சுத்தம் பற்றி மோடி சுதந்திர நாளில் செங்கோட்டையில் கொடியேற்றி பேசும்போது சொல்கிறார். 1436 ஆண்டுகளுக்கு முன்னாள் நபிகள் நாயகம் ஏற்றி வைத்த தீபம் அது.
இறைவனையும் இறை தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் முதலாவது கடை பிடிக்க வேண்டியது சுத்தம் தான். தொழுகை நோன்பு ஜகாத்து ஹஜ்ஜு எல்லாமே சுத்ததையே வலியுறுத்துகிறது.
ஜெயராம் ரமேஷ் என்று முன்னாள் மத்திய அமைச்சர், இந்த நாட்டில் கழிவறைகளை விட கோயில்கள் அதிகமாக இருக்கிறது என்ற உண்மையை சொன்னபோது சிலர் கொதித்து எழுந்தார்கள். 68 கோடி மக்களுக்கு வீட்டில் கழிப்பறை இல்லை என்ற புள்ளி விவரத்தை சொல்லும்போது யாரும் வாய் திறந்து பேசவில்லை.
தலை நகர் டில்லி, சென்னை, கல்கத்தா, ஜெய்ப்பூர் இன்னும் இப்படி எந்த மாநில தலை நகருக்கும் சென்று பாருங்கள். மக்கள் நடமாடும் தெருக்களே கழிப்பறையாகவும் குளியல் அறையாகவும் இருப்பதை காணலாம். நமதூரிலேயே குப்பைகள் சேகரமாகி தெருக்கள் நாற்றம் அடிப்பதை, குறிப்பாக நான் வசிக்கும் புதுக் கடை தெருவிலிருந்து முஹியதீன் பள்ளிக்கு செல்லும் வழியில் தினசரி இந்த நாற்றத்தை பொறுத்துக் கொண்டு என்று சொல்வதை விட அதை ரசித்துக் கொண்டு மக்கள் செல்வது வழக்கமாகி விட்டது.
7 வயது ஆகிவிட்டால் தொழுக சொல்லி ஏவுங்கள், 10 வயதாகி விட்டால் அடித்து தொழுக சொல்லுங்கள் என்ற நபி மொழி நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று. அப்படியானால் தொழுவதற்கு பிள்ளைகளை பழக்கும் 7 வயதிலேயே சுத்தம் பற்றிய விழிப்புணர்வு ஆரம்பமாகி விடுகிறது. ஆனால் நம் பிள்ளைகளுக்கு சுத்தம் பற்றி எப்போதும் சொல்லிக் கொடுக்கிறோம்.
தெரு வழியில் குப்பை கூளங்களை கொட்டுவது, ஹோடேல்களில் கை துடைத்துவிட்டு அந்த பேப்பரை அங்கங்கே போட்டு விடுவது, தெருவில் காரி உமிழ்வது எச்சில் துப்புவது இப்படி எத்தனையோ விஷயங்கள் நம்மில் வயது வந்தவர்களே செய்கிறோம்.
வருஷத்தில் ஒரு வாரம் துப்பரவு வாரம். வருஷத்தில் ஒரு நாள் டெங்கு ஒழிப்பு நாள் இதெல்லாம் மக்களை சுத்தப்படுத்த முடியாது, திருடாதே, பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்று சொல்கிறோம். அதோடு சுத்தமாக வீட்டையும் தெருவையும் வைத்துக் கொள் என்ற போதனையும் செய்ய வேண்டும். நகராட்சிகள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.spot fine போடவேண்டும். இதற்காக சட்டங்கள் இயற்ற வேண்டும்.
இப்போது நமதூர் கடற்கரையை சுத்தமாக வைக்க துபாய் காயல் நல மன்றம் ஒரு திட்டம் வகுத்துள்ளது. நகர் மன்றத்தை கலைத்து விட்டு இப்படி ஒவ்வொரு காயல் நல மன்றமும் ஒவ்வொரு நலப் பணியை பொறுப்பெடுத்துக் கொண்டால் ஊர் நல்ல படி முன்னேறும்.
பல கோடிகள் நகர் மன்றத்துக்கு மக்கள் வரிப்பணம் கொடுக்கிறார்கள். அரசு மானியம் வேறு கிடைக்கிறது. இதெல்லாம் வைத்து இந்த சிறிய நகரை அற்புதமான ஒரு முன் மாதிரி கிராமமாக ஆக்கலாம். என்ன நடக்க வேண்டியிருக்க என்ன நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் சிந்திக்க வேண்டும். ஆட்சி தலைவர் வருவார் போவார். ஆனால் நமது ஊரு வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைத்தால்தான் சுத்தம் சுகம் தரும் என்ற உண்மையை உணர்ந்தால்தான் மாற்றம் வரும். இல்லாவிட்டால், குடி குடியை கெடுக்கும் என்று டாஸ்மாக் கடையில் எழுதி வைப்பது போல், சிகரட் பெட்டியில் புகைப்பது சுகாதாரத்துக் கேடு என்று எழுதி வைத்திருப்பது போல் வாய்மையே வெல்லும் என்று லாரியின் மேலே எழுதி, பாலில் தண்ணீரை கலந்து விற்பதுபோல் - விபச்சாரம் அபசாரம் என்று எழுதி அந்த வீட்டில் விபச்சாரம் தொழில் நடத்த அரசே லைசென்ஸ் கொடுப்பது போல் இதுவும் ஒரு கண் துடைப்பு பிரச்சாரமாகத்தான் இருக்கும்.
சுத்தம் பற்றி பிள்ளைகள் நடக்க ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு அதனை கற்றுக் கொடுப்போம். "அன்னை இடம் நீ அன்பை வாங்கலாம் தந்தை இடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்" என்று நம் பிள்ளைகளுக்கு தாலாட்டுப் பாடி அதன் உள்ளத்தில் சுத்தத்தை பற்றிய எண்ணத்தை விதைப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross