காயல்பட்டினம் அரசு நூலகத்தில் விரைவில் கம்ப்யூட்டர் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும் என, 100 புரவலர்கள் இணையும் விழாவில் மாவட்ட நூலகர் தெரிவித்துள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கிளை நூலகத்தின் நூலக புரவலர்களாக 100 பேர் இணையும் நிகழ்ச்சி, 02.02.2013 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நூலக அபிமானிகளான ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி டாக்டர் செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், நூலக புரவலர் காயல் கருப்பசாமி, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலக புரவலரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ க.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார். காயல்பட்டினம் கிளை நூலக கட்டிட விரிவாக்கப் பணியில், வாசகர் வட்டத்துடன் இணைந்து பணியாற்ற தனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளை அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர், தனி மனிதராக முயற்சிகள் மேற்கொண்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த நூறு பேரை - ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி நூலக புரவலர்களாக இணையச் செய்த எல்.டி.இப்றாஹீம் அவர்களுக்கு நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், அதிகளவிலான ஆர்வலர்களை நூலக புரவலர்களாக இணையச் செய்யக் காரணமான நிகழ்வுகளை எல்.டி.இப்றாஹீம் விளக்கிப் பேசினார்.
அடுத்து உரையாற்றிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலையில், காயல்பட்டினம் ரிஸ்வான் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் - அங்குள்ள குறுகிய இடத்தில் நூலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருவதையும், அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் புத்தகங்கள் கடந்த மழைக்காலத்தில் நீரில் நனைந்துவிட்ட நிலையில், நூலகர் முஜீப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாத்த நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி, புதிக கட்டிடத்தில் நூலகம் செயல்படத் துவங்கும் வரை நகரிலுள்ள யாரேனும் தனி நபர்களோ, பொது நல அமைப்பினரோ பாதுகாப்பான இடத்தை தற்காலிகமாக நூலகத்திற்குத் தந்துதவுமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர், பரமன்குறிச்சி கிளை நூலகர் ராஜதுரை, காயல்பட்டினம் கிளை நூலக அபிமானிகளான ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், டாக்டர் செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, நூலகத்தில் புதிதாக புரவலர்களாக இணையும் 100 பேரின் புரவலர் சந்தா தொகையான ஒரு லட்சம் ரூபாயை, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட எல்.டி.இப்றாஹீம், நூலக வாசகர் வட்டத் தலைவர், நகர்மன்றத் தலைவர் ஆகியோரிணைந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம், காயல்பட்டினம் கிளை நூலகர் அ.முஜீப் ஆகியோரிடம் வழங்கினர்.
புதிதாக புரவலர்களாக இணைந்த 100 பேரின் விபரப் பட்டியல் வருமாறு:-
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு வாசகர் வட்டம் சார்பில் அதன் நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கினர்.
பின்னர், சிறப்பு விருந்தினர் க.மந்திரம் உரையாற்றினார்.
ஒரே நேரத்தில் 100 பேர் இந்நூலகத்தில் புரவலர்களாக இணையும் நிகழ்ச்சி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது மாலையுடன் நிறைவுறும் நூலக நேரத்தை காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை - 12 மணி நேரம் செயல்படத்தக்கதாகத் தரம் உயர்த்த பொது நூலக இயக்குநரிடம் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியரை வைத்து விமரிசையாக நடத்த முதலில் கருதியதாகவும், நூலக கட்டிட திறப்பு விழா நடைபெறுகையில் அவரை அழைத்து நகர மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் கிளை நூலகத்தில், கணினி வசதி செய்யப்படும் என்றும், இன்டர்நெட் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும் என்றும், நூலகத்தில் பெண்களுக்குத் தனிப்பிரிவு அமைக்க பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், புதிய கட்டிடம் செயல்படத் துவங்கிய பிறகு, மின்தடை நேரங்களை சமாளிக்க தேவைப்படும் இன்வெர்ட்டர் கருவிக்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சிறப்பு விருந்தினருக்கும், கிளை நூலகர் முஜீபுக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இறுதியாக, நூலகர் அ.முஜீப் நன்றி கூற, நூலக புரவலர் எஸ்.கே.ஸாலிஹ் இறைப்பிரார்த்தனை செய்ய, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், காயாமொழி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பிச்சிவிளை ஆகிய பகுதிகளின் அரசு நூலகர்கள், புதிதாகப் புரவலர்களாக இணைவோர், நகரப் பிரமுகர்கள், நூலக வாசகர் வட்ட அங்கத்தினர், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
[கூடுதல் தகவல் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 21:58 / 03.02.2013 – தகவல் உதவி: L.T.இப்றாஹீம்; படங்கள் உதவி: A.K.இம்ரான்] |