செப்டிங் டேங்க் அடியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால், மரைக்கார் பள்ளித் தெருவில் குடிநீருடன் சாக்கடை கலக்கும் நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
பொதுவாக அனைத்து ஊர்களிலும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கழிவு நீர் வடிகால் மூலம் எடுத்துச் செல்லப்படும். ஆனால், காயல்பட்டினத்தில் அதுபோன்ற அமைப்பு இல்லை.
காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அத்தொட்டியிலிருந்து பூமிக்கடியில் சிறிது சிறிதாக வெளியேறி, தொட்டிக்கு வெளிப்புறத்திலுள்ள மணலால் இயற்கையாகவே சுத்திகரிக்கப்படும்.
பாரம்பரியமாக காலமாக நகரில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இம்முறையால், மிகுந்த வெப்பம் நிறைந்த கோடை காலங்களிலும் கூட நகரில் நிலத்தடியில் நீர் நிறைந்திருக்கும் என்பது பெரிய நன்மையாகக் கருதப்பட்டாலும், அலட்சிய மிகுதியால் பொதுமக்கள் செய்யும் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக, அது தீய விளைவையும் ஏற்படுத்தி வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சி மூலம், நகரின் அனைத்து தெருக்களுக்கும் குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பிரதான குழாயிலிருந்து குடியிருப்புக்கு குடிநீரை வினியோகிக்க சிறிய குழாய்கள் அதில் இணைக்கப்பட்டு, அந்தந்த வீடுகளிலுள்ள அடிபைப்புகளில் அவை பொருத்தப்பட்டிருக்கும்.
தற்காலத்தில் பிவிசி (ப்ளாஸ்டிக்) குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்தில் இரும்பு குழாய் பதிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் இக்குழாய்கள், அந்தந்த வீடுகளின் கழிவுநீர் தொட்டியான செப்டிக் டேங்கின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் நாட்பட்ட நிலையில் துருப்பிடித்து இற்றுப்போவதாலும், பிவிசி குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாலும், அதில் ஏற்படும் இடைவெளியில், அதன் மேலிருக்கும் செப்டிக் டேங்கிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் கலந்து, அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்படும் குடிநீரில் கலந்துவிடுகிறது.
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை துர்வாடை வீசுவதாகவும், அழுக்கு நிறைந்த நிலையில் குடிநீர் வருவதாகவும், அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், நகராட்சி அதிகாரிகளிடம் பல நாட்களாக முறையிடப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், 09.04.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று), நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் மேற்பார்வையில், மரைக்கார் பள்ளித் தெருவில் பிரதான குடிநீர் வினியோகக் குழாய் அமைந்துள்ள 4 இடங்களில் தோண்டிப் பார்க்கப்பட்டது.
அப்போது, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாயிலிருந்து ஒரு வீட்டிற்குச் செல்லும் சிறிய குழாய், செப்டிக் டேங்க் அடியில் துருப்பிடித்து இற்றுப்போனதால் அதில் துளை ஏற்பட்டு, செப்டிக் டேங்கின் கழிவு நீர் நேரடியாக குழாய்க்குள் சென்று, துர்நாற்றத்துடன் வெளியேறியது - அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் கண்டறியப்பட்டது.
பின்னர், அக்குழாய்க்கு உரிய வீட்டை அடையாளம் காண அப்பகுதியில் விசாரிக்கப்பட்டது. எனினும், கடைசி வரை அடையாளம் காணப்படாததால், சாக்கடை நீர் கலந்து வந்த அக்குழாய்க்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தெரிவித்துள்ளதாவது:-
காயல்பட்டினத்தில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களும், இனி புதிதாக இணைப்பு பெறவுள்ளவர்களும், தமது வீட்டிற்கான குடிநீர் வினியோகக் குழாயை, பூமியின் மேற்பரப்பில் - செப்டிக் டேங்கிற்கு மேலாக அமைத்திட வேண்டும்...
புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவோருக்கு இந்த முறையை கட்டாயப்படுத்தலாம்... ஆனால், ஏற்கனவே இணைப்பு பெற்றுள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தமது வீட்டு குடிநீர் குழாய்களை இவ்வாறாக மாற்றியமைத்துக் கொண்டால், இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது... பொதுமக்கள் குடிப்பதற்காக பெறப்படும் குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலக்க அவர்களே காரணமாக இருப்பது வேதனைக்குரியது...
இக்குறை இனி வருங்காலங்களில் நிகழாதிருக்க, ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தமது குடிநீர் வினியோகக் குழாயை கழிவு நீர் தொட்டிக்கு மேலாக அமைத்திட வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்...
பூமியில் கூடுதல் ஆழத்தில் குழாய் பதித்தாலும், குறைந்த ஆழத்தில் குழாய் பதித்தாலும், வினியோகமாகும் குடிநீர் அந்தந்த வீட்டின் அடிபம்பைத்தான் வந்தடையும் என்பதால், இரண்டிலுமே நீர் அழுத்தத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கப்போவதில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்...
இவ்வாறு, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தெரிவித்தார். இப்பணி நடைபெற்றபோது, நகராட்சி அலுவலர் பாஸ்கர் உடனிருந்தார். |