காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.
சட்டமன்ற விதி எண் 110 ப்படி நேற்று (ஏப்ரல் 10, 2013) - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட் தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. இதனை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும்,
பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது ஆட்சிக் காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும். இதே போன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில்
தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.
எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது போல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பொறுத்த வரையில், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற இலக்கை எய்த வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, காவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சாணார்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,342 குடியிருப்புகளைச் சேர்ந்த 5,62,000 மக்கள் பயன் பெறுவர்.
இதே போன்று, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் பேரூராட்சிகள் மற்றும் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஓரத்தநாடு மற்றும் திருவோணம் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1,153 குடியிருப்புகளில் வசிக்கும் 5,76,000 மக்கள் பயன் பெறும் வண்ணம் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 125 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,55,000 மக்கள் பயன் பெறும் வகையில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 114 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,262 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் 2,80,140 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவேரி ஆற்றினை நீராதாரமாகக்கொண்டு 76 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கூட்டுக் குடிநீர்த்
திட்டம் செயல்படுத்தப்படும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 177 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,27,720 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம் 797 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடப்பாண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திருநெல்வேலி மாநகராட்சி, ஆரணி, திருவத்திபுரம், மற்றும் பெரியகுளம் ஆகிய 3 நகராட்சிகளில் 2013-14 ஆம் ஆண்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ஆகியவற்றின் கீழ் 227 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளில் 40 முதல் 60 விழுக்காடு திடக் கழிவுகள் மக்கும் தன்மை உடையதாக உள்ளன. அதிக அளவில் திடக் கழிவுகள் உற்பத்தியாகும் காய்கறி அங்காடிகள், உணவகங்கள், திருமணக்கூடங்கள், இறைச்சி கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுகளை தினசரி சேகரித்து அவற்றிலிருந்து உருவாகும் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யலாம். 5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும்.
எனவே, திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 200 சதுர மீட்டர் பசுமை பகுதி உள்ளிட்ட 625 சதுர மீட்டர் பரப்பரளவில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாநகராட்சிகளிலும், கும்பகோணம், பள்ளிப்பாளையம், ஓசூர், பூந்தமல்லி, காயல்பட்டினம், மேட்டூர், திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், கடலூர், பல்லவபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், உதகமண்டலம், ராஜபாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், நாகர்கோவில் மற்றும் பழனி ஆகிய 24 நகராட்சிகளிலும் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சொந்த நிதி மூலமாகவும் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடனும், உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி போன்ற அயல் நாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் நிதி மூலமாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நகராட்சிகளின் நிதி வளர்ச்சியானது பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, நகராட்சிகளின் கணக்குகளை இன்றைய தேவைக்கேற்ப பராமரிக்கவும், நிதி மேலாண்மையை திறம்படுத்தவும், “தமிழ் நாடு நகராட்சி கணக்கு பணி” என்ற பணியமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உரையாற்றினார். |