அரிமா சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆளுநரது வருடாந்திர வருகையையொட்டி, காயல்பட்டினத்தில், இம்மாதம் 28ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்று மாலையில், அரிமா மாவட்ட ஆளுநர் பி.ஜெ.எம்.ஏசுபாலன், மாவட்ட துணை ஆளுநர் உபால்ட்ராஜ் மெக்கன்னா உள்ளிட்டோரடங்கிய குழுவினர், காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் மரங்களை நட்டனர்.
பின்னர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளையும், நுஸ்கியார் முதியோர் இல்லத்திலுள்ள முதியோரையும் சந்தித்து, அவர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு அவர்கள் ஊக்கப்பரிசுகளை வழங்கினர்.
பின்னர், இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராஅத்தைத் தொடர்ந்து, அரிமா சங்க நகரப் பொருளாளர் கே.அப்துல் ரஹ்மான் கொடி வாழ்த்து கூற, அவரைத் தொடர்ந்து, ஜெ.ஏ.லரீஃப் அரிமா பிரார்த்தனை செய்தார். பின்னர், உலக அமைதிக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மேடையில் அங்கம் வகித்தோர், பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அரிமா அறநெறி கோட்பாடு குறித்து, எம்.எஸ்.எம்.மீரா ஸாஹிப் பேசினார். பின்னர், பன்னாட்டு அரிமா சங்கத்தின் குறிக்கோள்கள் குறித்து எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - அரிமா சங்க நகர தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, அரிமா சங்க வட்டார தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் - ஆளுநர் அறிமுக உரையாற்றினார். பின்னர், அரிமா நகர செயலர்களின் அறிக்கையை, செயலர் வி.டி.என்.அன்ஸாரீ சமர்ப்பித்தார்.
அவரது அறிக்கை வாசகங்கள் வருமாறு:-
மேடையில் வீற்றிருக்கும் அரிமா முன்னோடிகளே!
எங்கள் அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் ஊர் பொதுமக்களே! பிர்முகர்களே! பயனாளிகளே!
பிற சங்கங்களிலிருந்து எங்கள் அழைப்பினை ஏற்று வருகை தந்திருக்கும் அரிமா நண்பர்களே! என்றும் எனது அரிமா பணிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் இச்சங்கத்தின் அரிமாக்களே!
எனது சார்பாகவும் சங்கத்தின் சேவை திட்டங்களை பொறுப்பேற்று நடத்தும் ஆற்றல் மிகு செயலர் அரிமா சேக்னா லெப்பை அவர்களின் சார்பாகவும் இந்த செயலர் அறிக்கையினை உங்கள் முன் சமர்ப்;பிக்கின்றேன்.
சென்ற 18 ஜுலை 2012இல் பதவியேற்ற நாங்கள் எங்களுக்கு இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இதுவரை நடைபெற்ற எல்லா மாவட்ட, மண்டல, வட்டார மற்றும் பிற சங்க கூட்டங்களில் கலந்துகொண்டு தோழமையை பெருக்கி உள்ளோம்.
எங்கள் சங்கத்தின் பொதுக்குழு, நிர்வாக குழு கூட்டங்கள் மாதந்தோறும் முறையாக நடைபெற்றன.
சென்ற ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தினத்தன்று எல்.கே.மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. அரிமா தலைவர் கொடியேற்றி சிறப்புரை ஆற்றியதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டன. அன்றைய தினம் முஸ்லீம் மகளிர் உதவிச் சங்கத்துடன் இணைந்து ரமலான் மாதத்தில் ஏழை மக்கள் ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 750 ஏழைகளுக்கு சாரி சுடிதார் மற்றும் அரிசி முதலியன வழங்கப்பட்டன. இதற்கான செலவு ருபாய் 1 1/2 லட்சம்.
எங்களது நட்சத்திர சேவை திட்டமான உயிர் காப்போம் திட்டம் மூலம் பல நோயாளிகளைக் காப்பாற்றினோம். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 2012-2013இல் பள்ளிகள் வசூல் செய்த தொகை ரூபாய் 1,03,926 ஆகும்.
எங்கள் இந்த திட்டம் வெற்றியடைய இந்த பள்ளிகளே காரணம். மீண்டும் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமதூர் மக்களுக்கு குடும்ப அட்டை திருத்தம், பெயர் இணைத்தல் முதலியன செய்வதற்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக சென்னை மாநில வழங்கல் அலுவலகத்தின் வழிகாட்டிதலின்படி வட்டார வழங்கல் அலுவலர்களின் ஒத்துழைப்போடு குடும்ப அட்டை திருத்தும் முகாம் நெய்னார் தெருவில் நடத்தப்பட்டது. இதன் மூலம் 450 பேர் பயன்பெற்றனர். இதில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அர்சு அலுவலர்களுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
பக்ரீத் திருநாளன்று அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்கி ஆறுதல் கூறினோம். நுஸ்கி முதியோர் இல்லம் காட்டு மொகுதூம் பள்ளி ஆகிய இடங்களுக்கு சென்று உணவு வழங்கினோம்.
கே.எம்.டி. மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் பிற மண்டல கூட்டங்களிலும் பிற சங்க கூட்டங்களிலும் கலந்து கொண்டதுடன் சேவை திட்டங்களிலும் பங்கு பெற்றது ஒரு வித்தியாசமான செயலாக அமைந்து அனைவராலும் பாராட்டப்பட்டது.
நமதூர் அரசு மருத்துவமனையில் நம் அரிமா சங்கம் சார்பில் மூலிகை தோட்டம் அமைத்து மூலிகை கன்றுகள் நடப்பட்டன. அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு வழிப்பாதை அமல்படுத்தியதால் போக்குவரத்தை நெறிப்படுத்துவற்கு 8 அறிவிப்பு பலகைகள் சுமார் 35,000 ரூபாய் செலவில் அமைத்து கொடுக்கப்பட்டவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
2012-2013 அரிமா ஆண்டில் நமது பட்டயத் தலைவர் அரிமா டி.ஏ.எஸ்.முகம்மது அபு+பக்கர் அவர்கள் வட்டார தலைவராக பதவியேற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் நமது சங்கத்திற்கும் பெருமை சேர்த்;து வருகிறார்.
எங்கள் சேவையினை பாராட்டி பன்னாட்டு அரிமா சங்கத்திலிருந்து Membership Excellence Award மற்றும் E-Club Award முதலியன கிடைத்துள்ளன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினமும் பல சேவை திட்டங்களை செய்ய இருக்கின்றோம். 5 தையல் இயந்திரங்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாயளவில் மருத்துவ உதவி, ரூபாய் 9000 தொகையில் கல்வி உதவி, தொழில் முனைவோர் உதவி, மகளிர் நல உதவி ஆகியன செய்ய இருக்கிறோம்.
எந்த ஒரு நிர்வாகத்தின் வெற்றிக்கும் தலைமை பண்பே கார்ணம் என்பதை மனதில் கொண்டு நாங்கள் செயல்பட்டதால் இன்று பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நிற்கிறோம். இந்த வெற்றி எங்கள் தலைவர் அரிமா ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கதுல்லா அவர்களையே சேரும். எங்கள் குறிக்கோள்கள் முழுமையாக நிறைவேற அவர்களது வழிகாட்டலும் தூண்டுதலும்தான் மிக உறுதுணையாக இருக்கிறது. அவருக்கு முதற்கண் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனது சக செயலர் அரிமா சேக்னா லெப்பை பொருளாளர் அரிமா அப்துல் ரஹ்மான் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொண்டு இந்த செயலர் அறிக்கையை நிறைவு செய்கிறேன். நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையின் வாசகங்கள் அமைந்திருந்தன.
பின்னர், சிறப்பு விருந்தினரான அரிமா மாவட்ட ஆளுநர் பி.ஜெ.எம்.ஏசுபாலன் உரையாற்றினார். காயல்பட்டினம் நகர அரிமா சங்கத்தின் மக்கள் சேவைகள் தனித்துவம் பெற்றுத் திகழ்வதாக அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
பின்னர், வாழ்நாள் சாதனையாளர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து - நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர், நகர அரிமா சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமா முதல் நிலை துணை ஆளுநர் உபால்ட் ராஜ் மெக்கன்னா உறுதிமொழியை முன்மொழிய, புதிய உறுப்பினர்கள் அதனை வழிமொழிந்து, தங்களை உறுப்பினர்களாக்கிக் கொண்டனர்.
பின்னர், அரிமா முதல் நிலை துணை ஆளுநர் உபால்ட் ராஜ் மெக்கன்னா, இரண்டாம் நிலை துணை ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம், மண்டல தலைவர் எஸ்.தர்மன் டி ரோஸ், சுதந்திர லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், மேடையில் வீற்றிருந்தோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நெறியாளர் மு.அப்துல் ரசாக் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இவ்விழாவில், நகர அரிமா சங்க அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தகவல்:
M.S.M.மீரா ஸாஹிப்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |