நெஞ்சம் மறக்கவில்லை... posted byS.K.Salih (Kayalpatnam)[20 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27508
பள்ளியில் படிக்கும் காலங்களில், சிலர் படித்துத் தந்த நினைவே இல்லாமல் மறந்து போகும்... காரணம், அவர்கள் கடமைக்காக பணியாற்றியிருப்பர்.
இன்னும் சிலர், “இவர்கிட்ட போயி படிச்சோமே...” என்று எண்ணத் தோன்றும். அவ்வளவுக்கு வேண்டத்தகாதவர்களாக நடந்திருப்பார்கள்.
வெகு சிலர் மட்டும், வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் நிலைத்திருப்பார்கள். அப்படி என் நெஞ்சில் நிலைத்து நின்ற மேதைதான் எனது பெருமதிப்பிற்குரிய ஆசான் எஸ்போன் சார் அவர்கள்.
06ஆம் வகுப்பு முதல் 08ஆம் வகுப்பு வரை எனதன்பு எஸ்போன் சார் அவர்களிடம் தமிழ் பாடம் பயின்றேன்...
அரசன் நளன், சுயம்வரம் மூலமாக கன்னியருள் தனக்குப் பிடித்த தமயந்தியைத் தேர்ந்தெடுக்கும் செய்யுள் பாடத்தை நடத்தினார்... அவ்வளவு ரசனையாக, (அவர் வயதையும் அறியாமல்) காதல் சுவையுடன் அப்பாடத்தை அவர் நடத்திய விதம் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
நளன் தமயந்தியை நிக்காஹ் செய்ய தேர்ந்தெடுத்தானாம்... பின்னர் “பாரக்கல்லாஹு அல்ஃபாத்திஹா” என்று கூறினார்களாம்... இப்படியெல்லாம், நமதூர் மரபுகளையும் கலந்து அவர் பயிற்றுவித்த பாடங்கள் எப்படி மறக்கும்?
செய்யும் தவறுக்காக அடிப்பார்.... வலிக்கும்... துடிப்போம்... அதை மனதில் வைத்துக்கொண்டு, ஓர் இரண்டு நாட்களுக்காவது அவரிடம் முகம் கொடுக்காமல் இருக்க நினைப்போம்... ஆனால், அளித்த தண்டனையையெல்லாம் மறந்துவிட்டு, அடுத்த நாள் அவர் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் தமிழ் பாடம் நடத்தும்போது, வாங்கிய அடி... அதனால் ஏற்பட்ட வலி மற்றும் தழும்புகள் அனைத்தும் எங்கோ சென்றுவிடும்.
“காயல்மா நகரின் கண்மணி எல்கே
கல்வித் தந்தையாம் எங்கள் எல்கே”
என எல்.கே.அப்பாவின் மறைவையொட்டி, அவர்களைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்,
“காக்கும் எம் இறையோனே
கனிந்தே கையேந்தி இறைஞ்சுகிறோம்...
....
....
....
எல்கே பள்ளி மாணவர் யாம்
இசைந்தே இறைஞ்சுகிறோம்...
எல்லா வளம் யாம் பெறவே
ஏகனே அருள் புரிவாய்...”
என்ற இறைவணக்கப் பாடல் உள்ளிட்ட எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ள பாடல்களுக்கு எங்கள் ஆசான் எஸ்போன் சார் அவர்களின் விரல்கள் ஆர்மோனியத்துடன் உற்சாகமாய் விளையாடியது இன்றும் நினைவில் நிற்கிறது...
இந்தப் பாடல்களுள் முதல் பாடலை மர்ஹூம் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன் அவர்களும், மற்றொன்றை ஆசான் எஸ்போன் அவர்களும் இயற்றியதாக நினைவு. (தவறாக இருப்பின், அறிந்தவர்கள் திருத்தித் தரவும்.)
பள்ளி ஆண்டு விழாவில், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் எனது ஆசானின் பங்களிப்பு மிகவும் மகத்தானதாகவும், சுவை மிக்கதாகவும் அமைந்திருந்தது.
சில நாட்களுக்கு முன்பு கூட, எஸ்போன் சார் அவர்களைப் பார்க்க ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்றுதான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது...
என் நெஞ்சம் மறவாத ஆசானை நான் கண் குளிரக் கண்டேன். ஆனால் அவர்தான் என்னைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார். (இத்தனை நாள் அவரைப் பார்க்காத ரோஷமோ என்னவோ...)
ஆசிரியர் பெருமகனாரின் மறைவால் வாடிப் போயுள்ள அவர்களது அன்பு மனைவியார், மக்கள், மருமக்கள், பேரன் - பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross