கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்தின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வழிநடத்துவதற்கு தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 48ஆவது செயற்குழுக் கூட்டம் 20.01.2013 அன்று காலை 11.00 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் கூடியது.
செயலர் உரை:
மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
அவரைத் தொடர்ந்து, மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
மன்றத்தின் நடப்பு நிர்வாகக் குழுவின் மூன்று ஆண்டு கால அளவைக் கொண்ட பொறுப்புக் காலம் நிறைவடைய இன்னும் 45 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், புதிய செயற்குழுவிற்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 03ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட படி, மன்றத்தின் கவுரவ ஆலோசகர்களான ‘அமீன் டூல்ஸ்’ சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ‘யுனைட்டெட் ஜுவெல் பாக்ஸ்’ சாளை அப்துல் ஜலீல், ‘கே.ஆர்.எஸ்.ஜுவெல்லரி’ கிதுரு முஹம்மத், மன்றத்தின் மூத்த பொதுக்குழு உறுப்பினர் கோஸ் முஹம்மத் ஆகியோர், தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்றவுள்ளதாகக் கூறினார்.
இத்தேர்தலை முறைப்படி நடத்திடுவதற்காக கலந்தாலோசிக்கும் பொருட்டு, தேர்தல் அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பளர்களாகக் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறினார்.
ஆலோசனை நேரம்:
பின்னர், நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. மன்றப் பொறுப்புகளை ஏற்க ஆர்வமுள்ள உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அப்போது மன்ற நிர்வாகத்தின் சார்பில் விளக்கப்பட்டது.
நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்:
03.03.2013 அன்று நடைபெறவுள்ள மக்வாவின் புதிய செயற்குழு தேர்தலுக்கு, தலைமை தேர்தல் அதிகாரியாக ஜனாப் ஜலீல் அவர்களை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 2 - அதே வேட்பு மனு படிவம்:
கடந்த தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வேட்பு மனு படிவத்தையே வரவிருக்கும் தேர்தலிலும் பயன்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – தேர்தல் பணிக்கு துணைக்குழு நியமனம்:
03.03.2013 அன்று நடைபெறவுள்ள மக்வாவின் புதிய செயற்குழு தேர்தலின்போது உதவிப் பணிகள் செய்வதற்காக, உதுமான் (LIMRA), உதுமான் அப்துர்ராஜிக், செய்யது ஐதுரூஸ் (SEENA) மற்றும் சாஹிப் தம்பி ஆகியோரை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 4 – ஸ்டேஷனரி பணிகள்:
தேர்தல் ஸ்டேஷனரி வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பை, மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதிலிடம் இக்கூட்டம் ஒப்படைக்கிறது.
தீர்மானம் 5 – தேர்தல் தேதி விபரங்கள்:
03.03.2013 அன்று நடைபெறவுள்ள மக்வாவின் புதிய செயற்குழு தேர்தலுக்கு,
மனு தாக்கல் செய்ய துவக்க நாள்: 03.02.2013
மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: 17.02.2013
மனு வாபஸ் பெற கடைசி நாள்: 24.02.2013
இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்: 25.02.2013
என இக்கூட்டத்தில் தேதிகள் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 6 – தேர்தல் நிகழ்விடம்:
03.03.2013 அன்று நடைபெறவுள்ள மக்வாவின் புதிய செயற்குழு தேர்தலை, ஜனாப் நெய்னா காக்கா அவர்கள் இல்லத்தில், அன்று காலை 10.30 முதல் மதியம் 01.30 வரையில் நடத்தவும், அதே இடத்தில் மாலை 03.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 7 – தேர்தல் விருந்து:
03.03.2013 அன்று நடைபெறவுள்ள மக்வாவின் புதிய செயற்குழு தேர்தலையொட்டி, அன்று மதியம் அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறிக்கறி விருந்து வழங்கி உபசரிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை 11.00 மணிக்குத் துவங்கிய கூட்டம் மதியம் 01.15 மணியளவில் அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கவுரவ ஆலோசகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
அறிவிப்பு:
தேர்தல் பணிச்சுமைகளைக் குறைத்திடும் பொருட்டு, தேர்தல் நாளான 03.03.2013 அன்று, வாக்குப் பதிவு நேரமான காலை 10.30 மணிக்கு முன்பாக நிகழ்விடத்திற்கு வந்து ஒத்துழைக்குமாறு மன்ற நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யது ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |