தொலைத்தும் தொலைந்தும் தொலைதூரம் போய் கொண்டிருக்கின்றோம்... posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[06 April 2016] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 43441
நவீன உலகத்தில் நம்மை நாமே தொலைத்து இணக்கத்தையும், நெருக்கத்தையும் இழந்து நாசமாய் போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதை நெற்றிப் பொட்டில் நச்சென்று அடித்தாற் போல நறுக்கென்று சொல்லியிருக்கின்றார் கட்டுரை ஆசிரியர்...!
முகநூல் வாட்ஸ்அப் போன்றவற்றில் நாம் மூழ்கி அருகில் இருக்கும் உறவுகளைப் பேணாமல் முகம் தெரியாத யாருக்காகவோ எதுக்காகவோ நம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். அதையும் மீறி நாம் நெருங்க நினைத்தால் ஒருவகை எரிச்சலும், கோமும்தான் வருகின்றது.
எனது நண்பர் சாலிஹ் வீட்டிற்கு இணையதள செய்தி மற்றும் கட்டுரை விஷயமாக நான் அடிக்கடி செல்வதுண்டு. அங்கு செல்லும் போதெல்லாம் நல்ல பல படிப்பினைகள் எனக்கு கிடைக்கும். உண்ணும் உணவு முதல் உறவுகளைப் பேணுவது, இல்லற உக்திகள், பிள்ளை வளர்ப்பு, எளிமையான வாழ்க்கை, கடைபிடிக்க வேண்டிய நேரத்தின் அவசியம், இப்படித்தான் வாழ வேண்டும் எனும் மனஉறுதி என ஏராளமான விஷயஙகளை நான் அவரிடம் கற்றதுண்டு. அவரைப் போல் நம்மால் வாழ முடியுமா என அதிசயத்த தருணங்களும் உண்டு.
தம் பிள்ளைகளை அவர் பெயர் சொல்லி வா போ என்று அழைத்ததே கிடையாது. உம்மா ஏன்மா இப்படி செய்றீங்க...வாங்கம்மா போங்கம்மா என்று பிள்ளைகளிடம் பேசுவதில் ஒருவித கண்ணியத்தைப் பேணுவார். அதிகமான வேலைப்பளு, இயைதள செய்தி, நிருபர் பணி, பொது காரியங்கள் இப்படி எப்போதும் ஓய்வு ஔிவில்லாத பிஸியில்கூட பிள்ளைகளின் கேள்விக்கு நிதானமாக பதில் கொடுப்பார்.
ஒருமுறை மிக அதிகமான வேலை, சில பணிகளை முடித்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம். அவர் வீட்டு குட்டி வரவேற்பறையில் கதவை தாழிட்டு பணியில் மும்முரமாக இருந்து கொண்டிருந்தோம். அவரது இரண்டரை வயது இளைய மகள் வாப்பா வாப்பா என அழுது கொண்டு கதவைத் தட்டுகிறாள். இவரோ கடும் வேகத்தில் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தார். நான்கு கைகள் இருந்தால் அந்த நான்கிற்கும் பதினாறு வேலைகளைக் கொடுத்திருப்பார். பிள்ளையின் அழுகுரல் கேட்டு கதவைத் திறக்கின்றார். இரு கரம் நீட்டிக் கொண்டு அந்த மழலை இவரது மார்பில் தஞ்சமடைகிறது. அத்தனை வேலைகளையும் அப்படியே ஓரங்கட்டி விட்டு பிள்ளையை நெஞ்சோடு அணைத்தபடி முதுகில் தட்டிக்கொடுத்து கொஞ்சுகிறார். அதுவும் தக்கா பிக்கா என்று மழலை மொழியில் ஏதோ பேசுகிறது. அந்த மொழி அவருக்கு நன்றாகப் புரிகிறது. பதில் கொடுத்து உரையாடுகிறார்.
இப்படியே சுமார் பத்து நிமிடங்கள் மழலை அதுவாக கீழிறங்கும் வரை அணைத்துக் கொண்டே இருந்தார். மேசையில் இருந்த முக்கியமான பேப்பர்களை குழந்தை கேட்டது, பேனாவை எடுத்தது, கம்ப்யூட்டர் கீ போர்டை காலால் மிதித்தது இவர் எரிச்சல் அயைவில்லை! மாறாக அது கேட்டையெல்லாம் கொடுத்தார். பிறகு அது கீழே இறங்க கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லி உம்மாவிடம் போங்க என அனுப்பி வைத்துவிட்டு, தாம் விட்ட வேலையைத் தொடர்ந்தார். இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை தரவே, எப்படி இவ்வளவு பிஸியிலும் பொறுமையாக பிள்ளைகளைக் கையாளுகின்றீர் என நான் வினவ,
இந்த வேலைகலெல்லாம் என் கால்தூசுக்கு சமம்! இது எனக்கு நிரந்தரம் கிடையாது. ஆவலோடு ஆதரவு தேடி வரும் என் பிள்ளையை நான் இப்போது உதாசீனப்படுத்தினால் அதன் உள்ளத்தில் வெறுப்பும் ஏமாற்றமும் அழமாகப் பதிந்துவிடும். நாளடைவில் அதுவே வேர் விட்டு விருடச்சமாக வளர்ந்துவிடும். அப்போது எனக்கு அது நிழல் தராது என்று சாதாரணமாக அழுத்தமான ஒரு தத்துவத்தைக் கூறி விட்டு வேலையில் மூழ்கி விட்டார். அவரிடம் நான் கற்ற நூற்றுக் கணக்கான பாடங்களில் இது வெறுமொரு அரிச்சுவடி மட்டுமே...
இந்த கட்டுரையின் வாயிலாக நான் அதை உணர்கிறேன். அருமையான அவசியமான காலத்திற்கேற்ற கட்டுரை!
பிள்ளைகளின் அன்பு என்பது இருப்பவனை விட இழந்தவனுக்குத்தான் அதிகம் தெரியம். அல்லாஹ் நம் அனைரையும் பாதுகாப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross