தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வந்தார்.
காயல்பட்டினம் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை எரிவாயுக் கலன் அமைத்திட இடம் தேர்வு செய்வதற்காக, திருச்செந்தூர் சாலைக்கருகில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியே தற்போது நடைமுறையிலுள்ள ஒருவழிப்பாதையை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையையொட்டியுள்ள ஓடைக்கருகிலும், அந்த ஓடை துவங்குமிடத்திலும் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடத்தையும், கடற்கரைப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன், வட்டாட்சியர் ப.நல்லசிவன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பொதுநல அமைப்பினர் உடனிருந்தனர். |