கடும் அதிர்ச்சி... posted byS.K.Salih (Kayalpatnam)[11 May 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 34883
மிகவும் அன்பானவர். இயல்பாகப் பேசக் கூடியவர்.
பொதுவாக ஒருவரது முகவோட்டத்தை வைத்து அவரது உணர்வுகளைக் கணித்து விடலாம். இந்த நல்லவரிடத்தில் அவ்வாறு கணிப்பது கடினம். அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை வைத்துதான் உணர்வுகளைக் கணிக்க இயலும். முகத்தை வைத்து கணிக்க நினைத்தால், எப்போதும் அவர்களது முகத்தில் நிலைத்திருக்கும் புன்னகையை மட்டுமே கண்டு ஏமாந்து போவோம்...
எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவர். குரலுயர்த்திப் பேசத் தெரியாதவர். நம் ஊரில் பெரும்பாலும் அனைவரது குடும்ப உறவுகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர். தொடர்புடைய குடும்பத்தினருக்கே அது தெரியாவிட்டாலும், விளக்கித் தெரியப்படுத்தி இன்பம் காண்பவர்.
நமதூரில் ஒற்றுமை தழைக்க தனது எண்ணங்கள், பேச்சு, செயல் ஆகியவற்றால் ஒத்துழைத்தவர். அதே நேரத்தில் நியாயமான புரட்சிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் அளித்தவர்.
நமதூரோடு என்றென்றும் பின்னிப் பிணைந்திருந்தவர். அதன் காரணமாகத்தான், ஊரை விட்டு ஹாங்காங் சென்ற நிலையிலும், நேற்று நண்பகல் - அதாவது அவரது இவ்வுலக வாழ்வின் கடைசி நாள் வரை காயல்பட்டணம்.காம் -இல் செய்திகளுக்குக் கருததுப்பதிவு செய்துகொண்டிருந்தார். சுருங்கக் கூறின், நேற்று வரை ஊடகவழியே என்னோடு உரையாடிக் கொண்டிருந்தவர்...
அண்மைக் காலமாக, இந்த இணையதளத்தில் நான் செய்தியை வெளியிட்டதும் துவக்கமாக அவர்களது கருத்துதான் அச்செய்தியை அலங்கரிக்கும். அவரது ஒவ்வொரு கருத்திலும் சமூக ஒற்றுமை - நல்லிணக்கத்தின் மீதான ஏக்கம் தெளிவுற தென்படும்.
அவர்கள் ஹாங்காங் சென்ற நாள் முதல் இத்தளத்தில் தொடர்ந்து கருத்து வெளியிடுவதைக் கண்டு பழகிப்போன எனக்கு, நேற்று வரை நான் ஒவ்வொரு செய்தியையும் வெளியிடும்போதெல்லாம் - அவர்களின் கண்ணியமிகுந்த கருத்து எப்போது வரும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது... இனி அவை கனவில் மட்டுமே சாத்தியம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பல நல்ல விஷயங்களை - காணும்போதெல்லாம் போதித்துக் கொண்டே இருந்தவர். நமது நகர்மன்றத் தலைவர் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களின் தந்தையார் மர்ஹூம் பாளையம் இப்றாஹீம் மாமா அவர்களைப் போலவே இவர்களும் என்னைக் காணும்போதெல்லாம் அழைத்தழைத்துப் பேசி மகிழ்ந்தவர் - மகிழ்வித்தவர்.
தானத்தில் சிறந்த குடும்பத்திற்குச் சொந்தக்காரர். நமதூர் பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடங்கள் இவரது குடும்பத்தினர் நகர்நலன் கருதி பிரதிபலன் எதிர்பாராமல் தானமாக அளித்தவை.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மேல் பாதி நிலத்தை, எனது பாட்டனார் (எனது தந்தை மர்ஹூம் எல்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்களின் தந்தை) மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை மற்றும் அவர்களது சகோதரர்களால் தானமாக வழங்கப்பட்ட செய்தி இன்று கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதபோதினும், இவர்களும், மர்ஹூம் பாளையம் இப்றாஹீம் மாமா அவர்களும் வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் உரக்கச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.
“நமது சரித்திரங்களை நாம் பாதுகாக்கத் தேவையில்லை என்று நினைத்தால் அதைப் பெருந்தன்மை எனலாம்... நமது தாய் - தந்தையர், பாட்டனார் உள்ளிட்ட முன்னோர் செய்த சேவைகளை நம் காலத்தில் நாம் பதிவு செய்வது நமது கடமை. அதன் காரணமாக, பலருக்கு நம் குடும்பத்தின் மீது பாசமும், அன்பும் ஏற்படும்... இந்நகரில் நமது பாரம்பரியம் நிலைபெறும்... எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் துஆ செய்தால் - ஏன், முன்னோர்களின் தானங்களால் பெறப்பட்ட இடங்களில் நின்று அவர்களை நினைத்தாலே, அதன் நன்மைகள் நம் முன்னோர்களுக்குச் சென்று சேரும்...
இதை செய்யத் தவறினால், நம்மை வளர்த்து ஆளாக்க தம் வாழ்நாட்களையெல்லாம் அர்ப்பணித்த முன்னோருக்கு நாம் நன்றி கெட்டவர்களாகிவிடுவோம்” என அச்சமூட்டி எச்சரித்தவர்கள்தான் இவ்விருவரும்.
எழுத, எழுத சொற்கள் முடிவுக்கு வர மறுக்கிறது... ஜலீல் மாமா அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்ட செய்தியைக் கேள்வியுற்றதும் என்னையுமறியாமல் என் கண்கள் பணித்தன... மனம் அதை நம்ப மறுக்கிறது...
எனக்கே இப்படியெனில், அவர்களது இரத்த உறவுகளின் மனம் என்ன பாடுபடும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அல்லாஹ்தான் அனைவருக்கும் பொறுமையைக் கொடுக்க வேண்டும்.
மர்ஹூம் ஜலீல் மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனோடு இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
கண்ணீருடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross