சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் இம்மாதம் நடத்தப்படவுள்ள வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்திலுள்ள - திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்கும் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி, இன்டர்நெட் உதவியுடன் தொலைதொடர்பு முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளாளல் எமது சிங்கை காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு, பல்வேறு பயனுள்ள உள்ளரங்க - வெளியரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 67 உறுப்பினர்களைக் கொண்ட எம் மன்றத்தில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ளனர். அவர்களின் திருக்குர்ஆன் மனனத்தை உறுதிப்படுத்துவதற்காக, திருக்குர்ஆன் மனன மீளாய்வு வாராந்திர வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகுப்பில் பங்கேற்கும் ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமக்குள் திருமறை குர்ஆனை ஒப்புவித்து மனனத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.
இந்த 8 ஹாஃபிழ் உறுப்பினர்களுக்காகவும், திருக்குர்ஆன் மனனப் போட்டி, 23.03.2013 சனிக்கிழமை 11.00 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. மன்ற ஆலோசகர் முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை முன்னிலை வகித்தார், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, திருக்குர்ஆனை மனனம் செய்வதன் அவசியம் குறித்தும், கடல்கடந்து வாழும் இந்நாட்டிலும் - ஹாஃபிழ் மாணவர்களின் மனனத்தை உறுதிப்படுத்துவதற்காக வகுப்புகளையும், போட்டிகளையும் மன்றம் நடத்தி வருவதையும் பாராட்டி, போட்டி நடுவர்களுள் ஒருவரான இமாம் மவ்லவீ அப்துல் மாலிக் தேவ்பந்தீ உரையாற்றினார்.
பின்னர் ஹிஃப்ழுப் போட்டி துவங்கியது. இப்போட்டியில், போட்டியாளர்களிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்கும் நடுவர்களாக,
(1) மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யத்தீன் மஹ்ழரீ
(இமாம், மஸ்ஜித் ஜாமிஆ சூலியா – சிங்கப்பூர்)
(2) மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் மாலிக் தேவ்பந்தீ
(இமாம், மஸ்ஜித் ஜாமிஆ சூலியா – சிங்கப்பூர்)
(3) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ
(இமாம், மஸ்ஜித் அப்துல் கஃபூர் – சிங்கப்பூர்)
ஆகியோரும், தொலைதொடர்பு முறையில் கேள்வி கேட்கும் நடுவர்களாக,
(4) மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(கத்தீப்: பெரிய குத்பா பள்ளி - காயல்பட்டினம்; நிறுவனர்: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகள்)
(5) மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் மஹ்ழரீ
ஆகியோரும் கடமையாற்றினர்.
இப்போட்டியில், சிங்கை காயல் நல மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களான,
(1) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
(2) ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர்
(3) ஹாஃபிழ் எம்.டி.செய்யித் அஹ்மத்
(4) ஹாஃபிழ் எம்.ஆர்.ஷெய்கு அப்துல் காதிர்
(5) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
(6) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
(7) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(8) பி.எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர்
ஆகியோர் பங்கேற்றனர்.
திருமறை குர்ஆனிலிருந்து, நடுவர்களின் தேர்வுப்படி ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து தொடராக ஓதச் செய்தல் (திலாவத்)
ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு, அதன் முந்திய வசனத்தை ஓதச் சொல்லல் (மா கப்ல்)
ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்ட வசனங்களை ஓதி, அவை திருக்குர்ஆனின் எந்தெந்தப் பகுதியில் இடம்பெறுகிறது என்பதைக் கூறல் (முதஷாபிஹாத்)
போன்ற பல வகையான கேள்விகளை உள்ளடக்கி, சுமார் 3 மணி நேரம் போட்டி நடைபெற்றது.
அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றபோதிலும், அவர்களுள் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூவர் நடுவர்களால் பரிசுக்குரியவர்களாகக் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவுகளை மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் பின்வருமாறு அறிவித்தார்:-
முதலிடம்:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
இரண்டாவது பரிசு:
ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
மூன்றாவது பரிசு:
ஹாஃபிழ் எம்.டி.செய்யித் அஹ்மத்
பின்னர், பொதுவான சிறப்புக் கேள்வியாக, يَااَيُّهَا اَّلذِيْنَ آمَنُوْا எனத் துவங்கும் வசனங்களை தொடர்ந்து கூறுமாறு போட்டியாளர்களிடம் கேட்டார் - சிறப்பு நடுவராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம் பாக்கவீ.
அதில், அனைவரையும் விட அதிகளவில் வசனங்களைக் கூறி, அவை திருக்குர்ஆனில் இடம்பெறும் இடங்களையும் விவரித்து போட்டியாளர் ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத் சிறப்புப் பரிசுக்குத் தேர்வானார்.
போட்டியில் வெற்றிபெற்ற ஹாஃபிழ்கள் அனைவருக்கும், இன்ஷாஅல்லாஹ் - இம்மாதம் 13ஆம் தேதியன்று நடைபெறும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்வின்போது பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியின்போது, மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
சிங்கை கா.ந.மன்றம் சார்பாக
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
சிங்கப்பூர் |