எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...? posted bymackie noohuthambi (Kayalpatnam)[30 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38321
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...]
இது மலைக்கள்ளன் என்ற திரைப் படத்தில் வரும் பாடல். நான் பள்ளிப் பருவத்தில் அசைபோட்டபாடல்.
கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்பதற்காக.
பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷம் ஆகி விடக் கூடாது என்பதற்காக ...இது கலைஞரின் கைவண்ணத்தில் உருவான பராசக்தி வசனம். அந்த புத்தகத்தையே பாராயணம் செய்தேன்
.கொள்ளையடிப்போர் வள்ளலைபோலே கோயிலை இடிப்போர் சாமியைபோலே வாழ்கின்றார். ஊழல் செய்தவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே வாழ்கின்றார்...நீங்கள் அதனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்...இந்த பாடல் இன்றும் எனது அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் நடந்தது என்ன நடப்பது என்ன யார் யார் எல்லாம் இந்த சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்களோ - மூட நம்பிக்கைகளை ஒழிக்க புறப்பட்டார்களோ அவர்களே சாமியார்களாக கடவுள்களாக சித்தரிக்கப் பட்டு வணக்கத்துக்குரியவர்களாக உரு மாற்றம் பெற்று சிலைகளாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படுகிறார்கள். அமைச்சர்களாக வலம் வருபவர்கள் கோயிலிலே பரிவட்டம் கட்டப்பட்டு அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு தேங்காய் உடைத்துக் கொண்டு அங்க பிரதட்சணம் செய்துகொண்டு அலைகிறார்கள்.
சாய் பாபா அவர்கள் தனது கையை நீட்டி மந்திரத்தால் மோதிரங்கள் வரவழைத்து திமுக மந்திரிகளுக்கு கொடுத்தார். முதல்வர் கலைஞருக்கு கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், கலைஞர் அவர்கள் தன் விரலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்த அல்லது அவர் உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்துள்ளார். அவர் அதைதான் பெரிதாக மதிப்பார். அதனால் நான் அவருக்கு மோதிரம் வரவழைத்து கொடுக்கவில்லை என்று சொன்னார். ஜோதிடம் குறி சொல்வது எல்லாம் சுத்த பொய் - ஆல மரத்தடியில் கிளியை வைத்து ஜோசியம் சொல்பவன் அவனது ஜாதகத்தையே கணிக்க முடியவில்லை.மற்றவர்கள் ஜாதகத்தை எப்படி கணிக்க முடியும்.
பூசாரி உன் ஜாதகத்தை கணித்துக் கொள்.
யார் அம்பாளா பேசுகிறது...
அம்பாள் எந்த காலத்தில் பேசுவாள் அறிவு கெட்டவனே.
இதை சொன்னவர் அன்றைய உதயசூரியனின் நாயகன். ஆனால் அவரது தொலைக்காட்சிகள் நாளிதழ்கள் இன்று 12 ராசிகளுக்கும் அந்த ராசிக் கார்களுக்கும் இன்று என்ன நடக்கும் என்று தெளிவாக சொல்கிறது. இதற்கு சமீபத்தில் இளைஞர்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் புதியதலைமுறை தொலைக் காட்சியும் தப்ப வில்லை.
திராவிட இயக்கம் இந்த நாட்டில் தலை எடுத்து தந்தை பெரியார் இந்த மூட நம்பிக்கைகளை களை எடுத்து ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அவர் வழி நடக்க ஆரம்பித்த தம்பிமார்கள் - பெரியார் பாஷையில் சொல்வதானால் - கண்ணீர்த்துளிகள் - அவரது சிந்தைகளை சிந்தனைகளை துவம்சம் செய்தார்கள். இன்றும்கூட அவர் பெயரால் இயங்கும் கழகங்கள் - பெரியார் திராவிட கழகம் - திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர பெரியாரின் சிந்தனைகளை குழிதோண்டி புதைத்து, சாடைமாடையாக அந்த கொள்கையை சொல்லிக் கொண்டிருந்த அண்ணாவையும் கடற்கரையில் ஆழ புதைத்துவிட்டு, "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்று எழுதி வைத்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள்.
1436 வருடங்களுக்கு முன் ஜோதிடம் குறிபார்த்தல் மது அருந்துதல் நாள் நட்சத்திரம் பார்த்தல் என்ற மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணி அடித்த நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லிம்களாகிய நாம் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இப்படியே விரிந்து கொண்டு செல்லும் வானம் போல் அலைகளை சுமந்து வரும் ஆழ கடல்போல் நமது ஒவ்வொரு செயலும் இருக்கின்றன.
பிரதமர் மோடி என்ன அவதாரமா, அவர் சொல்வது என்ன வேத வாக்கா - இந்த நாட்டை 14 வருடங்கள் ஒரு ஜோடி செருப்பு ஆண்டிருக்கிறது என்று சொல்லும் ராமாயணம் - தன் மனைவியையே சந்தேகப்பட்டு தீயில் இறங்கி வலம் வர சொன்ன கடவுள் என்று அவர்களால் வணங்கப்படும் ஸ்ரீ ராமனின் கோயில்தான் பாராளுமன்றம் என்று சொல்பவர்தானே. 400 வருடங்கள் பழமையான இறை இல்லத்தை ஒரே நாளில் தகர்த்து எரிந்து விட்டு அங்கே ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் RSS இன் மறுபதிப்புதானே அவர்.
இந்த கட்டுரையின் நாயகன் சகோதரர் முஹம்மது அலி அவர்களிடம் தேங்கி கிடக்கும் உள்ளக் குமுறல்கள் இன்னும் எத்தனையோ இருக்கும் அவற்றை எழுதுங்கள்.
இந்த சமுதாயம் உங்களையும் கேள்வி கேட்கும்....
காவல் துறையில் நீங்கள் பணியாற்றிய காலங்களிலே நடந்த எத்தனை மூட கொள்கைகளுக்கு நீங்கள் சமாதி கட்டினீர்கள் எந்த மூட பழக்கங்களை ஒழிக்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தினீர்கள்...
நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்....
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினால் உயர் அதிகாரி முஹம்மது அலி அவர்களும் இந்த சாமான்யன் மக்கி நூஹுதம்பியும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்களாகவே இருப்போம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக. இந்த தீய பழக்க வழக்கங்களிருந்து முற்றாக நீங்கி இருக்க நமக்கு தௌபீக் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross