இன்னாலில்லாஹி... posted byS,K.Salih (Kayalpatnam)[15 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40603
மர்ஹூமா அவர்களை ஓரிரு தருணங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
புகாரி ஷரீஃபிற்கு பயானிற்காகச் சென்றபோது இவர்களது மறைவுச் செய்தி என் காதில் விழவே, துடித்துப் போனேன்...
பிள்ளைகளோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்கின்றனரே... ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் மாமா அவர்கள் எப்படி இருக்கிறார்களோ... என்ற எனது கவலையே அதற்குக் காரணம்.
“எத்தனையோ பேருக்கு மன வலிமையுடன் இருக்க உபதேசம் செய்தவர்கள்... நிச்சயமாக தைரியமாகத்தான் இருப்பார்கள்...” என்று எண்ணியவாறே - மஜ்லிஸிற்குச் செல்லும் வழியில் அவர்கள் இல்லம் சென்றேன்.
பார்த்தால், அங்கே அவர்கள் பச்சைக் குழந்தை போல் கதறியழுது கொண்டிருந்தார்கள்... சிறிது ஆறுதல் மொழிகள் கூறினேன்... “எங்களுக்குப் பொறுமை கற்றுத் தந்தவர்கள் அல்லவா நீங்கள்...? இப்டி சின்னப் பிள்ளை மாதிரி அழறீங்களே...” என்றேன். சொல்லச் சொல்ல அவர்கள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை. (பட்டவர்களுக்குத்தானே தெரியும் அதன் வலி!)
மஜ்லிஸ் முடிவதற்குள் ஜனாஸா அறிவிப்பை அங்கு அறிவிக்க வேண்டுமே என்று கருதி, அவர்கள் மறுத்த நிலையிலும், அறிவிப்பை எழுதி, மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஒப்புதலைப் பெற்று, மஜ்லிஸிலும் அறிவித்தேன்.
மீண்டும் இல்லம் வந்து மாமா அருகிலேயே சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறுதலுக்காக அமர்ந்திருந்தேன்.
அவர்களின் குணத்தை நன்குணர்ந்த என்னைப் போன்ற சிலர் அவர்களது அருகாமையை அதிகம் விரும்புவோம். (நேரம்தான் இடம் கொடுக்க வேண்டும்!) நிறைய தகவல்கள், மார்க்க சட்டதிட்டங்கள் அவர்களுடன் உரையாடுகையில் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
என்றாவது சந்திக்கும் எனக்கே இப்படி என்றால், அவர்களோடு என்றும் துணையாயிருந்த அவர்களின் மனைவியாருக்கும், அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் எத்தனை விஷயங்கள் கிடைத்திருக்கும்?
“உம்றாவுக்குப் போகவான்னு கேட்டா... அவளது உடல் நிலையை யோசித்து அனுப்பத் தயங்கினேன்... பிற்பாடு, அங்குள்ள ஜம்ஜம் நீரை ஆசை தீரப் பருகி, தான் விரும்பிய அப்புனித இடங்களை கண்ணாரக் கண்டு வந்தாலே இதயம் குளிர்ந்து, உடல் நிலையும் நன்கு தேறும்” என்றுதான் நான் அனுப்பி வைத்தேன்... அங்கிருந்து அவள் ஃபோனில் பேசியபோது கூட - ஜம்ஜம் நீரை நல்லா குடி! அங்கும் போயி மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்காதே... என்றெல்லாம் கூறினேன்... இப்படி என்னை அநாதையாய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே...” என்று குலுங்கிக் குலுங்கி அழுதவாறு கண்ணீர் மல்க அவர்கள் கூறக்கூற, என் மனம் என்னிடம் இல்லை. நாம் கலங்கி, அவர்களது துக்கத்தைக் கூட்டி விடக்கூடாது என்று எண்ணி, ஒருவாறு என் நெஞ்சு வேதனையை மறைத்து இயல்பாகவே அவர்களோடு இருந்தேன்.
அவர்களின் வீடு சற்று விசாலமான பரப்பைக் கொண்டது என்பதால், மாமா அவர்கள் தன் அறையிலிருந்து குரல் கொடுத்தால் மனைவிக்கு விளங்காது என்று, இளைஞன் போல வாயில் இரு விரல்களை வைத்துக்கொண்டு விசிலடிப்பார்கள்... விசில் ஒலி கேட்டதும், “என்னங்க?” என்று அங்கிருந்து குரல் வரும். இப்படியான இவர்களின் தகவல் பரிமாற்றத்தை அவ்வப்போது பார்த்து ரசித்தவன் நான்.
ஒருவரையொருவர் நன்கு புரிந்து, நிறைவான வாழ்க்கை வாழ்வோரால் மட்டுமே இப்படியெல்லாம் நடந்துகொள்ளவியலும் என்று அந்நேரங்களில் என் மனம் சொல்லும். அது உண்மை என்பதை, மர்ஹூமா அவர்களின் மறைவு உணர்த்திவிட்டது.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய மாமா, என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தைக்கா உபைதுல்லாஹ் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
ஒன்றேயொன்று என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது...
பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படிக்க வைக்கிறோம்... அல்லாஹ் கிருபையால் அவர்களும் நல்ல நிலையில், பல நாடுகளில் பணி செய்தோ, வணிகம் செய்தோ பொருளீட்டி, தம் குடும்பத்தினரைக் காத்து வருவதோடு, நம் சமுதாயத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
என்றாலும், விடவும் முடியாமல் - வேறு வழியும் தெரியாமல் புலி வாலைப் பிடித்த கதை போல, இதுபோன்ற தருணங்களில் - ஜனாஸாவைக் கூட பார்க்க இயலாத நிலை பெரும்பாலான வெளிநாட்டு மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறதே... இதற்கு என்னதான் தீர்வு...???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross