தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.1,02,000/- பரிசுத் தொகை வழங்க தமிழகரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
தமிழகப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், மற்றும் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்
துறையின் சார்பில் ஆண்டுதோறும், 11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுவரை வழங்கி வந்த முதல் பரிசுத் தொகை ரூ.1,000/-ஐ ரூ.10,000/- ஆகவும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.500/-ஐ ரூ.7000/-ஆகவும் உயர்த்தி ஆணை வழங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.1,02,000/- வீதம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டுக்கான கல்லூரி மாணவர்களுக்கானப் போட்டிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அன்றும், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 2ஆம் தேதி அன்றும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்திற்கானக் கல்லூரி மாணவர்களுக்கானப் போட்டிகள், சென்னை, காயிதே
மில்லத் மகளிர் கல்லூரியில் பிப்ரவரி 1ஆம் தேதியன்றும், பள்ளி மாணவர்களுக்கானப் போட்டிகள் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப்பள்ளியில் பிப்ரவரி 2ஆம் தேதி அன்றும், நடைபெற உள்ளன. இவ்விழாவினைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் தொடங்கி வைத்து திட்ட விளக்கவுரையாற்ற உள்ளார்.
கவிதைப் போட்டி : காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை
கட்டுரைப் போட்டி : முற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
பேச்சுப் போட்டி : பிற்பகல் 2.30 மணி முதல் போட்டி முடியும் வரைபள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் சென்னை
மாவட்டத்திலுள்ள அனைத்து மேனிலைப்பள்ளிகளில் 11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் சென்னை மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர்கள் வாயிலாக உரியப் படிவத்தினை நிறைவு செய்து பள்ளி / கல்லூரி அனுமதியுடன் போட்டியில் பங்கேற்கலாம்.
கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டிகளுக்கானத் தலைப்புகள் முன்னதாகவே தெரிவிக்கப்படாது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் போட்டிகள் தொடங்கும் நேரத்தில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களால் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள, மூடி முத்திரையிடப்பட்ட உறை
பிரிக்கப்பட்டு, அந்தந்தப் போட்டிக்கானத் தலைப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி 32 மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்களும் போட்டிகளைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரசு செலவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மாநில அளவிலானப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
|