أهلاً وسهلاً posted byJaved Nazeem (Chennai)[21 April 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 40234
இத்ரீஸ் அப்பா பற்றி எழுத ஒரு வாய்ப்பை வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே பகழ் அனைத்தும்.
இந்தப் பதிவு சிறிது நீளமாக அமையக் கூடும். சில இடங்களில் சுய புராணம் போலவும் அமையக் கூடும் - அது கொஞ்சம் உண்மைதான் (ஒரு வெளம்பரம்.. ஹி ஹி ..). சுவாரஸ்யமாக இருக்கும் என எண்ணுகிறேன், தொடர்ந்து படியுங்கள் இன் ஷா அல்லாஹ்.
மஞ்சளுக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறம் என நினைக்கிறேன். அந்த நிறத்தில் ஒரு ஸ்கூட்டர். அதில் எங்களை (தம்பி, பாதுல் மற்றும் நான்) பெருநாள் தொழுகைக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மணமுடித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு தீவுத்தெரு ஜமாஅத்தினரோடு தொழுதிருந்தால் அதுவும் சரியான செயல்தான். ஆனால் அவர்களோ தாய் வீட்டுக்கு வந்து எங்களை தாயிம்பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்.
ஒரு முறை பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒரு கைப்பையில் வைத்து பெருநாள் துட்டு கொடுத்து வந்தார்கள். "என்ன அப்பா? நீங்களும் (ஒரு அரசியல்வாதியை குறிப்பிட்டு) அவரைப் போல ஒரு பையைத் தூக்கி விட்டீர்கள்" என்று தம்பி துடுக்குத்தனமாக கேட்டான். "அடேய், அவருடைய பையில் பொய் தான்டா இருக்கும்" என்று உடனடியாக ரைமிங்கில் பதில் கொடுத்தார்கள்.
கம்லாவதியில் நான் படித்த காலங்களில் உடல் நலக் குறைவு ஏற்படுவது கண்டு மிகவும் வருந்துவார்கள். உம்மாவும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் விரும்பியதால் தொடர்ந்து அங்கேயே படிக்க வேண்டியதாயிற்று.
சில சமயம் அவர்கள் தைக்காத் தெருவுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கச் செல்வார்கள். அங்கே நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து எனது மாதாந்திர பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்வார்கள். அதாவது, அவர்களைப் பார்த்ததும் நண்பன் அப்துல்லாஹ் ஜவ்ஹாரி எட்டுக்கால் பாய்ச்சலில் எஸ்கேப் ஆகி விட்டான் என்றால் அவனை விட நான் அதிக மார்க். நின்று சலாம் சொல்லி நலம் விசாரித்தான் என்றால் அவன் அதிக மார்க் - அப்படியே என்னைப் பற்றி கொஞ்சம் போட்டுக் கொடுத்து விட்டுப் போவான். (பள்ளியில், சிறந்த மாணவர்களுள் அப்துல்லாஹ்வும் ஒருவன். இன்று, இறைவன் அருளால் உயர்ந்த நிலையில் இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்)
ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் தினம். நாங்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்த வேண்டும். நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தபோது உம்மா, அவர்களிடம் புகார் அளித்து விட்டார்கள். நிறைய நேரம் மிகவும் பொறுமையாக பேசி என் மனதை மாற்றி விட்டார்கள். அடுத்த நாள், ஆசிரியர் தினத்தில் பள்ளியில் பாடம் நடத்தியது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக உள்ளது.
என்னுடைய பள்ளி, கல்லூரி மற்றும் திருமண நேரத்தில் அவர்கள் ஊக்கம் அளித்தும் வாழ்த்தியும் எழுதிய கடிதங்கள் இன்னும் உம்மாவிடம் பத்திரமாக உள்ளது என எண்ணுகிறேன்.
தம்பி ஒரு முறை மதிய உணவில் சோற்றைத் தொடாமல் தொட்டுகிடவையே உண்டுகொண்டிருந்தான். "என்னடா விலாசத்தையே படிச்சிட்டு இருக்கா, கடிதத்த உள்ள படி" என்றார்கள்.
அவர்கள் ஒருமுறை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களையே தலைவராக ஆக்கி விட்டார்கள். "கல்யாணத்திற்கு விருந்துக்கு வந்த என்னை மாப்பிள்ளை ஆக்கி விட்டீர்களே" என்று சொல்லி உரையை துவங்கினார்கள்.
சபரில் ஊர் வரும் நேரங்களில், முதலில் தாய் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் போதிய நேரம் அளவளாவிய பின்னரே அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள். உறவுகளின் மெல்லிய உணர்வுகளை உணர்ந்து செயல்படுவதால்தான் இன்றளவும் அனைவராலும் நேசிக்கப் படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அன்பு சகோதரர் மக்கி "வயதாகி விட்டது" என்று ஒரு பதிவில் பாசத்துடனும் அக்கறையுடனும் குறிப்பிட்டு இருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் அவர்களோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.
எங்கள் குடும்பத் தலைவர்கள் பற்றி அறிந்தவர்கள், அவர்களுடைய பொதுச்சேவையில் ஆச்சரியம் அடைய மாட்டார்கள் என எண்ணுகிறேன். இருப்பினும், மற்றொரு தேசத்திற்கு சென்ற பின்னும் பொதுச்சேவையில் ஆர்வம் செலுத்தி, உடல் உழைப்பு, நேரம். மற்றும் பொருள் ஆகியவற்றை வழங்குவதும் - அதற்கு ஒரு முன் மாதிரியாக செயல்படுவதும் ஒரு சிறப்பான செயலாகும். இதற்கான கூலியை இறைவன் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அதிகமாக வழங்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் நிச்சயம் அப்பாடா என்று இருக்க மாட்டீர்கள். சேவைக்கான பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து வரும். அவை உங்களுக்கு போதுமான ஊக்கமாக அமையும். அதே வேளையில் உடல் நலத்தில் போதிய அக்கறையும், இடையிடையே தேவையான அளவு ஓய்வையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான உடல் நலத்தையும், நிம்மதியையும் சந்தோஷத்தையும், குறைவின்றி வழங்குவானாக!. ஆமீன், ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross