாரிகளுக்கு ஸ்தலத்திலேயே
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இது தான் நடந்தது. இது குறித்து உண்மைக்கு மாறாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், மேலதிக
விபரம் தேவையெனில் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |