காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், இம்மாதம் 14ஆம் தேதியன்று, சென்னை மண்ணடியில், “சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013” நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
பேரன்பிற்குரிய சென்னைவாழ் காயல்பட்டினம் வாசிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூர் மக்களை ஒருங்கிணைத்து, நகர்நலப் பணிகளாற்றிடும் நோக்குடன் நமது காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) துவக்கப்பட்டு, இறையருளால் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை துறைவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு - அதனடிப்படையில் செயல்பட்டு வந்த நமது அமைப்பிற்கு, அண்மையில் நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும், அதனைத் தொடர்ந்து, தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நமது அமைப்பை இன்னும் வலுப்படுத்தும் பொருட்டு, அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் “சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013” ஆகிய நிகழ்ச்சிகள், இன்ஷாஅல்லாஹ் - இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, சென்னை மண்ணடியிலுள்ள மியாஸி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
>> புதிய நிர்வாகிகள் அறிமுகம்
>> சென்ற வருட ஆண்டறிக்கை
>> புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
>> புதிய ஆண்டிற்கான செயல்திட்டங்கள்
>> நிர்வாகிகள் உரை
என்ற நிகழ்முறைப்படி நடைபெறும் இந்நிகழ்ச்சி, சென்னையில் வசிக்கும் அனைத்து காயலர்களையும் ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படவுள்ளதால், அதன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சென்னைவாழ் காயலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்) இதையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் வந்து கலந்துகொண்டு, நகர்நலன் குறித்து தங்களின் நல்ல பல ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அமைப்பின் உறுப்பினர் ஓராண்டு சந்தாவாக ரூ.500 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கம நிகழ்ச்சிக்கு வரும்போது சந்தாவையும் செலுத்த ஆயத்தமாக வருமாறும்,
நமதூருக்காக நடத்தப்பட்டு வரும் இவ்வமைப்பில், தங்களுக்கு அறிமுகமான அனைவரையும் இணைத்திடும் வகையில், அவர்களையும் (ஆண்கள் மட்டும்) நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, KCGC அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |