நாம் இறைவனுக்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.
அந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ.. அங்கேயே சென்று சேர்ந்தது..!
முகநூலில் நீண்ட காலமாக அவரின் நட்பு வட்டத்தில் நான் உணர்ந்த வரை, நறுக்கு தெறித்தாற்போல பதிவிடுவதில் வல்லவர். அவை சுருக்கமான வரிகளில் ஏராளமான பொருட்செறிவு பொதிந்திருக்கும். மிகச் சிறந்த அறிவுநுட்பம் அதில் மிளிர்ந்து நிற்கும்.
அவரின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து நான் அறிந்த வரை, இஸ்லாத்தின் நற்செய்தியை அழைப்புப் பணியாக அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் அண்ணலாரின் வழிமுறையையை பின்பற்றியவர். அதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறைகளும், அக்கறையும் எனக்கு இந்த சம்பவத்தை நினைவுறுத்திக் கொண்டேயிருக்கும்.
ஒரு பிற்பகல் நேரம். மக்காப் பெரு நகர வீதிகளில் அண்ணல் நபிகளார் தஃவாப் பணி செய்து, களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். வாடிய முகம். தளர்ந்த நடை. தூசி படர்ந்த உடை. பசி மயக்கத்தால் இருண்ட கண்கள்.
தமது ஆருயிர் துணைவரின் நிலையைக் கண்டு பதறியவர்களாக அன்னை கதீஜா அம்மையார் ஆறுதலாய் வரவேற்று, அமர வைத்து அருஞ்சுவை உணவு படைக்கிறார்கள்.
ஒரு கவளம் உணவை உண்ண வாயருகே கொண்டு செல்லும்போது, வெளியில் ஒட்டகக் கூட்டமொன்று கடந்து செல்லும் ஓசை கேட்கிறது.
அண்ணலின் வாடிய முகத்தில் புத்துணர்வு. எங்கிருந்து வந்ததோ உடலில் புது தெம்பு. உண்ணுவதற்கு எடுத்த அந்த ஒரு கவளம் உணவை தட்டிலேயே வைத்துவிட்டு விருட்டென்று எழுகிறார்கள்.
அன்னை கதீஜா அவர்களின் முகத்தில் வியப்பு. அடுத்த கணம் நபிகளாரின் சொற்கள் வியப்பை போக்கி விடுகின்றன.
ஹிரா மலைக்குன்றில் உலக மக்களை உய்விக்க தோள்களில் சுமந்துவந்த அரும்பணியாயிற்றே! மறக்க முடியுமா அந்த அம்மையாரால்!
ஸபா.. மர்வா மலைக்குன்றுகளில் பட்டு எதிரொலித்த குரலாயிற்றே அது..! மக்கத்து தெருதோறும் முழங்கிய முழக்கமல்லவா! சந்தைகளில் முகாமிடும் முக்கிய பிரமுகர்களை எல்லாம் சிந்திக்க வைத்த அதே சிந்தனையை அம்மையாரால் எப்படி மறக்க முடியும்?
புரிந்து விடுகிறது கதீஜா அம்மையாருக்கு!
இறைவனின் நற்செய்தியைச் சுமந்து செல்வது இறைவனின் திருத்தூதராயினும் தன் அருமைக் கணவரல்லவா? பெண்மையுள் பொதிந்திருக்கும் அந்தப் பாசத்தை வார்த்தைகளில் குழைத்தெடுத்து சொல்கிறார் இப்படி...
”அண்ணலே! ஒரு கவளம் உண்டுவிட்டு செல்லலாமே?”
”என்ன சொன்னீர் கதீஜா? நான் உணவு உண்டு செல்வதற்குள் இந்த பயணிகளின் கூட்டம் மக்காவிலிருந்து சென்றுவிட்டால்... இறைவனின் தூதுச்செய்தியைச் சமர்பிக்கும் ஒரு வாய்பு்பை நழுவ விடுவேனில்லையா?”
இந்த வரலாறு சகோதரர் செங்கிஸ்கானின் அழைப்பியல் முறைமைகளில் வெளிப்பட்டதைக் கண்டு வியந்ததாக அவருடன் அண்மித்து, அழைப்புப் பணியில் ஒன்றாகப் பயணித்த தாயீக்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.
சர்வ வல்லமைமிக்க அல்லாஹ் தஆலா, இவரின் பணிகளை ஏற்றுக் கொண்டு, தனது ரிழா என்னும் திருப்பொருத்தத்திற்கு உரியவராக்கி, அன்பு நபிகளாரின் சிபாரிசைப் பெறும் நற்பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
இவரின் மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி, கப்ரின் அதாபிலிருந்தும் இடுக்கத்திலிருந்தும் பாதுகாத்து
கப்ரில் வெளிச்சத்தையும், விசாலத்தையும் தந்தருள்வானாக.!!
அவரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சுவனப்பதியில்
நுழையச் செய்வானாக!!
அவரின் மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!
அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு அல்லாஹ் தஆலா "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக,
ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross