ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும், “காயலர் தினம் - 2013” என்ற தலைப்பிலான காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி களிப்புடன் கொண்டாடப்பட்டுள்ளது. பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தி, கண்களில் கண்ணீர் மல்கச் செய்தார் காயல் க்ராண்ட் மாஸ்டரான சிறுமி.
காயலர் தினம் - 2013 குறித்து, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை வருமாறு:-
மறையளித்த இறையோனுக்கே மாபெரும் புகழனைத்தும் உரித்தாகுக!
காயலர் தினம் - 2013:
இறையருளால் எமது துபை காயல் நல மன்றத்தின் 2013ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், உறுப்பினர்களின் அனுசரணையில் "காயலர் தினம் 2013" என்ற தலைப்பில் களிப்புடன் கொண்டாடப்பட்டது.
துணைக்குழுக்களின் சிறப்பேற்பாடுகள்:
இக்கூட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் பூங்கா அனுமதி முதற்கொண்டு, உணவு ஏற்பாடு, வாகன வசதிகள், சந்தா வசூல், தேவையான பொருட்களை எடுத்துச் செல்லல், விருந்தினர்கள் உபசரிப்பு, பவுத்தி சாப்பாடு, விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு, தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் துணைக்குழுவினர் கச்சிதமாக செய்திருந்தனர். இந்த ஏற்பாடுகளைப் பிசகின்றி செய்து முடிப்பதற்காக, வாரந்தோறும் துணைக்குழுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு, செய்து முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும், செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்வது குறித்தும் கலந்தாலோசித்து, முடிவுகள் எடுக்கப்பட்டது.
காயலர்கள் வருகை:
காயலர் தினம் - 2013 நிகழ்வு நாளன்று, அமீரகம் வாழ் காயலர்கள் அனைவரும் சாரி சாரியாக நிகழ்விடமான பூங்காவை நோக்கி குறித்த நேரத்திலேயே வரத் தொடங்கிவிட்டனர். வாகன வசதி இல்லாதோரை அழைத்து வருவதற்காக தேரா நகரில் அமைந்துள்ள அஸ்கான் D பிளாக்கிலிருந்து பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேனீர் - சுண்டல் வரவேற்பு:
நிகழ்விடம் வந்தோரை வரவேற்குமுகமாக காயல்பட்டினம் பாணியிலான இஞ்சி கலந்த தேனீருடன், சூடான சுண்டல் பரிமாறப்பட்டது.
காயலர் அரட்டை:
ஜும்ஆ தொழுகை நேரம் வரை உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் ஒருவரையொருவர் சந்தித்து, முகமன் கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டவர்களாக அரட்டையில் ஈடுபட்டனர்.
உறுப்பினர் விபரங்கள் பதிவு:
கூட்ட நிகழ்வு நாளன்று, உறுப்பினர்கள் அனைவரும் நண்பகல் 12.00 மணிக்குள் வந்து, தமது சுய விபரங்களைப் பதிவு செய்து, குலுக்கல் மூலம் தங்க நாணயத்தைப் பரிசாகப் பெற்றுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, நண்பகல் 12.00 மணிக்கு முன்பாக நிகழ்விடத்திற்கு வருகை தந்தவர்களின் தொடர்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, குலுக்கல் பரிசுக்காக பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
ஜும்ஆ தொழுகைக்குப் பின், பொதுக்குழு கூட்டம் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் தலைமையில், துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, அதன் கவுரவ தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எச்.என்.டி.ஹஸ்புல்லாஹ் மக்கீ இறைமறை திருக்குர்ஆனின் சில வசனங்களை கிராஅத்தாக ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
அவரைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
நகர்நலப் பணிகளே காயல் நல மன்றங்களின் முக்கிய நோக்கமென்று கூறிய அவர், அந்நோக்கம் சிறப்புற செயலாக்கம் பெறுவதற்கு, அனைத்து உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் மிகவும் இன்றியமையாதது என்று கூறினார்.
துபை கா.ந.மன்ற தலைவர் உரை:
அடுத்து, துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.
மன்றத்தால் நடத்தப்படும் நடப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடந்தேற, அவற்றுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மட்டுமே செய்து வருவதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இது விஷயத்தில் மனமுவந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு, உதவியும் - ஒத்துழைப்பும் வழங்கினால் இன்னும் அழகாகவும், நேர்த்தியாகவும் நிகழ்ச்சிகளை நடத்திட இயலும் என்றும் கூறிய அவர், நடப்பு கூட்டத்திற்கான அனைத்தேற்பாடுகளையும் திறம்பட செய்த அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
பொதுநலப் பணிகளில் ஈடுபடுவது அல்லாஹ்வுக்கு உவப்பான பணி என்றும், இறை உவப்பைப் பெற்றிடுவதற்காக அனைத்துறுப்பினர்களும் மன்றப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அபூதபீ கா.ந.மன்ற தலைவர் உரை:
அடுத்து, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ உரையாற்றினார்.
இதற்கு முன் அமீரக காயல் நல மன்றமாகவும், இப்போது துபை காயல் நல மன்றமாகவும் இயங்கி வரும் இம்மன்றம் 25 ஆண்டு காலமாக இறையருளால் சிறப்புற செயல்பட்டு வருவது, காயல்பட்டினத்தின் நகர்நலச் சேவையில் ஒரு பெரிய மைல் கல் என்று கூறிய அவர், இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும், இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இவ்வறப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்றும் கூறினார்.
பல் மருத்துவ இலவச முகாம் குறித்து விளக்கம்:
பின்னர், அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட பல் மருத்துவ இலவச முகாம் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் விளக்கிப் பேசினார்.
பொது அறிவுப் போட்டி:
இவ்வாறாக உரைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, பார்வையாளர்களிடம் - இடையிடையே பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மதிய உணவு - களறி சாப்பாடு:
பின்னர், நாவில் நீர் சுரக்கச் செய்யும் சுவைமிக்க காயல் களரி சாப்பாடு, அனைவருக்கும் சுடச்சுட பரிமாறப்பட்டது. சாப்பாட்டின் சுவை, சாப்பிட்ட அனைவரையும் நமதூருக்கே கொண்டு சென்றுவிட்டதாக, கூட்டத்தில் பங்கேற்றோர் பலர் மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறியது ஏற்பாட்டாளர்களை மகிழச் செய்தது.
கண்ணீரை வரவழைத்த காயல் க்ராண்ட் மாஸ்டர்:
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூனின் மூத்த புதல்வியான 8 வயது சிறுமி உம்மு உமாரா நடத்திய GRAND MASTER நிகழ்ச்சி வந்திருந்த அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
புனித குர்'ஆனில் கூறப்பட்ட மலக்குகள், நபிமார்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள், தீயவர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் - இவற்றில் ஒன்றின் பெயரை போட்டியாளர் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம், ‘Kayal Grand Master’ உம்மு உமாரா கேள்விகளைக் கேட்பார். அதற்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்று மட்டும் போட்டியாளர் பதிலளிக்க வேண்டும். சில கேள்விகளுக்குப் பின், போட்டியாளர் மனதில் நினைத்த பொருளின் பெயரை க்ராண்ட் மாஸ்டர் சொல்வார். இதுவே போட்டி முறை.
இவ்வாறாக போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்க, போட்டியாளர்கள் மனதில் நினைத்ததை, க்ராண்ட் மாஸ்டர் உம்மு உமாரா மிகவும் துல்லியமாகக் கண்டுபிடித்ததும், சில சமயங்களில் க்ராண்ட் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு போட்டியாளர் கவனக் குறைவால் தவறான பதிலளிக்கையில் அதையும் அவர் திருத்திக் கொடுத்ததும் பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தி, அவர்களின் கண்களிலும் கண்ணீரை மல்கச் செய்தது.
சிறுமி உம்மு உமாராவைப் பாராட்டி, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தனது பேனாவை மேடையிலேயே அன்பளிப்பாக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறுமிக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
வேடிக்கைப் போட்டிகள்:
விஜய் டிவி புகழ் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” நிகழ்ச்சியைப் போல, "சொல்லுங்க காக்கா சொல்லுங்க" என்ற பெயரில் பார்வையாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி களைகட்டச் செய்தது.
பின்னர், ‘120 வினாடி தமிழ் பேச்சு’, ‘மாத்தி யோசி’ உள்ளிட்ட - உள்ளம் கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சிகள் பல தொடர்ச்சியாக நடத்தப்பட்டமை, உண்ட மயக்கத்திலிருந்த உறுப்பினர்களை, மாலை தேனீர் வேளை வரை இழுத்துச் சென்றது.
இந்நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம், செயலர் டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் ஆகியோர் சிறப்புற நடத்திட, உறுப்பினர் சுபுஹான் பீர் முஹம்மத் மற்றும் காயல் அப்துல் வாஹித் ஆகியோர் அவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர்.
மழலையர் - சிறார் போட்டிகள்:
பின்னர், சிறார் பங்கேற்பில் பலூன் ஃபைட்டிங், மியூஸிக்கல் சேர், லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைவருக்கான போட்டிகள்:
பின்னர், சிறாரைத் தவிர்த்து அனைவரது பங்கேற்பில், உரி அடித்தல், சாக்கு ஓட்டப்பந்தயம் போன்ற ‘வீர விளையாட்டு’ப் போட்டிகள் நடத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்காரர்கள் ஓடுவதை மகளிர் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
கண்ணைக் கட்டிக்கொண்டு உரி அடிக்கும் போட்டியில், போட்டியாளர்கள் - இலக்கைத் தவிர அனைத்தையும் ‘மிகத் துல்லியமாக’ கம்பால் அடித்து வெளுத்த விதம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்தது.
இவ்வாறாக விளையாட்டுப் போட்டிகள் நடந்தேற, அதனைத் தொடர்ந்து, சுடச் சுட சிக்கன் சமோஸாவுடன் மாலை வேளைக்கான தேனீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
பரிசளிப்பு:
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர்களுக்கான "தங்கக் காசு" குலுக்கலில், உறுப்பினர் எம்.ஏ.தைக்கா தம்பி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, பரிசுக்கு அனுசரணையளித்திருந்த ஜமீல் ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் - மன்றத் தலைவருமான ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.
மகளிருக்கும், அவர்களது பகுதியில் தனியாக சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
‘காயலர் தினம் - 2013’ நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் வென்ற அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன. அதுபோல, இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அனைத்து சிறாருக்கும் - அவரவர் வயதுக்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம் நெறிப்படுத்தினார். ஒலி அமைப்புகளை உறுப்பினர் எம்.ஏ.ஸாஜித் நேர்த்தியுடன் செய்திருந்தார்.
துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்கள் - பெண்கள் என சுமார் 370 பேர் கலந்துகொண்டனர்.
குழுப்படத்தை பெரிய அளவில் காண இங்கே சொடுக்குக!
மனசே இல்லே...
நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்ற பின்னர், வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வில் பங்கேற்ற மகிழ்ச்சியைக் கொண்டவர்களாக, அரை மனதுடன் அனைவரும் இருப்பிடம் திரும்பிச் சென்றனர்.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
துபை காயல் நல மன்றம் சார்பாக
சாளை ஷேக் ஸலீம்
(துணைத் தலைவர்)
படங்கள்:
H.K.ஃபயாஸ்
ஸாஜித் முஹம்மத் |