இறையுதவியாலும், மிகச் சரியான திட்டமிடலுடனும் நெறிப்படுத்தப்பட்ட இந்த இஜ்திமா, நம் ஊரில் பலரையும் வியக்கவும், மெய் சிலிர்க்கவும் வைத்தது. நிறைய மக்கள் திரள்; கட்டுக்கோப்பான வழி நடத்தல்; எளிமை என்றாலும் அவசியத் தேவைகள் அனைத்தும் பேணப்பட்டமை என்று நிறைய ஆச்சரியங்கள்! இஜ்திமாவுக்குத் திரண்டு வந்து நற்செய்திகளைப் பெற்றுக் கொண்டவர்கள், செல்லும் இடங்களிலெல்லாம் நன்னெறி வாழ்ந்திடும் நடமாடும் முன்மாதிரிகளாய் பரிணமிக்க இறையோனை இறைஞ்சுவோம்!
‘90களில், (சென்னை மண்ணடி செம்புதாஸ் தெரு) மஸ்ஜித் மகுதூமியை மையமாகக் கொண்டு கண்ணியத்திற்குரிய தாவூத் ஷரீஃப் சாஹிப் [தப்லீக் சம்பந்தப்பட்ட பல நூற்களை உருதுவிலிருந்து தமிழாக்கம் செய்தவர்கள்] அவர்களை அமீராக ஏற்று அவர்களின் சீரிய வழி நடத்தலில் ஒருமுறை சென்றது; கல்லூரி நண்பர்கள் இணைந்து தாம்பரம் ஜமாஅத்தின் தலைமையில் பிறிதொரு முறை சென்றது, கல்லூரியின் வாராந்திர கஷ்த் பணியில் அவ்வப்போது பங்குபெற்றது, ஒன்றிரண்டு முறை அபுதாபி மஷாஃபா மர்கஸ் வாராந்திர மொழிவாரி ஒன்றுகூடலில் கலந்து கொண்டது, அன்பு நண்பருடன் ஓரிரு வாரங்கள் ஆத்தூர் ஜூமாராத்துக்கு சென்றது என்று நன்மையை ஏவும் இவ்வியக்கத்துடனான நற்பணியில் என்னுடைய தொடர்பு மிக மிகக் குறைவானதே- சொற்பமானதே என்றிருப்பினும், இவர்கள் மீதான உள்ளார்ந்த அன்பும் கண்ணியமும் என்றும் நிலைத்திருக்கும் படி இவர்களின் உழைப்பின் தூய்மை என் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
“உத்’வூ இலா சபீலி ரப்பிக்க பில் ஹிக்மத்தி வல் ம’வுஇதத்தில் ஹஸனா’ என்னும் இறைவாக்குக்கேற்ப அறிவார்ந்த முறையில் தேர்ந்தெடுத்த அழகிய வார்த்தைப் பிரயோகங்களுடன் - ஒரு நேர்த்தியான வலைப்பின்னலுக்குள் - [6 நம்பர்] இபாதத்களின் பக்கம் விளிம்பு நிலை மக்களை இவர்கள் அழைக்கும் பாங்கு சிறப்புக்குரியது.
‘தலைவனும் தொண்டன் தான்!’ என்னும் அண்ணல் நபிகளாரும், அவர்தம் தோழர்களும் காட்டி தந்த நெறிமுறைகளை - வாழ்வியல் ஒழுக்க விழுமியங்களை - வழுவாது பின்பற்றும் நல்லோர்கள் நிறைந்த ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு.
துவக்கக் காலம் முதல் சூஃபியிஸவாதிகளால் மட்டுமல்ல; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பிளவுண்ட பல்வேறு இயக்கவாதிகளாலும் (அவர்கள் தத்தமது இருப்பினை நிலைபடுத்திக் கொள்வதற்காக, தப்லீக் நூற்களின் நம்பகத்தன்மை, தீமைகளைத் தடுப்பதில் முன்னணி வகிக்காமை உட்பட) இவ்வமைப்பின் மீது முன் வைக்கும் எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் மீள்பார்வைக்குரியவையே! மறு பரிசீலனைக்கு உட்பட்டவையே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross