சுறுசுறுப்பின் இலக்கணம்! posted byS,K.Salih (Kayalpatnam)[08 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39525
நமதூரில் கடை வைத்திருக்கும் பலர், அவர்கள் நினைக்கும் நேரத்தில் திறப்பதும், நினைக்கும் நேரத்தில் பூட்டுவதும் (அதாவது காலையில் விருப்பம் போல் விழித்து, கிடைத்த நேரத்தில் கடையைத் திறப்பதும், இரவில் கட்டுப்பாடின்றி 11 மணிக்குப் பிறகு கடையை மூடுவதும்) வாடிக்கை.
இவர்களெல்லாம் கடை வைப்பதற்கு முன்பே நமதூரில் பன்னெடுங்காலமாக நூஹிய்யா டிரேடர்ஸ் எனும் பெயரில் அழகிய பாத்திரக் கடையைத் துவக்கி, குறித்த நேரத்தில் கடையைத் திறந்தும் - மூடியும், சுறுசுறுப்பின் இலக்கணமாய், ஊக்கத்தின் உறைவிடமாய் இயங்கிக் காட்டியவர் இஸ்மாஈல் மாமா அவர்கள்.
புதிதாக வாங்கும் பாத்திரங்களில், அவர்களது திருக்கரங்களால் பெயரடிக்கும் கருவி கொண்டு குண்டு குண்டான எழுத்துக்களில் அச்சு போல பெயரடித்துத் தரும் அவர்களின் திறமை ஈடு இணையற்றது.
சிறு வயதில், நானும் - என் காக்காவும் வீட்டில் ஒரே மோதிக்கொண்டதால் தென்காசித் தீர்ப்பாக - எங்கள் தாயார் எங்கள் இருவருக்கும் தனித்தனி உணவுத் தட்டும், கறிக்கிண்ணமும் வாங்கினார். அவையிரண்டிலும், “ஷமீமுல் இஸ்லாம்” என்றும், “முஹம்மத் ஸாலிஹ்” என்றும் அவர்கள் கைகளால் பொறித்துத் தந்த பெயர் இன்றளவும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கிறது.
தான் சுகவீனப்பட்டு, நடை தளர்ந்த காலகட்டத்திலும், கையில் ஒரு கரம்பாட்டல் (ஃப்ளாஸ்க்) தேனீருடன் தெருவில் காத்திருப்பார்கள். அவர்களது மலர்ந்த முகத்தைக் காணும் இரு சக்கர வாகன ஓட்டிகள் - அவர்கள் யாராயிருப்பினும், எந்தக் கொள்கையுடையவர்களானாலும், மாமா அவர்களை ஏற்றிச் சென்று கடையில் இறக்கிவிட்டு வருவதை ஒரு புனிதப் பணியாகவே கருதினர். இந்த பாக்கியம் அவ்வப்போது எனக்கும் கிடைத்தது.
மிகவும் சுகவீனப்பட்டு, நீர் பிரிய பையும் பொருத்திய நிலையிலும், ஏதோ நல்ல உடல் ஆரோக்கியவான் போலவே தன்னைக் கருதி, வீட்டிலுள்ளோர் - உறவினர் யாவரும் தடுத்தபோதிலும், அக்கம்பக்கத்து விசேஷங்கள், நோய் விசாரணைகள், மரணங்களில் கடமையெனக் கருதி கலந்துகொண்டவர்கள் மாமா அவர்கள்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் - குறிப்பாக எனது ஆசிரியர் யூஸுஃப் ஹாஃபிஸா அவர்கள், முஹம்மத் நூஹ் காக்கா அவர்கள், எனது ஆசிரியரும் - மாமாவுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அவர்கள், கதீஜத் மாமி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross