காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், கடந்த 2002-2003ஆம் ஆண்டில், அப்போதைய பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், VAMBAY திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பீட்டில், “காயல்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்” என்ற பெயரில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த இயலாத வகையில் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் இக்கட்டிடம் பழுது பார்க்கப்பட்டு, “காயல்பட்டினம் நகராட்சி நவீன கட்டண கழிப்பறை மற்றும் குளியலறை” என பெயர் பொறிக்கப்பட்டது. கட்டிட அமைப்பும், பெயரும் மாற்றம் கண்டபோதிலும், பூட்டிக் கிடக்கும் நிலையில் மட்டும் மாற்றம் காணப்படவேயில்லை.
காயல்பட்டினத்திலிருந்து, திருவனந்தபுரத்திற்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவை அண்மைக் காலமாக நின்று போனதற்கும், பேருந்து நிலையத்தில் கழிப்பறை இல்லாத காரணத்தால் ஓட்டுநர் - நடத்துநர் சிரமப்படுவதே காரணமாகக் கூறப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிடப்பட்டும் பலனின்றி போகவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தின்போது உறுப்பினர்கள் இதுகுறித்து வலிமையாக கண்டித்துப் பேசினர். அதனையடுத்து, அடுத்த சில நாட்களில் இக்கழிப்பறை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
சிறுநீர் கழிப்பிடம் 4, கதவுள்ள கழிப்பறை 2, குளியலறை 2 என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இதற்கு, “காயல்பட்டினம் நகராட்சி நவீன கட்டண கழிப்பறை மற்றும் குளியலறை” என பெயர் பொறிக்கப்பட்டிருப்பினும், தற்போது இக்கழிப்பறை மற்றும் குளியலறை பொதுமக்களுக்கு இலவசமாகவே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர் ஒருவர் நாள்தோறும் கழிப்பறை அருகிலேயே இருந்து, ஆண் - பெண்களை தனித்தனி வழியே பயன்படுத்தச் செய்வதுடன், தினமும் குறைந்தபட்சம் 3 முறை கழிப்பறை வளாகத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து வருகிறார். |