உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், வரும் மே மாதம் 15ஆம் தேதியன்று நடைபெறுமென, அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
இறையருளால் நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 08.04.2013 திங்கட்கிழமை இரவு 07.15 மணியளவில், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்ராஃ துணைத்தலைவரும், ரியாத் காயல் நற்பணி மன்ற தலைவருமான ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
ஹாஜி ஏ.ஆர்.இக்பால் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். அத்துடன், இக்ராஃவின் கடந்த கால செயல்பாடுகள் பற்றியும் அவர் அறிக்கை சமர்ப்பித்தார். அதிலுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:-
கல்வி ஒளிபரப்பு:
அண்மையில் நடைபெற்ற ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வுகளை முன்னிட்டு, தேர்வெழுதும் மாணவ-மாணவியர் நன்மதிப்பெண்கள் பெறச் செய்யும் நோக்குடன், வழமை போல இவ்வாண்டும் காயல்பட்டினம் ஐ.ஐ.எம். டி.வி. மற்றும் முஹ்யித்தீன் டி.வி. ஆகிய உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இக்ராஃவின் வேண்டுகோள் படி ஒளிபரப்பைச் செய்திட விரும்பும் எந்த உள்ளூர் தொலைக்காட்சியானாலும், அவர்கள் கேட்கும் பட்சத்தில் அவர்களது தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமும் ஒளிபரப்பு செய்திடலாம்.
கல்வி உதவித்தொகை இடைநிறுத்தம்:
2012-13 கல்வியாண்டிற்கான – இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வினியோக நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத் தேர்வுகளில் arrears வைத்துள்ள மாணவ-மாணவியர் அப்பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறும் வரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
திருமணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்துள்ள மாணவியருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை திரும்பப் பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்படும் தொகை, அதைப் பெற்றிட தகுதியான பிற மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும்.
இக்ராஃ துணையுடன் பெறப்பட்ட இதர கல்வி உதவித்தொகைகள்:
காயல் நல மன்றங்கள் தவிர, இதர அறக்கட்டளைகள் மூலமாகவும் வழங்கப்பட்டு வரும் ஏராளமான கல்வி உதவித்தொகைகளைப் பெற்றிட, காயல்பட்டினத்தின் மாணவ-மாணவியருக்கு இக்ராஃ வழிகாட்டியது. அதனடிப்படையில், ஏராளமான மாணவ-மாணவியருக்கு பல்லாயிரக் கணக்கான ரூபாய் கல்வி உதவித்தொகையாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
B.Sc. (IT) பயிலும் ஏழை மாணவருக்கு முழு செலவினத்திற்கும் பொறுப்பேற்பு:
B.E. (I.T.) பயில விரும்பும் - அதிக மதிப்பெண்கள் பெற்று, பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றுள்ள மாணவர் ஒருவரை இக்ராஃ தேர்வு செய்து தரும் பட்சத்தில், அவருக்கான 4 ஆண்டுகளுக்கான முழு கல்விச் செலவினத்திற்கும் பொறுப்பேற்பதாக, பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்த தகவல் குறித்து கூட்டத்தில் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அந்த கல்விக் கொடையாளருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவுக்கு சொந்த இடம்:
பின்னர், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடம் தேடப்பட்டு வருவது குறித்தும், ஒரு பள்ளி நிர்வாகம் இக்ராஃவுக்கு இடம் தர முன் வந்திருப்பது குறித்தும், அதை பெறுவதிலுள்ள நடைமுறை சாத்தியங்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டுவது குறித்தும் கூட்டத்தில் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தப்பட்டு, சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
அடுத்து, இக்ராஃவின் புதிய உறுப்பினர்களாக இணைய விண்ணப்பித்துள்ள 21 பேரின் விண்ணப்பங்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழுக் கூட்டம்:
அடுத்து. இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான இடம், தேதி, நேரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
‘ஷிஃபா’ நிர்வாகிக்கு இக்ராஃவில் 3 மாத பயிற்சி:
பின்னர், மருத்துவம் மற்றும் சிறுதொழில் உதவி உள்ளிட்ட துறைகளில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விரைவில் துவக்கிட திட்டமிடப்பட்டுள்ள “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” அமைப்பின் நிர்வாகிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் இக்ராஃ நிர்வாகியால் மூன்று மாத பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃ நிர்வாகச் செலவினத்திற்கான நிதியாதாரத்தை அதிகரிக்க செயல்திட்டம்:
அடுத்து, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக உலக காயல் நல மன்றங்கள் வழங்கி வரும் நன்கொடைத் தொகைகளையும் தாண்டி, ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் தட்டுப்பாட்டின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்பதையும் கருத்திற்கொண்டு, உலக காயல் நல மன்றங்களும், கல்விக் கொடையாளர்களும் அதற்காக வழங்கி வரும் நன்கொடைத் தொகையை அதிகரித்து அளிக்க முன்வருமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃவுக்கு ஆயுட்கால உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
கலந்துகொண்டோரிடம் கருத்து கேட்பு:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
தீர்மானங்கள்:
நிறைவாக, பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – வருடாந்திர பொதுக்குழு:
இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் வரும் மே மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி எதிரிலுள்ள மன்பஉல் பரக்காத் சங்க வளாகத்தில் நடத்திடவும், கூட்டத்தின் நிறைவில் அனைவருக்கும் மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டதோடு, அதற்கான இட அனுமதி மற்றும் மதிய உணவுக்கான அனுசரணை பெறுவது உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிப்பு:
இக்ராஃ கல்விச் சங்கத்தில் புதிதாக உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ள 21 உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – கல்வி ஒளிபரப்பு ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி:
ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வுகளை முன்னிட்டு, அண்மையில் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட கல்வி ஒளிபரப்புக்கு ஒருங்கிணைப்புப் பணிகளை பொறுப்பேற்று செய்த - இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
அதுபோல, மேற்படி கல்வி ஒளிபரப்பை தமது தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பிய ஐ.ஐ.எம். டி.வி. மற்றும் முஹ்யித்தீன் டி.வி. நிர்வாகத்தினருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 – அலுவலக இடமாற்றம்:
காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் தற்போது இயங்கி வரும் இக்ராஃவின் நடப்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள கட்டிடம் உட்பகுதி இடிந்து விழுந்துள்ளதால், இரண்டு கட்டிடத்தையும் இடித்து புதியதாக வீடு கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தற்போது இயங்கி வரும் இக்ராஃவின் நடப்பு அலுவலகத்தை காலி செய்து தருமாறு கட்டிட உரிமையாளர் கேட்டுக்கொண்டதையடுத்து, அலுவலகத்தை இடமாற்றம் செய்திட கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ், வட அமெரிக்க காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளரும், “ஷிஃபா” செயல்திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாளை முஹம்மத் முஹ்யித்தீன், ஆஸ்திரேலிய நாட்டில் பணிபுரியும் எம்.ஏ.பஷீர் அலீ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ, பொதுநல ஆர்வலர்களான ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால் உள்ளிட்ட சிறப்பழைப்பாளர்களும், இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பு அலுவலர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்
செய்தி திருத்தப்பட்டது on 13.04.2013 @ 21.13hrs. |