உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 29.01.2013 அன்று குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை - கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து காயல்பட்டினம் வந்திருந்த, குடிநீர் வினியோகத்திற்கான சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் குடிநீர் பரிசோதனையை மேற்கொண்டார்.
ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில், சுத்திகரிக்கப்படுவதற்கு முன்னுள்ள நீர், சுத்திகரிக்கப்பட்ட பின்னர் பெறப்பட்ட நீர், காயல்பட்டினத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் பெறப்படும் நீர் ஆகியவற்றின் மாதிரியை, சுமார் 1000 டிகிரி சென்டிக்ரேட் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்ட - 48 மணி நேர பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கண்ணாடி புட்டிகளில் அவர் சேகரித்து எடுத்துக்கொண்டார். 15 வேலை நாட்களுக்குள், பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என அவர் அப்போது தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி வளாகம், முத்தாரம்மன் கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, எல்.எஃப்.வீதி, பெரிய தெரு சந்திப்பு (ஐ.ஓ.பி. வங்கி அருகில்), சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), மங்களவாடி, கொச்சியார் தெரு ஆகிய - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பரிசோதனைக்காக மாதிரி நீர் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், அலுவலர்கள் பாஸ்கரன், கண்ணன் ஆகியோர் இந்நிகழ்வுகளின்போது உடனிருந்தனர். |