காயல்பட்டினம் நகராட்சியில் - நகராட்சியின் பொது நிதி, அரசின் IUDM திட்ட நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஆகியவை மூலம் சுமார் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 சாலைப் பணிகளும், 3 மழை நீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 15 சாலை பணிகளில் IUDM திட்டத்திலான 2 சாலை பணிகள் (ஆசாத் தெரு, நெய்னார் தெரு) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலமான சாலைப்பணி (அப்பாபள்ளி தெரு) ஆகியவை - அச்சாலைகள் தோண்டப்பட்ட பின்னரே நடைபெறவேண்டும்.
தற்போது நிறைவேற்றப்படும் அனைத்து பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டபோது, ஒப்பந்தகாரர்களுக்கு அது குறித்த விதிமுறைகளும்
வழங்கப்பட்டிருந்தன. அந்த விதிமுறைகள் - Indian Road Congress (IRC) அமைப்பின் விதிமுறைகளாகும். அந்த விதிமுறைகள் - புதிய சாலை அமைக்க, பயன்பாட்டில் இருக்கும் சாலையை தோண்ட வேண்டும் என்றால் எந்த அளவு தோண்ட வேண்டும், தோண்டிய பின் அடுக்கடுக்காக எந்த வித பொருட்கள், எந்த அளவுக்கு பரத்தப்பட வேண்டும் என்பன போன்ற தகவல்களை வழங்குகிறது.
விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு தோண்டினால்தான், தோண்டிய பின் பரத்தப்படும் பொருட்களின் அளவும் சரியான அளவில் அமையும். சாலையும் வலுவாக இருக்கும்.
IUDM திட்டம் மூலமான அனைத்து (10) பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலமான அப்பாபள்ளி தெரு சாலை பணி, நகராட்சியின் பொது நிதி மூலமான ஈக்கியப்பா தைக்கா தெரு - சிங்கித்துறை சாலை பணி - ஆகியவை, தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரரால் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது காயல்பட்டினத்தில் பணி நடக்கும் மூன்று சாலைகளில் தோண்டப்பட்டுள்ள அளவை காயல்பட்டணம்.காம் இன்று செய்திக்காக சரி பார்த்தது.
அப்பாபள்ளி தெரு (மதிப்பீடு - 9 லட்சம் ரூபாய்)
ஒப்பந்த விதிகள்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலம் மேற்கொள்ளப்படும் அப்பாபள்ளி தெரு சாலை - 403 மீட்டர் நீளத்திற்கும், 4.2 மீட்டர் அகலத்திற்கும், 45 செ.மீ. (சுமார் 1.5 அடி) ஆழத்திற்கும் தோண்டப்படவேண்டும். சாலைப்பணிகள் 4 மீட்டர் அகலத்திற்கே நடைபெறும்.
இன்று அளவிட்டதில், 45 செ.மீ. அளவிற்கு பதிலாக சுமார் 33 செ.மீ. அளவு ஆழத்திற்கே சாலை தோண்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
தோண்டப்பட்ட சாலையில் 20 செ.மீ. அளவு சிவப்பு சரள்கள் (Red Gravel), 7.5 செ.மீ. அளவில் இரண்டு அடுக்காக - 15 செ.மீ. அளவிற்கு
பாட்டை சரள் (Water Bound Macadam - WBM), அதன் மேல் 10 சதுர மீட்டருக்கு 4 கிலோ கிராம் அளவில் டாக் கோட் பூசுவது, அதன் மேல் 2.5
செ.மீ. அளவு Bituminous Concrete போடுவது. இதுதான் இச்சாலைக்கான விதிமுறை.
அப்பாபள்ளி தெருவைப் பொருத்த வரை, தோண்டப்பட வேண்டிய 45 செ.மீ. அளவை விட குறைவாக 33 செ.மி. அளவே தற்போது சாலை
தோண்டப்பட்டுள்ளது. மேலும், அதற்கு மேல் - ஒப்பந்த விதிகள் படி 37.5 செ.மீ. அளவிற்கு பொருட்கள் படர்த்தப்பட வேண்டியுள்ளது.
விதிமுறைகள் கூறும் அளவிலிருந்து குறைவாக தோண்டப்பட்டுள்ளது ஒருபுறமிருக்க, இச்சூழலில் - விதிமுறைகளின்படி மீதி பொருட்கள்
பரத்தப்படுவது கேள்விக்குறியே.
ஆசாத் தெரு (மதிப்பீடு - 8 லட்சம் ரூபாய்)
ஒப்பந்த விதிகள்படி அரசின் IUDM திட்ட நிதிமூலம் மேற்கொள்ளப்படும் ஆசாத் தெரு சாலை - மொத்தமாக 306 மீட்டர் நீளத்திற்கும், 3.75
மீட்டர் அகலத்திற்கும், 45 செ.மீ. (சுமார் 1.5 அடி) ஆழத்திற்கும் தோண்டப்படவேண்டும்.
இன்று அளவிட்டதில் - 45 செ.மீ. அளவிற்கு பதிலாக சுமார் 30 செ.மீ. அளவு ஆழத்திற்கே சாலை தோண்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
தோண்டப்பட்ட சாலையில் 10 செ.மீ. அளவு வெள்ளை (கிணற்று) சரள்கள் (White Gravel), 10 செ.மீ. அளவு Granular Sub Base (GSB),
7.5 செ.மீ. அளவில் இரண்டு அடுக்காக - 15 செ.மீ. அளவிற்கு பாட்டை சரள் (Water Bound Macadam - WBM), அதன் மேல் 10 சதுர
மீட்டருக்கு 4 கிலோ கிராம் அளவில் டாக் கோட் பூசுவது, அதன் மேல் 2 செ.மீ. அளவு Pre-mix Carpet போடுவது. இதுதான் இச்சாலைக்கான
விதிமுறை.
ஆசாத் தெருவைப் பொருத்த வரை, தோண்டப்பட வேண்டிய அளவான 45 செ.மீ. யை விட குறைவாக 30 செ.மீ. அளவே தற்போது சாலை
தோண்டப்பட்டுள்ளது. மேலும், அதற்கு மேல் - ஒப்பந்த விதிகள் படி 37 செ.மீ. அளவிற்கு பொருட்கள் படர்த்தப்பட வேண்டியுள்ளது.
விதிமுறைகள் கூறும் அளவிலிருந்து குறைவாக தோண்டப்பட்டுள்ளது ஒருபுறமிருக்க, இச்சூழலில் - விதிமுறைகள்படி மீதி பொருட்கள்
பரத்தப்படுவது சாத்தியம் குறைவு.
நெய்னார் தெரு (மதிப்பீடு - 12 லட்சம் ரூபாய்)
ஒப்பந்த விதிகள் படி அரசின் IUDM திட்ட நிதி மூலம் மேற்கொள்ளப்படும் நெய்னார் தெரு சாலை - மொத்தமாக 450 மீட்டர் நீளத்திற்கும், 4 மீட்டர் அகலத்திற்கும் , 40 செ.மீ. (சுமார் 1.5 அடி) ஆழத்திற்கும் தோண்டப்படவேண்டும்.
இச்சாலை தோண்டப்பட்டு, ஏற்கனவே சரள்கள் படர்தப்பட்டுள்ளதால், தோண்டப்பட்ட அளவைக் கணக்கிட முடியவில்லை. இருப்பினும், சாலையைத் தோண்டும் பணியைக் கவனித்திருந்த தெருவாசிகள் சிலர், விதிமுறைகள் கூறும் அளவான 40 செ.மீ. அளவிற்கு சாலை தோண்டப்படவில்லை என்று தெரிவித்தனர்.
தோண்டப்பட்ட சாலையில் 10 செ.மீ. அளவு வெள்ளை (கிணற்று) சரள்கள் (White Gravel), 20 செ.மீ. அளவு Granular Sub Base (GSB),
7.5 செ.மீ. அளவில் இரண்டு அடுக்காக - 15 செ.மீ. அளவிற்கு பாட்டை சரள் (Water Bound Macadam - WBM), அதன் மேல் 10 சதுர
மீட்டருக்கு 4 கிலோ கிராம் அளவில் டாக் கோட் பூசுவது, அதன் மேல் 2 செ.மீ. அளவு Pre-mix Carpet போடுவது. இதுதான் இச்சாலைக்கான
விதிமுறை.
நெய்னார் தெருவைப் பொருத்த வரை, தோண்டப்பட வேண்டிய அளவான 40 செ.மீ. யை விட குறைவாகவே தற்போது சாலை தோண்டப்பட்டுள்ளது
என தெரிகிறது. மேலும், அதற்கு மேல் - ஒப்பந்த விதிகள் படி 47 செ.மீ. அளவிற்கு பொருட்கள் படர்த்தப்பட வேண்டியுள்ளது. விதிமுறைகள்படி
தோண்டப்பட்டிருந்தாலே - இச்சாலை, தோண்டுவதற்கு முந்தைய உயரத்தை விட 7 செ.மீ. அளவற்கு உயர இருக்கும். ஆகவே விதிமுறைகள்படி மீதி பொருட்கள் பரத்தப்படுவது சாத்தியம் குறைவு.
எந்த தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு சாலைகள் அமையப்போகிறது என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி என்றால், மற்றொரு மிகப்பெரிய கேள்வி - சாலைகளைத் தோண்டி
எடுக்கப்படும் மண்ணின் நிலை. தோண்டப்படும் மண் யாருக்கு சொந்தம்?
நெய்னார் தெருவில் தோண்டப்பட்டது மூலம் - விதிமுறைகள்படி தோண்டப்பட்டிருந்தால், 720 க்யூபிக் மீட்டர் அளவிற்கு மண் கிடைத்திருக்கும். அது போல, ஆசாத் தெருவில் விதிமுறைகள் படி தோண்டப்பட்டிருந்தால், 517 க்யூபிக் மீட்டர் அளவிற்கு மண் கிடைத்திருக்கும். அப்பாபள்ளி தெரு சாலை பாதி அளவு தோண்டப்பட்டு, பணிகள் தொடரவில்லை. இத்தெருவில் விதிமுறைகள்படி தோண்டினால் - 680 க்யூபிக் மீட்டர் அளவிற்கு மண் கிடைக்கும். ஆக மொத்தம், இந்த அனைத்து சாலைகளையும் தோண்டியதன் மூலம் - 1917 க்யூபிக் மீட்டர் அளவிற்கு மண் கிடைக்கும்.
சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட இந்த மண், ஒப்பந்த விதிமுறைகள்படி நகராட்சிக்கே சொந்தம் என தெரிகிறது. விதிமுறைகளின் படி - தோண்டப்பட்ட மண் அப்புறப்படுத்தப்பட்டு, நகராட்சியின் 1 கிலோ மீட்டர் தூரம் வரையிலான எல்லைக்குள் ஒப்பந்தக்காரரால் குவிக்கப்படவேண்டும். அதனை நகராட்சி தன தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும்.
நகரின் தாழ்வான சில பகுதிகளில், சிறிய அளவு இந்த மண் கொட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், நகராட்சிக்கு சொந்தமான - பெருவாரியான அளவிலான மீதி மண்ணின் நிலை என்னவென்று தெளிவான தகவல் இல்லை.
3 சாலைகள் போக - 3 மழை நீர் வடிகால் பணிகள் மூலமும், பெரிய அளவிலான மண் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. |