காயல்பட்டினம் ஆஸாத் தெரு மற்றும் சித்தன் தெரு - ஆஸாத் தெரு - அம்பல மரைக்காயர் தெரு குறுக்குச் சாலையில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலை தோண்டி பள்ளமாக்கப்பட்ட நிலையில், சுமார் 3 மாதங்களாக புதிய சாலை அமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையிலேயே உள்ளது..
காயல்பட்டினம் நெய்னார் தெருவில் ஓரளவு போடப்பட்டுள்ள புதிய சாலை, அப்பா பள்ளித் தெரு, ஆஸாத் தெருக்களில் புதிய சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அளவு உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் உள்ளனவா என ஆய்வு செய்யக் கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் முறையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அப்பகுதிகளிலுள்ள சாலைகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் வந்து, ஆய்வுக்கான மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று, சித்தன் தெரு - ஆஸாத் தெரு - அம்பல மரைக்காயர் தெரு குறுக்குச் சாலையில் கொட்டப்பட்ட சரல் அள்ளியெடுக்கப்பட்டு, மீண்டும் தோண்டப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிகிறது. அதிகாரிகள் வந்து சென்ற பிறகும், இடைநின்று போன புதிய சாலை அமைப்புப் பணிகள் பல நாட்களாகியும் மீண்டும் துவக்கப்படாத நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை மீண்டும் இரண்டு முறை சந்தித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், சாலைப் பணிகள் தொடரப்படாமல் தோண்டப்பட்ட நிலையிலேயே பல நாட்களாக இருக்கும் சாலைகளால் பொதுமக்கள் படும் அவதி குறித்தும் அவரிடம் முறையிட்டனர்.
இந்நிலையில், புதிய சாலை அமைப்புக்காக, இன்று மதியம் 02.00 மணியளவில் மீண்டும் வெண்சரல் (White Graval) கொட்டப்படுகிறது.
துவக்கமாக, சித்தன் தெரு - ஆஸாத் தெரு - அம்பல மரைக்காயர் தெரு குறுக்குச் சாலையில் சரல் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் உடனிருந்தார்.
கொட்டப்பட்ட சரலில், மிகப் பெரிய அளவிலான கருங்கற்கள் நிறைந்திருப்பதைக் கண்ணுற்ற அப்பகுதி பொதுமக்கள், அதுகுறித்து அதன் பொறுப்பாளராக நின்றுகொண்டிருந்த சத்யராஜ் என்பவரிடம் வினவியதற்கு, அந்த சரலிலுள்ள பெரிய அளவிலான கற்களை பிரிததெடுத்து அப்புறப்படுத்தப் போவதாகவும், சாலை அமைக்கும்போது அவற்றை பயன்படுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார். |