காயல்பட்டினம் சிவன்கோவில் தெருவிலுள்ள சொந்தக் கட்டிடத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதனையடுத்து, அலுவலகம் வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக அலுவலகத்தை சீரமைக்கக் கோரி காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), மக்கள் சேவா கரங்கள் உள்ளிட்ட பல பொதுநல அமைப்புகள் அடிக்கடி அரசிடம் கோரிக்கை அளித்து வந்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கைக் கடிதத்திற்கு, 2011 பிப்ரவரி மாதத்தில் பதிலளித்த - தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் சி.என்.மகேஷ்வரன், பழுதடைந்துள்ள காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்கும் பணி, முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க, ரூபாய் 3 லட்சம் நிதியொதுக்கீடு செய்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டார். அதனையடுத்து, சீரமைப்புப் பணிகளைத் துவக்குவதற்காக - பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சேவியர், உதவி பொறியாளர் நிகர்பானு ஆகியோர் அவ்வலுவலகத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். |