காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சொந்தமான ஆடு - மாடு அறுப்புத் தொட்டி குத்தகையை யாரும் ஏலம் எடுக்காததால், நகராட்சியின் சார்பிலேயே அறுப்புத் தொட்டி பராமரிக்கப்பட்டு வருவதுடன், ஆடு அறுக்க 5 ரூபாயும், மாடு அறுக்க 6 ரூபாயும் அறுப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டண வசூல் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 250 ரூபாய் மட்டுமே பெறப்படுவதாகவும், அறுப்புத் தொட்டியை ஆள் வைத்து பராமரிக்கும் செலவைக் கூட இதைக்கொண்டு ஈடு செய்ய இயலாது என்றும் நகராட்சி கருதியது.
அதனையடுத்து, பிப்ரவரி 01ஆம் தேதி முதல் ஆடு அறுக்க 40 ரூபாயும், மாடு அறுக்க 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, இக்கட்டண நிர்ணயத்தில் ஆட்சேபணை இருப்பின், 30 நாட்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு, 15.12.2012 அன்று நகராட்சி ஆணையர் மூலம் நாளிதழில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
முறைப்படியான ஆட்சேபணை எதுவும் பெறப்படாததையடுத்து, பிப்ரவரி 01ஆம் தேதி (இன்று) முதல் அறுப்புக் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடங்கிய தகவல் தாள், நகரின் அனைத்து இறைச்சிக் கடைகளின் கதவுகளிலும் நகராட்சியால் ஒட்டப்பட்டுள்ளது.
அறுப்புக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காயல்பட்டினத்தில் அனைத்து ஆடு, மாடு இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |