காயல்பட்டினத்தில், இம்மாதம் 28ஆம் தேதியன்று மருத்துவ முகாம் நடத்திட, தமுமுக - மமக நகர நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் அதன் அரசியல் அமைப்பான மனித நேய மக்கள் கட்சி (மமக) ஆகியவற்றின் - காயல்பட்டினம் நகர நிர்வாகக் குழு கூட்டம், 04.04.2013 வியாழக்கிழமையன்று நகரத் தலைவர் ஜாஹீர் ஹுஸைசைன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கொடியேற்றம்:
காயல்பட்டினம் நகரிலுள்ள - தமுமுக, மமக கொடிக்கம்பங்கள் அனைத்திலும் தமுமுக, மமக கொடிகளை ஏற்றிட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – மருத்துவ முகாம்:
அடையார் புற்றுநோய் மையம் (உதவும் உள்ளங்கள்), நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை, திருநெல்வேலி சார்லி பல் மருத்துவமனை, COMMUNITY WELFARE TRUST (பொது மருத்துவம்) ஆகிய மருத்துவக் குழுவினரின் பங்கேற்பில், இன்ஷாஅல்லாஹ், 28.04.2013 அன்று காயல்பட்டினத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – குப்பையை அகற்றக் கோரி நகராட்சிக்கு மனு:
காயல்பட்டினம் எல்.கே.துவக்கப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் அருகிலும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இக்குப்பைகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு, காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இதுகுறித்து, நகராட்சிக்கு மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – நாற்சக்கர வாகனங்களுக்குத் தடை:
காயல்பட்டினம் கூலக்கடை பஜார் - பிரதான வீதி ஆகியவற்றுக்கிடையில், பவ்ஸியா ஸ்டோர் அமைந்துள்ள குறுக்குச் சாலையில், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுத்திட, நகராட்சியின் சார்பில் தடுப்புக் கம்பி அமைக்க மனு அளித்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 – தப்லீக் இஜ்திமாவில் ஆம்புலன்ஸ் சேவை:
காயல்பட்டினத்தில், இம்மாதம் 07, 08 தேதிகளில் நடைபெறும் தப்லீக் இஜ்திமாவுக்கு, தமுமுக-வின் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ சேவையை அளித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மமக மாவட்ட துணைச் செயலாளர் கே.முஹ்ஸின் (முர்ஷித்), மமக நகர செயலாளர் ஐதுரூஸ், தமுமுக நகர செயலாளர் ஃபிர்தவ்ஸ், மமக நகர துணைச் செயலாளர்களான ஹஸன், தமீமுல் அன்ஸாரீ, தமுமுக மருத்துவ சேவை அணி முஜீப், முஸ்தஃபா மீரான் மற்றும் தமுமுக, மமக நகர கிளை அங்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.K.இம்ரான்
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 13:17 / 10.04.2013] |