வேதனைதான்.... வேறு வழியில்லை! posted byMacky (Chennai)[24 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3535
எனது அன்பு மகள் ஃபாத்திமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)
நான் பன்னெடுங்காலம் தலைவராகவும், உறுப்பினராகவும் ஊழியம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணி மற்றும் உறுப்பினர் பொறுப்பிகளிலிருந்து உன்னை நீக்கம் செய்த செய்தி நான் உருவாக்கிய மணிச்சுடர் நாளிதழில் 23-03-2011 அன்று வெளிவந்ததை கண்டு கண் களங்கினேன். அதற்கு இணையதள மூலம் நீ நியாயம் கேட்டு எழுதி இருந்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.
கட்சியின் தன்மானத்தை காப்பது தவறா? காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா? சொந்த சின்னத்தில் நிற்காமல் மற்றவர்களுக்கு பினாமியாக நிற்பதை கண்டிப்பது தவறா? நாடாளுமன்ற சட்டமன்றங்களில் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என நினைப்பது தவறா? கட்சியின் தன்மானத்தையும், கண்ணியத்தையும் அடுத்தவர்களிடம் அடகு வைக்கும் தலைமையை விமர்சிப்பது தவறா? என்றெல்லாம் நீ அடுக்கிக் கொண்டே போவது படிப்பவர்களுக்கு உன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
அன்பு மகளே! உன் கேள்விகள் நியாயமானவை ஆனால் அதை எங்கு கேட்பது என்பதில் நீ எல்லை மீறி விட்டாய் அம்மா!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு என்ற எத்தனையோ அமைப்புக்கள் இருக்க ஒரு துண்டுச் சீட்டில் கூட உன்னுடைய உணர்வுகளை எழுதி காட்டாமல் நான் கஷ்டப்பட்டு கட்டி காப்பாற்றிய கட்டுப்பாட்டை நீ சிதறடித்து விட்டது யாரால்தான் பொறுத்தக் கொள்ள முடியும்.?
மகளே உனக்கு தெரியுமா முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைக்க முயன்றபோது ஏற்பட்ட எதிர்ப்பை.?
1991 உனக்கு திருமணம் முடிந்திருந்த சமயம் - குற்றாலத்தில் உள்ள நன்னகரத்தில் - தாய்ச்சபையில் பன்மொழிப் புலவர் எம்.ஏ. லத்தீப் சாஹிப் அவர்களை மீண்டும் இணைப்பது பற்றி நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மகளிர் அணி அமைக்க வேண்டுமென கருத்து முன்மொழியப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூசுப் சாகிப் தனது கம்பீர குரலில், இது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது என கூறி எதிர்த்த காரணத்தால் அதை பலரும் ஆமோதித்த காரணத்தால் மகளிர் அணி அமைக்க முடியவில்லை.
அதன் பின் எனது 69-வது பிறந்த நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போது எனது மகள் என அடைமொழியோடு நீ உரையாற்ற அனுமதிக்கப்பட்டாய் அதற்கு கூட உலமாக்களும், பெரியவர்களும் எவ்வளவு எதிர்த்தார்கள் தெரியுமா?
1999 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாடு அதல் மகளிர் அணி கருத்தரங்கம் நடைபெற்ற போது உன் அரசியல் பிரவேசத்திற்கான வாயில் திறக்கப்பட்டது.
அம்மாநாடு முடிந்த சில நாட்களிலேயே இறைவனின் நாட்டப்படி நான் காலமாகி விட்டேன் அந்த நேரத்தில் நம் குடும்பத்திற்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். நம் குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க மகளிர் அணியின் மாநில அமைப்பாளராக உன்னை நியமித்தார்.
அன்பு மகளே! நீ எந்த பேராசிரியரை விமர்சனம் செய்கிறாய் தெரியுமா? கடந்த காலம் உனக்கு தெரிய நியாயம் இல்லை எனது அன்பு மனைவி உனது அன்புத்தாய் காலமான நேரத்தில் நான் தனிமைப்பட்டிருந்த போது எனக்கு ஆறுதலும் தேறுதலும் அவர்தான்.
