காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நிகழ்ச்சிகள் இம்மாதம் 06, 07 தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய பரந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமா - ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 50 ஆயிரம் ஆண்கள், பேருந்துகளிலும், வேன், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து நிகழ்விடத்தில் திரண்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்திலும், இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களே நிறைந்து காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடுவதற்காக, தூத்துக்குடியிலிருந்து வந்த பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், வழமை போல ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலை வழியே சென்றன.
பேருந்து, வேன், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்தங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இஜ்திமாவில் கலந்துகொள்வோருக்காக பந்தலிலேயே - மாவட்ட வாரியாக தனித்தனி மெஸ்களில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்க வருவோரிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெற்று, முதல் நாள் இரவு உணவு, இரண்டாம் நாள் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வினியோகிக்கப்பட்டது.
06.04.2013 சனிக்கிழமையன்று மாலை 06.30 மணியளவில் மஃரிப் தொழுகையுடன் இஜ்திமா நிகழ்வுகள் துவங்கின. மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரவு 09.00 மணியளவில், இஷா தொழுகையுடன் நிறைவுற்றது.
இரண்டாம் நாளான ஏப்ரல் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இஜ்திமா நிறைவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல்பட்டினத்திலுள்ள இஜ்திமா நிகழ்விடத்திற்கு கூட்டங்கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 08.30 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனை - துஆ மஜ்லிஸுடன் நிறைவுற்றது. உலக அமைதி, சகோதரத்துவம், சமுதாய ஒற்றுமை, நோய் நிவாரணம், சமய நல்லிணக்கம், மனித நேயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த இஜ்திமாவில், அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர், இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும் நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இஜ்திமா நிகழ்வில் காணக்கிடைத்தவை:
>> வழமையாக இதுபோன்று மக்களை ஓரிடத்தில் திரளச் செய்வதற்கு கையாளப்படும் பரப்புரை வழிமுறைகளான சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரம், சுற்றறிக்கை, தட்டிப் பலகை, பதாகைகள், துண்டுப் பிரசுரம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிவாசல்களிலும், தனிநபர்களை தனித்தனியாக சந்தித்தும் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தவிர வேறெந்த பரப்புரை நடைமுறையும் கையாளப்படவில்லை
>> இஜ்திமாவுக்காக, யாரிடமும் நன்கொடையாக எதுவும் ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்படாத நிலையில், தன்னார்வத்துடன் பலர் பலவற்றுக்கு பொருளாதார அனுசரணை அளித்திருந்தனர்
>> சுமார் 50 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில், பேச்சாளர்கள் யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. பிரம்மாண்டமான மேடையோ, ஆடம்பர தோரணங்களோ எதுவுமில்லை
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தும், காவல்துறையினருக்கோ, உளவுத் துறையினருக்கோ சிறிதும் வேலை வைக்கவில்லை. யாருக்கிடையிலும் வாக்குவாதங்களோ, தர்க்கங்களோ, சண்டை - சச்சரவுகளோ சிறிதளவு கூட நடைபெறவில்லை
>> “வாழ்க, ஒழிக” முழக்கங்கள் எதுவுமில்லை
>> எந்த அமைப்பையோ, இயக்கத்தையோ - போற்றியோ, தூற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாறாக, இறையச்சம், இஸ்லாமிய வாழ்வியல் உள்ளிட்டவை குறித்தே இரு நாட்களிலும் மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்
>> பேருந்து, வேன், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தனித்தனியே வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை பல நாட்களுக்கு முன்பாகவே முறைப்படி முன்பதிவு செய்து, அவற்றிலேயே பயணம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது
>> தீ விபத்து நேர்ந்தால் பாதுகாப்பதற்காக, திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும், காயல்பட்டினம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் முகாமிட்டிருந்தன
>> யாருக்கும் உடல் நலன் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையிலிருந்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளையிலிருந்தும் ஆம்புலன்ஸ் வாகனம் ஆயத்த நிலையிலிருந்தது
>> இஜ்திமாவையொட்டி நடைபெற்ற பல்வேறு ஏற்பாட்டுப் பணிகள் அனைத்திலும், அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்கள், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மட்டும் கவனம் சிதறாமல் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்
>> இஜ்திமா பந்தலையொட்டி, தொழுகைக்காக பொதுமக்கள், இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தண்ணீரில் சுத்தம் செய்வதற்கும் (உளூ) எளிமையும் - பிரம்மாண்டமுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
>> இஜ்திமா பந்தலைச் சுற்றி ஏராளமான விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் தம் கடை விற்பனைப் பொருட்களை நியாயமான விலையிலேயே விற்றனர். யாரும், எங்கும் பேரம் பேசியதையோ, சர்ச்சையில் ஈடுபட்டத்தையோ காண முடியவில்லை
>> ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய மக்கள் திரட்சியையும், போக்குவரத்து வழித்தட மாற்றத்தையும் கருத்திற்கொண்டு, இஜ்திமா பந்தலுக்கு நேரடியாக வந்து செய்தி சேகரிக்க வந்த ஊடகங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வழங்கப்படவில்லை
>> நிலைப்படம் (ஸ்டில் ஃபோட்டோ), அசைபடம் (வீடியோ) உள்ளிட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை
>> பெரும்பெரும் செல்வந்தர்களும், ஏராளமான தொழிலாளர்களுக்கு ஊதியமளிக்கும் தொழிலதிபர்களும் இந்த இஜ்திமாவில் கலந்துகொண்டு, மக்களோடு மக்களாக மண் தரையில் விரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் விரிப்புகளில் அமர்ந்ததும், படுத்ததும், பொது கழிப்பறையைப் பயன்படுத்தியதும், வரிசையில் நின்று உணவு டோக்கனைக் காண்பித்து உணவுண்டதும் அவர்களை முன்னரே அறிந்தவர்களுக்கு வியப்பூட்டிய அம்சங்கள்
>> இஜ்திமா நடைபெறுவதையும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பரந்து விரிந்த பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கேள்வியுற்று, இஜ்திமாவுக்கு முந்திய நாளான ஏப்ரல் 05ஆம் தேதியன்று, நேரில் பார்க்க வந்திருந்த பெண்களுக்கு, இருபாலர் ஓரிடத்தில் கலந்திருப்பது இஸ்லாமிய முறையல்ல என்று எடுத்துரைக்கப்பட்டு, திரும்பிச் செல்ல பொறுப்பாளர்களால் வலியுறுத்தப்பட்டது. பலமுறை எடுத்துக்கூறியும் அப்பெண்கள் திரும்பிச் செல்ல தாமதமானபோது, பந்தலின் ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு இருள்மயமாக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்
>> இஜ்திமாவுக்காக பகுதி வாரியாக உணவு வினியோகம் செய்ய தனித்தனியாக 11 மெஸ்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்திலும் சராசரியாக 3,500 டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது
>> 40 ஆயிரம் மக்கள் மட்டுமே இஜ்திமா ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதாக அறிய முடிகிறது எனினும், பெறப்பட்ட உணவு டோக்கன்கள் கணக்கீட்டின்படி சுமார் 40 ஆயிரம் பேர், உணவு டோக்கன் பெறாமல் கலந்துகொண்ட உள்ளூர் – வெளியூர் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் என்ற கணக்கில் சுமார் 50 ஆயிரம் ஆண்கள் கலந்துகொண்டதாக கணக்கிடப்பட்டது.
>> உணவு ஏற்பாடுகள் சில வேளைகளில் சுவை நிறைந்தும், சில வேளைகளில் சுவை குன்றியும் காணப்பட்டது. எனினும், உணவுண்டவர்கள் யாராலும் அது சர்ச்சையாக்கப்படவில்லை
>> எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் மக்கள் கலந்துகொண்டதால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கீற்றுப்பந்தலையொட்டி சாமியானா - துணிப்பந்தலும் அமைக்கப்பட்டது
>> இஜ்திமாவுக்கு வருவோர் தங்குவதற்காக, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பள்ளிவாசல்களில், பொதுமக்கள் கழிப்பறை செல்வதற்கும், குளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது
>> காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமாவையொட்டி, சில கேள்விகளைக் கேட்டும், விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. அவற்றில், தொடர்பு எண்களாக 4 கைபேசி எண்களும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த எண்களுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து எண்களும் செயலிழந்து இருந்ததை அறிய முடிந்தது
>> இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்கள் கருத்து வேறுபாடின்றி, கூட்டங்கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர்
>> இஜ்திமாவில் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டிருந்த காவல்துறையினருக்கு குறிப்பிடும் அளவில் பணிகள் எதுவுமில்லாதிருந்தமையால், அவர்களும் பொதுமக்களுக்கு வழிகாட்டி உதவும் பணிகளைச் செய்தனர்.
>> இஜ்திமாவுக்கு பேருந்துகளில் வந்தோர், பேருந்து நடத்துநருக்கு சிரமம் அளிக்காமல், நிகழ்விடம் வந்திறங்கிய பிறகு பயணியர் எண்ணிக்கை விபரங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டனர்.
>> இஜ்திமா நடைபெற்ற நாட்களில், காயல்பட்டினம் கடற்கரை தொழுமிடத்தில், மஃரிப் - இஷா கூட்டுத் தொழுகைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|