பேரதிர்ச்சி!!! posted byS.K.Salih (Kayalpatnam)[14 May 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43748
அதிகாலையில் விழித்தெழுந்ததும் இந்த அதிர்ச்சியான தகவல் கிடைக்கப்பெற்று மிகவும் அவதியுற்றேன்.
“யா அல்லாஹ் நான் கேள்விப்பட்ட இத்தகவல் பொய்யாக இருந்து விடட்டுமே...” என்று ஏங்கியவாறே, செய்தி வெளியிடுவதற்காக, மர்ஹூம் உடைய மாமா நேஷனல் காஜா காக்காவிடம் விசாரித்தபோது, துக்கம் நிறைந்த குரலுடன் தகவலை உறுதிப்படுத்தினார் அவர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கடையநல்லூரில், நான் சார்ந்துள்ள தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நம் மண்ணின் மைந்தர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை செய்வதற்காக “கவிமகன்” காதர் & நண்பர்கள் குழுவினருடன் அங்கு சென்று இறங்கியபோது என்னை வரவேற்ற முதல் நபர் நண்பன் இஸ்மாஈல்தான்!
அத்தனை வேலைப்பளுவிற்கிடையிலும், தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி அவரும் பரப்புரைக்காக வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... (இன்னும் இரண்டு நாட்கள்தான் இவன் நம்மோடு இருக்கப் போகிறான் என்பதையறியாமலேயே...!)
அதன் பிறகு நடந்ததெல்லாம் அதிர்ச்சிக்கு மேல் பேரதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
திருப்திகரமான பொருளாதார நிலையில் என் நண்பன் இருந்தபோதிலும், ஒருபோதும் தன்னிடம் பகட்டை வெளிப்படுத்தியதில்லை. ஏழை - செல்வந்தர் அனைவரிடமும் ஒரே முகத்துடன் பழகியவர். நடிக்கத் தெரியாதவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். உள்ளதை உள்ளபடி உரைப்பவர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை வலுவாகக் கொண்டவர்.
கடையநல்லூரிலிருந்து ஊருக்கு வரவிருந்த நிலையில், நாகர்கோவில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள தன் உறவினருக்கு குருதி தேவைப்படுவது அறிந்து, உடனடியாகக் கிளம்பிச் சென்று, குருதியும் கொடுத்து, திரும்பி வரும் வழியில் இந்நிகழ்வு நடந்திருக்கிறது...
ஆக, தன் வாழ்வின் கடைசிப் பகுதியையும் பிறர் நலனுக்காகச் செலவழித்து, ஷஹீத் எனும் நிலையில் தன்னை இவ்வுலகை விட்டும் மறைத்துக்கொண்டார்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
விபத்தில் காலமான இவருக்கு, ஷஹீதுக்குரிய நற்கூலிகள் அனைத்தையும் - குறிப்பாக, கேள்வி கணக்கின்றி சுவனம் நுழையும் நற்பாக்கியத்தை கருணையுள்ள அல்லாஹ் என் ஆருயிர் நண்பனுக்கு வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவரது தந்தை என் பாசத்திற்குரிய - மரியாதைக்குரிய பாளையம் ஹபீப் காக்கா, சிறிய தந்தையரான எனது உஸ்தாத் பாளையம் ஹஸன் சார், பாளையம் செய்மீன் காக்கா, என் நண்பனின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross