காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நிகழ்ச்சிகள் 06.03.2013 சனிக்கிழமையன்று (நேற்று) துவங்கின. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய பரந்த மைதானத்தில் நடைபெறும் இந்த இஜ்திமா - ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பேருந்துகளிலும், வேன், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து நிகழ்விடத்தில் திரண்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்திலும், இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களே நிறைந்து காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடுவதற்காக, தூத்துக்குடியிலிருந்து வந்த பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், வழமை போல ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலை வழியே சென்றன.
பேருந்து, வேன், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்தங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஜ்திமாவில் கலந்துகொள்வோருக்காக பந்தலிலேயே - மாவட்ட வாரியாக தனித்தனி மெஸ்களில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்க வருவோரிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெற்று, நேற்றிரவு உணவு, இன்று காலை, மதியம் மற்றும் இரவு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 06.30 மணியளவில் மஃரிப் தொழுகையுடன் இஜ்திமா நிகழ்வுகள் துவங்கின. மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நேற்றைய முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரவு 09.00 மணியளவில், இஷா தொழுகையுடன் நிறைவுற்றன.
பின்னர், இரவுணவை, அந்தந்த மாவட்டத்தினர் அவரவர் பகுதி மெஸ்களில், நீண்ட வரிசைகளில் நின்று, பொறுப்பாளர்களிடம் உணவு டோக்கனில் பதிவு பெற்றுவிட்டு, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். ஒரு ஸஹனுக்கு (தட்டு) 4 பேர் என அவர்கள் பந்தியில் அமர்ந்து உணவுண்டனர். காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், “காயல்பட்டினம் மெஸ்”இல் உணவுண்டனர்.
முடித்துவிட்டு, பலர் இஜ்திமா பந்தலிலேயே உறங்கினர். ஒரு சாரார் பள்ளிவாசல்களிலும், இன்னும் சிலர் கடற்கரை மணற்பரப்பிலும் படுத்துறங்கினர்.
இஜ்திமாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், இன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு, 06.00 மணி முதல் காயல்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். சிலர் கடல் நீரில் கால் நனைத்தும், பலர் கடலில் குளித்தும் தமது காலைக் கடன்களை முடித்துக்கொண்டனர்.
கடற்கரை தொழுமிடத்திலுள்ள கிணற்றடியிலும், கடைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிவாசல்களின் கிணறுகளிலும் பலர் குளித்தனர். பின்னர், காலை 08.30 மணியளவில் அனைவரும் நிகழ்விடமான இஜ்திமா பந்தலுக்கு திரும்பிச் சென்றனர்.
நேற்று மட்டும் சுமார் 20 ஆயிரம் ஆண்கள் திரண்டிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இஜ்திமா நிறைவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல்பட்டினத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர், இஜ்திமா நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்) |