பாபர் மசூதி தகர்க்கப்பட்டதிலிருந்து நான் இவ்வுலகை விட்டு செல்வது வரை எனக்கும் தாய்ச்சபைக்கும் ஒரு சோதனையான காலகட்டம் அதில் எனக்கு உற்ற துணையாக இருந்து உதவி புரிந்தவர் இந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்தான்.
நீ மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவிற்குச் சென்றால் காயிதெ மில்லத் மாளிகையை அன்னாந்து பாரம்மா. அந்த அழகு மாளிகையை கட்டியது யார் தெரியுமா? இந்த பேராசிரியர் தான். உன் தந்தை நான் கூட தாய்ச்சபையை வாடகை கட்டிடத்தில்தான் நடத்தினேன்; கஷ்டப்பட்டேன்; கடன் பட்டேன்.
ஆனால் இன்று பேராசிரியர் சொந்த இடம் மட்டுமின்றி மணிச்சுடர் நாளிதழ், பிறைமேடை மாதமிருமுறை, தி டைம்ஸ் ஆப் லீக் ஆங்கில மாத ஏடு என்பதோடு நின்று விடாமல், தாய்ச்சபையின் தலைமை அலுவலகத்தை அற்புதமாக இயங்க வைத்து இணையதளத்தையும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மூலம் எண்ணற்ற நூல்களையும் வெளிக்கொண்டுவர பாடுபடுவதை நினைத்து பாராம்மா.
மகளே ஃபாத்திமா ஊருக்கு தெரியாமல் உன்னிடத்தில் மட்டும் ரகசியமாக ஒன்றை கேட்கிறேன். உன் தந்தை மீது உனக்கு என்ன கோபம். நீ பேராசிரியரை விமர்சிக்கிறாயா? என்னை விமர்சிக்கிறாயா?
மூன்று தொகுதிகளில் ஒன்றை கொடுத்து விட்டார் என்றும், இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றும் குரல் எழுப்புகிறாயே இதற்கு நான் அல்லாவா பதில் சொல்ல வேண்டும்.?
1984 -ல் திருவல்லிக்கேணியில் சட்ட மன்ற தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், 1990 -ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் உன் தந்தை நான். 1996 -ல் நம் இயக்கத்தையே அவமான படுத்திய ஜெயலலிதா அம்மையார் திருவல்லிக்கேணி, பெரியகுளம் என இரண்டு தொகுதிகள் தந்து அதில் இரட்டை இலை சின்த்தில் போட்டியிட்டு இரண்டிலும் தோற்றோம்.
இந்த வரலாறு எல்லாம் உனக்கு தெரியாது. சரி அதுவெல்லாம் போகட்டும், நான் உன்னை ஒன்று கேட்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் என்ற பதவியை உனக்கு தந்து 12 ஆண்டுகளாகி விட்டாதே இந்த இயக்கத்திற்கு நீ செய்தது என்ன என்பதை பற்றி என்றிக்காவது நினைத்து பார்த்தாயா?
மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள், ஊழியர் கூட்டங்கள், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்குகள் இதில் எதுவொன்றுக்காவது உன்னுடைய பங்களிப்பு உண்டா?
என்னுடைய மறைவிற்கு பின் வரலாறு பேசும் வகையில் சென்னை தீவுத் திடலில் 2008 -ல் மணிவிழா மாநில மாநாடு நடைபெற்ற போது உன்னையும் கண்ணியப்படுத்தும் வகையில் மகளிர் கருத்தரங்கம் நடத்தும் பொறுப்பை உன்னை நம்பி ஒப்படைத்தாரே பேராசிரியர். அது உன் சொந்த நிழ்ச்சியாக நடத்தினாயே தவிர, கட்சிக்கு பெருமை சேர்த்தாயா?
குறைந்த பட்சம் அந்த இராஜாஜி மண்டபத்தில் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது என்ற வரலாற்று பதிவையாவது நீ நினைவு படுத்தினாயா?
11-12-2010 -ல் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் சென்னையில் இருந்து கொண்டே நீ பங்கேற்க வில்லையே!
இந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் எத்தனை எத்தனை செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் எதிலாவது நீ பங்கேற்று இருக்கின்றாயா?
அரசியலில் உன்னை வளர்த்து விட ஆசைப்பட்ட நம் இயக்கத்தவர்கள் உன்னை கூட்டத்திற்கு அழைத்தார்கள் நீ அவர்களுக்கு எத்தனை சிரமங்களை கொடுத்தாய்.
ஏ.சி பயணங்கள் நம் இயக்கத்திற்கு ஒத்து வருமா? அப்படி கஷ்டப்பட்டு நடத்திய பொதுக் கூட்டங்களில் கூட இயக்கத்தை முன்னிலை படுத்தினாயா? உன்னைத்தான் முன்னிலை படுத்தினாய்.
உன் மனசாட்சியை தொட்டுச் சொல் இந்த இயக்கத்திற்காக ஒரு துரும்மை தூக்கி போட்டாயா? """"இஃப்தார் நிகழ்ச்சி நோன்பாளிகளை வைத்து நடத்தக் கூடிய ஒன்று. அதுதான் முஸ்லிம் லீக் பாரம்பரியம் ! ஆனால் அதைக் கூட கொச்சைப்படுத்தும் வகையில் என் விருப்பத்திற்கு மாறாக அரசியல் கட்சி தலைவர்களையெல்லாம் அழைத்து முஸ்லிம் லீக் மகளிர் அணி பெயரால் அழைப்பு அனுப்பி """"மில்லத் ஹஜ் சர்வீஸ்’’, மில்லத் அறக்கட்டளை’’ என்ற உன் ஸ்தாபனங்களை மட்டும் முன்னிலை படுத்திக் கொண்டாய் இது எந்ந வகையியில் நியாயம்?
மகளிர் அணி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களாகியும், ஒரு துணை அமைப்பாளர், ஒரு இணை அமைப்பாளராவது அமைத்து தந்திருக்கிறாயா? உனக்கு அடுத்த ஸ்தானம் யார் என்பதை யாவது அடையாளம் காட்டியிருக்கிறாயா?
2004-ம் ஆண்டு எம்.பி. சீட் கேட்டாய், கட்சி பேராசிரியருக்கு வழங்கியது. நீ தலைமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தாய்.
2006-ல் சட்டமன்ற தேர்தலில் தலைமையையும், தோழமை கட்சியையும் விமர்சனம் செய்தாய்.
2009-ல் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் கேட்டாய். கட்சி அப்துல் ரஹ்மானுக்கு வழங்கியது. அந்த அப்துல் ரஹ்மானை இன்று விமர்சனம் செய்தாய். அவர் என் தம்பி மட்டுமல்ல அவர் என் இதயக்கணி எத்தனையோ ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாக உதவியவர்.
அவருடைய மேடை பேச்சை கொஞ்சம் கவனித்து பார். உன் தந்தை அப்துஸ் ஸமது சாயல் அப்படியே தெரியும்.
நீ பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய போது இயக்கத்திற்கு எவ்வளவு கெட்ட பேர். உனக்கே தெரியாமல் அகில இந்திய தலைமையியும், மாநில தலைமையும் செய்த உதவிகள் மறைக்கப்பட்ட உண்மைகள்.
ஏப்ரல் 13 தமிழக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க தலைமையில் மூன்று இடங்களில் நாம் போட்டியிடுகிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைமையும், மாநில தலைமையும் செய்த ராஜதந்திர முயற்சியால் தி.மு.க காங்கிரஸ் கூட்டு ஏற்பட்டது. அந்த தலைமை நம்மை பாராட்டின இதில் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. பெருமைதான் கிடைத்தது.
மூன்று தொகுதிகளில் நிற்கின்ற வேட்பாளர்கள் யாரோ எவரோ அல்ல! துறைமுகத்தில் நிற்பவர் எத்தனையோ ஆண்டு காலம் முஸ்லிம் லீகின் கொள்கையை ஊர் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவரின் புதல்வர், நாகப்பட்டினத்தில் நிற்பவர் தாய்ச்சபைக்கு உதவிக் கரம் நீட்டியவர். வாணியம்பாடியில் நிற்பவர் தாய்ச்சபையின் பிரச்சார பீரங்கி. இதில் யாரை குறை காண்கிறாய்?
இன்னொரு இயக்கத்தை கலைத்து விட்டு தாய்ச்சபையில் கொண்டு வந்து யார் இணைத்தாலும் பாராட்டுவதுதான் மனிதப் பண்பாடு.
உன் தந்தை ஆகிய நான் பதவியில் இருந்த காலத்தில்1989 முதல் 12 ஆண்டு காலம் நம் இயக்கத்திற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. எம்.ஏ. லத்தீப் சாஹிப் நடத்திய கட்சியில்தான் உறுப்பினர்கள் இருந்தனர்.
பேராசிரியர் தலைiமை பொறுப்பில் இருக்கும் போதுதான் 2004 க்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பொறுப்புக்களில் 135க்கும் மேற்பட்டோர் பதவியில் உள்ளனர். இப்போது சட்டமன்றத்திற்கு மூவர் போட்டியிடுகின்றனர். இதை முதலில் நீ தெரிந்து கொள்.
என்னதான் கோப தாபங்கள் இருந்தாலும் கட்சியின் செயல்பாட்டையோ, தலைமை எடுத்த முடிவையோ எதிர்க்க துணிந்தாலும் அந்த விமர்சனங்கள் கட்சிக்குள்தான் இருக்க வேண்டும்.
உதரணத்திற்கு மில்லத் ஹஜ் சர்வீஸில் நடக்கின்ற ஒரு சம்பவததை உன்னுடைய ஊழியர் வெளியுலகத்திற்கு சொன்னால், அல்லது உன்னுடைய ஸ்தாபனத்தை பற்றி உன்னுடைய ஊழியர் மேடை போட்டு பேசினால் நீ அந்த ஊழியருக்கு கிரீடம் சூட்டியா மகிழ்வாய்?
நீ கட்சிக்கு நன்மை செய்வதாக இருந்தால் கட்சிக்குள் உள்ளேதான் பேசி இருக்க வேண்டும்.
முஸ்லிம் லீக் தமையை விமர்சித்து சென்னை பிரஸ் கிளப்பில் 10-03-2011 -ல் பேட்டி கொடுத்தாய்
காதர் மொகிதீனை தூக்கி எறிவோம் என்று ஜூனியர் விகடனுக்கு 16-03-2011 ல் பேட்டி கொடுத்தாய். பல இடங்களிலும் இயக்கத்தை விமர்சனம் செய்தாய் எல்லாவற்றையும் அந்த தலைமை பொறுத்துக் கொண்டது.
ஆனால் உச்ச கட்டமாக 22-03-2011 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் பிளாக் அண்ட் ஒய்ட் தொலைக்காட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு விரோதமாகவும், மனித நேய மக்கள் கட்சியை ஆதரித்தும் நீ கொடுத்த பேட்டி என்னையே கதிகலங்க செய்து விட்டது.
மகளே பாத்திமா சத்தியமாக சொல் - அங்கீகரிக்கப்பட்ட சமுதாய பேரியிக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அழைத்த இந்த நாவு என்றைக்காவது இன்னொரு இயக்கத்தை உன் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியதுண்டா. எவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான செய்தியை என் பெயரை பயன்படுத்தி சொல்லி விட்டாய்.
இதற்கு பிறகுதானே உன்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இல்லையேல் எப்படி கட்டுப்பாட்டை காப்பாற்றுவது?
இதற்கு பிழை பொருக்கத் தேடாமல் மஹ்சரில் என்னை எப்படி நீ சந்திப்பாய். அதற்கு ஒரே வழி உன் தவறுதலுக்கு மன்னிப்பு கேள்! தாய்ச்சபை தலைமை இடத்தில் மன்றாடு! அதுதான் தந்தை என்ற முறையில் உனக்கு நான் செய்யும் உபதேசம்.
இப்படிக்கு
சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் இப்போது நம்மிடையே இருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். அந்த நினைவில் எழுகுகிறேன்.
தங்கள் அன்பு சகோதரி
இசட். எம். முஹம்மது செய்யது ஃபாத்திமா
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மகளிர் அணி அமைப்பாளர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross