பாசத்திற்குரிய தோழப்பா! posted byS.K.Salih (Kayalpatnam)[15 January 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 42856
என் தந்தையின் - எஞ்சியிருக்கும் மிக நெருக்கமான தோழர்களுள் ஒருவர்... என் பாசத்திற்குரிய தோழப்பா... என் மீதும், என் குடும்பத்தின் மீதும் தீராத அக்கறை கொண்டவர்...
என்றென்றும் வேடிக்கையாகவே பேசிப் பழக்கப்பட்டவர்... அவர் இருக்குமிடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது...
கள்ளங்கபடமற்றவர்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்ற சிந்தனையை தன் நிறைவு நாள் வரை கொண்டிருந்தவர்...
அவர் சார்ந்த ஒரு நிறுவனத்திலிருந்து நான் விடைபெற்ற பிறகு, “கொளத்தோட கோவிச்சிக்கிட்டு ...னாவ கழுவாம போயிட்டியே...?” என்று வேடிக்கையாகச் சொல்ல, அதற்கு நான் என் பாணியில் விளக்கம் சொல்ல - தானும் சிரித்து, என்னையும் சிரிக்கச் செய்தவர்.
“ம்... சொல்ல முடியாதுப்பா... (என்றவர் ஏதோ நினைவுக்கு வந்தவராக) முட்டப்பயலே! போறதே பெருநாளுக்காகத்தானே... பைத்தியமா ஒனக்கு முட்டாப்பய?”
இப்படி சென்றது எங்கள் உரையாடல்!
ஒருமுறை அவர்கள் உள்ஹிய்யாவுக்காக மாடு கொள்முதல் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், என் மூத்த நண்பர்கள் சிலரது “வேண்டுகோளுக்கு” இணங்க, அவருக்கு அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அவர்களின் கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, செத்துப்போன ஒரு மாடு குறித்து, மாட்டு விற்பனையாளர் போலவே பேசினேன்... அவரும் நம்பி என்னிடம் பேச, சீரியஸாக அவர்களிடம் வாக்குவாதமும் செய்தேன்... (அது ஒரு நீண்ட கதை!)
லுஹ்ர் ஜமாஅத் நேரத்தில் என்னிடம் வந்து, “மக்கா! அந்த மாட்டுக்காரப் பய என்கிட்ட கூடக்கொறைய பேசுனான்... நல்...லா குடு குடுன்னு குடுத்துட்டேன்...”
“(நல்லவன் போல) ஏன் மாமா... என்னெ கூப்பிட மாட்டீங்களா...? என் பங்குக்கு நானும் கிழி கிழின்னு கிழிச்சிருப்பேனே...?”
“சரி வுடுப்பா... போயிட்டுப் போறான்...”
என்று கூறிச் சென்றுவிட்டார்.
அதுவரை என்னுடன் இருந்து சிரித்துக் கொண்டிருந்த மூத்த நண்பர்கள் சிலர், இஷாவுக்குள் அவரிடம் உண்மையைப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.
“(சிரித்துக்கொண்டே வந்தவர்...) பைத்தியகாரப் பயலே! செய்றதையும் செஞ்சிட்டு, நல்லவன் மாதிரி பேசுறியோ...?
என்று தனக்கே உரிய பாணியில் கேட்க, நான் அவர்களிடம் சிரித்துக்கொண்டே மன்னிப்புக் கேட்டேன்.
மைத்ரிபால சிரிசேனவுக்குக் கூட விளங்க இயலாத சிங்களத்தில் நான் மாமாவிடம் பேச, ஒரிஜினல் சிங்களத்தில் அவர்கள் அதை மறுதலிக்க, மொழியறிந்தோர் அதைப் பார்த்து சிரிக்க, நான் ரசிக்க... -இவையெல்லாம் சில நாட்களுக்கு முன்பு வரை தொடராக நடந்த கதைகள்!
இவற்றையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம், வயது வேறுபாடின்றி எல்லோரோடும் இணக்கமாகப் பழகியவர் என்பதால்!
அவர்களைப் பார்த்தாலே என் தந்தை என் நினைவுக்கு வந்து செல்வார்... அவர்களின் பேச்சிலும் என் தந்தை குறித்த தகவல்கள் இடம்பெறாமல் இருக்காது...
உளத்தூய்மையான - நேர்மையான - இறையச்சம் கொண்ட தனது தன்னிகரற்ற பணியால் அனைவரையும் கவர்ந்தவர்...
பல்வேறு காரணங்களால் வாக்குவாதங்களில் ஈடுபடுவோரைக் கூட தன் இனிய பண்பால் சில நிமிடங்களில் அமைதிப்படுத்தி விடுவார்...
எழுதினால் நிறை....ய எழுதிக்கொண்டே போகலாம்!
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க எனதன்பு மக்கி மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
எனதன்பு தோழப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார், அவர் சார்ந்த நிர்வாகத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross