இம்மாதம் 03ஆம் தேதியன்று (நாளை) தூத்துக்குடியில் நடைபெறும் இருதய நோய் மருத்துவ இலவச தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஷாஜஹான்ஸ் ஜுவல்லர்ஸ் மூலம், 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி முதல், மதியம் 02.00 மணி வரை - தூத்துக்குடி, தெற்கு ராஜா தெரு, காரப்பேட்டை மாணவர் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளுக்கான - “இதயம் காப்போம்” என்ற - இருதய சிகிச்சை இலவச முகாம் நடைபெறவுள்ளது.
பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது நிரம்பியோர் வரை அனைவருக்கும், Echocardiogram முறையில், இருதயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், குறைவாக உணவு உட்கொள்ளல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படின், இம்முகாமில் கலந்துகொண்டு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இதற்கு முன்னர் இது தொடர்பாக ஏதேனும் பரிசோதனைகள் செய்திருப்பின், அதன் அறிக்கையையும் கொண்டு வரலாம்.
முகாமில், இருதய அறுவை சிகிச்சை தேவை என்று கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படவுள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் துவக்கி வைக்கவுள்ளார்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருப்பின், இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |