ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[25 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32704
1985-ல் கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முறையாக கொல்கத்தாவிற்கு பயணித்தேன். சென்னை வரை தாய்மொழியில் உரையாடல்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. அதன் பின்னர் கன்னட, தெலுங்கு, ஒடியா, ஹிந்தி, பெங்காளி என புரியாத மொழிகளும் புதிரான மனிதர்களும் மாறி மாறி வந்து போயினர். புகைரதமோ போகிறது... போகிறது போய்க்கொண்டே இருந்தது. அது ஓர் நீண்ட பயணம். ஒரு கட்டத்தில் அகோர குளிர் என்னை வாட்டி எடுக்க போர்வையுடன் இருக்கைக்கு அடியில் தஞ்சமானேன். கொல்கத்தா நெருங்கும் போதே இப்படி என்றால்? இன்னும் நெருங்கினால்...(?) உள்ளம் வெடவெடத்தது. பற்கள் டைப் அடிக்க போர்த்திய போர்வையோடு அந்த பலங்கால நகரத்தில் கால் பதித்தேன். அது ஒரு வினோத உலகமாக எனக்குத் தோன்றியதில் வியப்பில்லை!
வாட்டியெடுக்கும் வன்குளிரில் தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த மனிதக்கூட்டம். கடல் என விரிந்து கிடந்த ஹூக்ளி நதி, தொய்வின்றி தொடர்ந்து வரும் தொங்குபாலம், மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா, தேனீக்கள் போல தெருவெங்கிலும் மொய்க்கும் மனிதர்கள், வர்ணம் மங்கிய கட்டடங்கள், வீதியின் நடுவிலே குட்டி இரயில்(ட்ராம்), நன்பகலாகியும் வருகை தவறிய சூரியன், ஹோலி பண்டிகை ஆதலால், மனிதர்களும், மரஞ்செடிகளும், ரூபாய் நோட்டுகளும் வானவில் நிறத்தில் இருந்தனர். இதுவரை பார்த்திராத, சுவைத்திராத உணவு வகைகள், இனிப்பிற்கு பஞ்சமில்லாத நகரம். குறிப்பாக மண் குவளைகளில் வைத்திருக்கும் ரசக்குல்லா...!
இப்படி நான் எழுதிக்கொண்டே போனால் இதுவும் ஒரு கட்டுரையாக மாறிவிடும். ஆக, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் என் மனதில் புதையுண்டு போயிருந்த நிலையில் ஒரேயொரு சிறுமழையால் (கட்டுரையால்) மக்கிப்போன என் உணர்வுகளை சிலிர்த்தெழச் செய்து ஒரே நாளில் அதை வேர் பிடித்த விருட்சமாய் என்னில் ஊன்றி எண்ணங்களை கிளைவிடச் செய்து விட்டாரே? எழுத்தால் ஒருவனை வீழ்த்தவும் இயலும், எழுந்து நிற்கச் செய்யவும் இயலும் என்பதை நண்பர் சாளை-பஷீர் அவர்கள் நிரூபித்து விட்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மிகச் சரியே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross